திருத்தந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உரோமை ஆயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உரோமை ஆயர்
ஆயர்
கத்தோலிக்கம்
பதவியில் இருப்பவர்:
பிரான்சிசு
13 மார்ச் 2013 முதல்
மறைமாவட்டம்உரோமை
மறைமாவட்டப் பேராலயம்இலாத்தரன் யோவான் பேராலயம்
பதவி வகித்த
முதலாமவர்
மரபுப்படி பேதுரு (திருத்தூதர்)
நிறுவப்பட்டது1ஆம் நூற்றாண்டு
இணையதளம்திருத்தந்தை (ஆங்கில மொழியில்)
திருத்தந்தையின் ஆட்சிச் சின்னம்

திருத்தந்தை, பாப்பிறை, பாப்பரசர் அல்லது போப்பாண்டவர் (Pope) என்பது கத்தோலிக்க திருச்சபையின் இவ்வுலகத் தலைவரைக் குறிக்கும் பெயர் ஆகும். கிரேக்கத்தில் πάππας (Pappas) என்றும் இலத்தீனில் Papa என்றும் வழங்கும் சொல் "தந்தை" என்று பொருள்படும். இவர் உரோமையின் ஆயர், உரோமைத் தலைமைக்குரு, புனித பேதுருவின் வழிவந்தவர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இயேசு கிறித்துவின் முதன்மைச் சீடராய் விளங்கிய தூய பேதுரு உரோமையில் கிறித்தவ சமயத்திற்கு வித்திட்டு, அங்கு உயிர்துறந்தார் என்னும் வரலாற்றுச் செய்தியின் அடிப்படையில் இப்பெயர் வழக்கு எழுந்தது.

திருத்தந்தையின் பணிப்பொறுப்பு Papacy என அழைக்கப்படுகிறது. திருச்சபை மீது அவருக்குள்ள ஆட்சிப் பொறுப்பு திருப்பீடம் (Holy See) அல்லது திருத்தூதுப் பீடம் (Apostolic See) என அழைக்கப்படுகிறது. முதல் திருத்தந்தையர் பேதுருவின் பதிலாள்(Vicar of Peter) என அழைக்கப்பட்டு வந்தனர். கால வழக்கில் கிறித்துவின் பதிலாள் (Vicar of Christ) என்னும் பெயரையும் பெற்றனர்.

திருத்தந்தை என்ற பதத்துக்கு முன்னர் உரோமை ஆயர் என்ற பதமே பயன்பாட்டிலிருந்தது. 296-304 வரை உரோமை ஆயராக இருந்த மார்சலின் (Marcellinus) திருத்தந்தை என்ற பெயரை தனக்கு முதன்முதலாக பயன்படுத்தினார்.

புனித பேதுருவிலிருந்து தொடங்கிய திருத்தந்தையர் வரிசையில் இன்று பணிப்பொறுப்பில் உள்ள திருத்தந்தை பிரான்சிசு 266ஆம் திருத்தந்தை ஆவார்.

இறையியல் பார்வையில் திருத்தந்தையின் பணி[தொகு]

கத்தோலிக்க திருச்சபை திருத்தந்தையின் பணியைத் தூய பேதுரு என்னும் திருத்தூதரின் பணியின் தொடர்ச்சியாகக் கருதுகிறது. இயேசு பன்னிரு சீடர்களைத் தெரிவுசெய்து, அவர்களுக்குத் தலைவராக பேதுருவை நியமித்தார் என்றும், பேதுருவுக்குத் திருச்சபையில் தலைமையிடம் அளித்தார் என்றும் நற்செய்தி நூல்கள் கூறுகின்றன (காண்க: குறிப்பாக, மத் 16:13:20). திருத்தூதர்களின் வாரிசாக ஆயர்களும் பேதுருவின் வாரிசாக திருத்தந்தையும் உள்ளனர் என்பது கத்தோலிக்க திருச்சபையின் கொள்கை. எனவே திருத்தந்தை உரோமையின் ஆயர் மட்டுமல்ல, அனைத்துலகத் திருச்சபைக்கும் அவர் தலைவர் ஆவார். இயேசு கிறித்துவின் பெயரால் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கும் ஆயர் குழுவுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்கர் அல்லாத பிற மரபு வழி திருச்சபையினர் திருத்தந்தையின் முதன்மைப் பணியை ஏற்றுக்கொண்டாலும், திருச்சபை முழுவதற்கும் அவருக்கு ஆட்சி அதிகாரம் உண்டு என்பதைக் ஏற்பதில்லை.

வரலாற்றில் திருத்தந்தையர்[தொகு]

இன்று 266ஆம் திருத்தந்தையாகப் பணிபுரியும் திருத்தந்தை பிரான்சிசு பேதுருவின் வாரிசு என்னும் போது முதல் நூற்றாண்டில் நிலவிய திருச்சபையின் தலைமை அதே முறையில் இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவந்துள்ளது என்று பொருளாகாது. திருத்தந்தையின் பணி, வரலாற்றில் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.

