உலகச் சமயங்களின் பாராளுமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிக்காகோ கூட்டம், 1893

உலகச் சமயங்களின் பாராளுமன்றம் என்ற பெயரில் பல கூட்டங்கள் நடை பெற்றுள்ளன. இவற்றுள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, 1893 இல் சிக்காகோவில் இடம்பெற்ற கூட்டம் ஆகும். உலக மத நம்பிக்கைகளிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான முதல் முயற்சி இதுவாகும். இந்த நிகழ்வு, அதன் நூற்றாண்டு நிறைவான 1993 ஆம் ஆண்டில் இன்னொரு உலக சமயங்களின் பாராளுமன்றம் என்னும் பெயர் தாங்கிய கூட்டம் ஒன்றால் நினைவு கூரப்பட்டது. இது, உலக சமயங்களின் பாராளுமன்றம் என்னும் பெயரில் தொடர் கூட்டங்கள் நடப்பதற்கு வித்திட்டது.

1893 இன் பாராளுமன்றம்[தொகு]

1893 ஆம் ஆண்டில், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400 ஆவது ஆண்டைக் கொண்டாடுமுகமாக சிக்காகோவில், உலக கொலம்பியக் கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்காக உலகெங்கிலும் இருந்து பலர் சிக்காகோவுக்கு வந்தனர். முன்னெப்போது இல்லாத அளவுக்கு இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலைப் பயன்படுத்திக் கொண்டு, மகாநாடுகள், பாராளுமன்றங்கள் என்னும் பெயர்களில் பல கருத்தரங்குகளும் இடம்பெற்றன. இவற்றுள் ஒன்றுதான் உலக சமயங்களின் பாராளுமன்றம்.

செப்டெம்பர் 11 தொடக்கம் செப்டெம்பர் 27 வரை இடம்பெற்ற 1893 ஆம் ஆண்டுப் பாராளுமன்றமே கிழக்கையும், மேற்கையும் சேர்ந்த ஆன்மீக மரபுகளின் பேராளர்கள் ஒன்றுகூடிய முறைப்படியான முதல் நிகழ்வு ஆகும். உலகம் தழுவிய மதங்களிடையேயான முறையான கருத்தாடல்களின் தொடக்கம் என இந் நிகழ்வு இன்று போற்றப்படுகிறது.

தாயக அமெரிக்கச் சமயங்கள், சீக்கியம், வேறு சில உள்ளூர்ச் சமயங்களும், புவி மையச் சமயவாதிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 1993 ஆம் ஆண்டுக் கூட்டத்திலேயே இவை முதன் முதலாகக் கலந்து கொண்டன. அக்காலத்தில் புதிய இயக்கங்களாக இருந்த ஆன்மீகவாதம் (Spiritualism), கிறிஸ்தவ அறிவியல் (Christian Science) ஆகிய சமயங்கள் இக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தன. கிறிஸ்தவ அறிவியலின் நிறுவனரான மேரி பேக்கர் எடி என்பவரும் பேராளராக வந்திருந்தார். ஐரோப்பாவில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தாலும், இக் கூட்டத்தில் பேசப்பட்டதில் இருந்தே பஹாய் சமயம் அமெரிக்காவில் அறிமுகமானது. இலங்கையைச் சேர்ந்த அனகாரிக தர்மபால தேரவாத பௌத்தத்தின் பேராளராகவும், சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தின் பேராளராகவும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வெளியிணைப்புகள்[தொகு]

ParliamentofReligions.org