சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உதியஞ்சேரலாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனப்படும் எய்யும் வில்
சங்ககாலச் சேரர் ஆட்சி
சேர மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சேரர்கள்
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கி.மு 1200 (?)
கடைச்சங்க காலச் சேரர்கள்
கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)
உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 71-129
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் கி.பி. 106-130
செங்குட்டுவன் கி.பி. 129-184
அந்துவஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை கி.பி. 123-148
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கி.பி. 130-167
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறை கி.பி. 165-180
குட்டுவன் கோதை கி.பி. 184-194
மாரிவெண்கோ காலம் தெரியவில்லை
சேரமான் வஞ்சன் காலம் தெரியவில்லை
மருதம் பாடிய இளங்கடுங்கோ காலம் தெரியவில்லை
சேரமான் கணைக்கால் இரும்பொறை காலம் தெரியவில்லை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை காலம் தெரியவில்லை
பிற்காலச் சேரர்கள்
சேரமான் பெருமாள் கி.பி. 8ஆம் நூற்றாண்டு
edit

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் சங்க காலச் சேர மன்னன். கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர்.[1] சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன.

ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார்.[2]

மேலும் பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும்பினும் மேலான சூழ்ச்சித் திறனும், காற்றினும் மேலான வலிமையும், தீயைக் காட்டிலும் மேலான அழிக்கும் ஆற்றலும், நீரைக் காட்டிலும் மேலான கொடைத்தன்மையும் இருந்தன எனவும் குறிப்பிடுகிறார். ஓரைவர் ஈரைம்பதின்மர் போரில் பெருஞ்சோறு அளித்த சேரன் பொறையன் மலையன் என்று இவனைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.[3]

காலம் [தொகு]

இவனது காலத்தை கணிப்பதில் வரலாற்றறிஞர்களிடம் மூன்று வேறுபட்ட கருத்துகள் உண்டு. அவை[4][5]

  1. சிலர் இவன் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை மகாபாரதத்தோடு தொடர்புபடுத்தி அந்த ஐவரும் நூற்றுவரும் பாண்டவ (5) கௌரவர்களே (100) எனக்கூறி இவனின் காலத்தை கி.மு. 3102 வரை எடுத்துச்செல்வர்.[5][4]
  2. வேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை சாதவாகனரோடு தொடர்ப்புபடுத்தி இவனின் காலத்தை கி.மு. 200க்கும் பிற்பட்டது தான் என கூறுவர்.[5][4]
  3. வேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனும், பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் உதியஞ்சேரலாதனும் வேறு எனக்கூறுவர்.[5][4]

அடிக்குறிப்பு [தொகு]

  1. சு. இரத்தினசாமி, சங்க கால அரசரக்ள் (கால வரைசைப்படி), மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, பதிப்பாண்டு 1995.
  2. அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
    நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
    ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
    பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் - புறநானூறு 2

  3. சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை
  4. 4.0 4.1 4.2 4.3 சங்ககால அரசர் வரலாறு. தஞ்சை-613005: தமிழ்ப் பல்கலைக்கழகம். 
  5. 5.0 5.1 5.2 5.3 Subodh Kapoor (1 July 2002). The Indian Encyclopaedia. Cosmo Publications. pp. 1449. ISBN 978-81-7755-257-7. http://books.google.com/books?id=72BjBPBRb6MC&pg=PA1449. Retrieved 5 October 2012.