திருத்தந்தையர் வரலாற்றைப் பொதுவாக உரோமைப் பேரரசுக் காலம், நடுக்காலம், தொடக்க நவீன மற்றும் நவீன காலம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுப்பர். அவற்றினுள்ளே கிளைப் பிரிவுகளும் பல உண்டு. ஒவ்வொரு கால கட்டத்திலும் திருத்தந்தையின் பணிமுறையில் வேறுபாடுகள் துலங்கியதைக் காணலாம்.

திருத்தந்தையர் பணி நிகழ்ந்த வரலாற்றுக் காலம் நிகழ்வுகளும் பணிமுறைகளும்
உரோமைப் பேரரசுக் காலம் (திருச்சபையின் தொடக்க முதல் 493 வரை)
  1. தொடக்க காலம் (சுமார் 30 முதல் 312 வரை)
  2. கான்ஸ்டண்டைன் முதல் (312-493)
புனித பேதுரு முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். திருத்தூதர் நடுவே பேதுரு முதலிடம் வகித்ததுபோல, உரோமை ஆயர் பிற ஆயர் நடுவே முதலிடம் வகிக்கிறார். பேதுரு உரோமையில் நற்செய்தி அறிவித்து, நீரோ மன்னன் காலத்தில் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். தொடக்க காலத் திருத்தந்தையர் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. உரோமைப் பேரரசு கிறித்தவத்தை எதிர்த்தது. எருசலேம், அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா போன்ற நகரங்களில் கிறித்தவ சமூகங்கள் உருவாகி இருந்தாலும், உரோமை சபை முதன்மை வாய்ந்ததாக கிறித்தவத்தின் தொடக்கத்திலிருந்தே கருதப்பட்டது.


கான்ஸ்டண்டைன் மன்னர் கிறித்தவர்களுக்கு ஆதரவு அளித்தார். 313இல் மிலான் சாசனம் வெளியிட்டு, கிறித்தவ சமயம் பேரரசு முழுவதும் பரவ வழிசெய்தார். இலாத்தரன் குன்றில் தூய யோவான் பெருங்கோவிலையும், வத்திக்கான் குன்றில் தூய பேதுரு பெருங்கோவிலையும் கான்ஸ்டண்டைன் கட்டியெழுப்பினார். திருத்தந்தையருக்குத் திருச்சபை பெயரால் உடைமைகள் கிடைக்கலாயின.

நடுக்காலம் (493-1417)
  1. கிழக்கு கோத்திய காலம் (493-537)
  2. பிசான்சிய காலம் (537-752)
  3. ஃபிராங்கிய காலம் (756-857)
  4. உரோமைக் குடும்பங்களின் தாக்கம் (904-1048)
  5. கீழைப் பேரரசோடு மோதல் (1048-1257)
  6. இடம்பெயர் காலம் (1257-1309)
  7. அவிஞ்ஞோன் காலம் (1309-1377)
  8. மேற்கு திருச்சபை பிளவுக் காலம் (1378-1417)
மேற்கு உரோமைப் பேரரசு 493இல் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து கிழக்கு கோத்திய மன்னர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அவர்கள் திருத்தந்தையரை நியமிப்பதில் தலையிட்டனர். குறிப்பாக மன்னன் தியோடோரிக்கின் தலையீடு அதிகமாக இருந்தது. சமயக் கொள்கைகளில் குறுக்கிடாவிட்டாலும் அரசியல் பாணியில் அரசர்கள் திருச்சபைக் காரியங்களில் தலையிட்டார்கள். இதனால் ஒரே சமயத்தில் இரு திருத்தந்தையர் இருந்த நிலையும் எழுந்தது. 537இல் கிழக்கு உரோமைப் பேரரசன் ஜஸ்டீனியன் உரோமை நகரைப் பிடித்ததிலிருந்து திருத்தந்தையை நியமிப்பதில் தலையிட்டார். கிரேக்க கலாச்சாரம் மேற்கு சபையில் பரவத் தொடங்கியது. அக்காலத் திருத்தந்தையரும் கிரேக்க ஆதிக்கத்தின் கீழ் இருந்த இடங்களிலிருந்து வந்தார்கள். திருத்தந்தை முதலாம் கிரகோரி (590-604) திருத்தந்தையின் அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றார். இங்கிலாந்தில் கிறித்தவம் பரவ வழிவகுத்தார்.
நவீன காலத் தொடக்கமும் நவீன காலமும் (1417-இன்று வரை)
  1. மறுமலர்ச்சிக் காலம் (1417-1534)
  2. புராட்டஸ்டாண்டு சீர்திருத்தமும் கத்தோலிக்க சீர்திருத்தமும் (1517-1585)
  3. அலங்கார ("பரோக்கு") காலம் (1585-1689)
  4. புரட்சிக் காலம் (1775-1848)
  5. உரோமை நகர் வரையறுக் காலம் (1870-1929)
  6. வத்திக்கான் நகர் உருவான காலம் (1929)
  7. இரண்டாம் உலகப் போர்க்காலம் (1935-1945)
  8. இரண்டாம் வத்திக்கான் சங்கமும் இன்றைய காலமும் (1962-1965 முதல் இன்றுவரை

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தந்தை&oldid=2764790" இலிருந்து மீள்விக்கப்பட்டது