உபயகதிர்காமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபயகதிர்காமம் ஸ்ரீ சக்கர சண்முகர் ஆலயம், தற்போதைய முகப்புத் தோற்றம்

இலங்கையில் பிரசித்தி பெற்ற சுயம்பு இந்துக் கோயில்களுள் உபயகதிர்காமம் ஸ்ரீ சக்கர சண்முகர் ஆலயம் முக்கியமானது.[1]

அமைவிடம்[தொகு]

இரண்டாம் கதிர்காமம் என்று போற்றப்படும் இவ்வாலயம் இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், புலோலி என்னுமிடத்திலுள்ளது. பருத்தித்துறை - யாழ் வீதியிலுள்ள மந்திகைச்சந்தியில் இருந்து, வல்லிபுர வீதியூடாக நடந்தால் இவ்வாலயத்தை அடையலாம். அருகில் 200 வருட வரலாறு கொண்ட பெரியதேவனத்தாய் விநாயகர் ஆலயம் உள்ளது.

பூசை[தொகு]

உபயகதிர்காமம் ஸ்ரீ சக்கர சண்முகர் ஆலய யந்திரம்

மூவேளை நித்திய பூசை நடைபெறும். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் இரவு திருக்கார்த்திகைக் கற்பூரத் திருவிழா, மற்றும் கதிர்காமத் தீர்த்தத்தை அடுத்ததாக திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தம் என்பன சிறப்புற நடைபெறும். முத்துலிங்க சுவாமிகளால் வரையப்பட்ட சுப்பிரமணியர் யந்திரமே கதிர்காமத்தின் அருட்பெருக்கிற்கு காரணம் என்பர். அவ்வாறே உபயகதிர்காம சக்கர யந்திரமும் போற்றப்படுகின்றது.

மூலவர்[தொகு]

வெண்கல் மலையில் சுயம்புவாகத் தோன்றிய சக்கர யந்திரமே மூலவராக அமைந்ததால் ஸ்ரீ சக்கர சண்முகர் ஆலயம் என்ற பெயரைப் பெற்றது. விநாயகர், சிவன் மற்றும் சக்தியரைக் குறிக்கும் எழுத்துகளும் சக்கர வலப்பாகத்து முனைகளை அடுத்து அமைந்துள்ளன. தலவிருட்சமாம் விளாமரத்தே விளாத்தீஸ்வரன் எனும் தெய்வம் 200 ஆண்டுகளாக சுயம்புவாக எழுந்தருளியுள்ளான். அதன் முன்னரும் இவ்விளாமரத்தின் தாய் மரத்தில் அவன் எழுந்தருளியிருந்ததாக கர்ண பரம்பரைக்கதைகள் கூறுகின்றன.

ஆலய வரலாறு[தொகு]

1909 ஆம் ஆண்டு, தமிழ்நாடு திருநெல்வேலி குகனருட்செல்வி ரீ.எஸ்.லோகாம்பாளின் கனவில் முருகன் இவ்வாலய யந்திர மகிமை உரைத்து இது பச்சிமப்புலவர்கானநகரில் விளாமரத்தடியிலுள்ள வெண்கல் மலையில் சுயம்புவாக உள்ளதாக உரைத்து அந்த யந்திர உருவை வரைந்து வந்து இல்லத்தே பூசிக்குமாறு அருளினார். பச்சிமப்புலவர்கானநகரம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளதென 1911 இல் கனவில் முருகன் மீண்டும் கூறி அருளினார்.

பச்சிமப்புலவர்கானநகரம் என்பது புலோலி என யாழ் பண்டிதர்கள் கூறி உதவ யந்திரம் உள்ள இடத்தை 11 நாளாக புலோலி மக்கள் உதவியுடன் தேடினார். வைகாசி விசாகத்தன்று இடத்தை அடைந்த அம்மையார் அந்த யந்திர உருவை வரைந்து சென்று இல்லத்தே பூசித்து வந்தார். அம்மையார் கனவில் முருகன் மீண்டும் 1924 இல் உரைத்தபடி ஜூலை 25, 1924 அன்று யந்திர மகிமையை புலோலி மக்கள் அறியுமாறு பிரசுரத்து ஆலயம் எழுப்பச் செய்தார். லோகாம்பாள் அம்மையார் செப்டம்பர் 20, 1970 இல் இறந்தார்.

முருகப்பெருமான் ஸ்ரீ சக்கர சண்முகராக உபயகதிர்காமத்தே தான்தோன்றியாக வீற்றிருந்து பக்தருக்கு அருளாட்சி புரிகின்றான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. உபய கதிர்காம ஆலயம். புலோலி தெற்கு, புலோலி. பிரசுரம்1. உபயகதிர்காம ஆலய புனருத்தாரண சபை.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உபயகதிர்காமம்&oldid=3669097" இலிருந்து மீள்விக்கப்பட்டது