ஈழத்து புலம்பெயர் இலக்கியம்
ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் உள்ளது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர் கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ் இலக்கியத்துக்கு ஊடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை: உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] சொற்பிரயோகம்
‘புலம்பெயர்வு’ என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப் பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு ‘புலம்பெயர் இலக்கியம்’ அல்லது ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் Diaspora Literature என குறிப்பிடுவர்.
[தொகு] ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள்
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; இங்கிலாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் கனடாவிலும், மற்றும்அவுஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய கணிப்பின்படி ஏறத்தாள ஆறு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இந்நாடுகளில் இருந்து ஈழத்தமிழர்கள் படைக்கும் படைப்புக்களே ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
[தொகு] கால வரையறை
இலங்கையிலிருந்து 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகின்றது. அக்காலத்தில் மலேசியா, அமெரிக்கா, இலண்டன் என தொழில் காரணமாக ஆங்கிலக் கல்வியினூடாக வந்தவர்கள் அதிகம் புலம்பெயர்ந்தனர். ஆனால் 80 களுக்குப் பின்னர் பெருமளவாக புலம்பெயர்ந்த தமிழர்களால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர் இலக்கியம் என்ற சொற்றொடருக்கு அர்த்தத்தை ஏற்படுத்தியதாகும்.
எனவே 1983 யூலை கலவரம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வே இங்கு முக்கியமானதாகும். இற்றைக்கு இரண்டு தசாப்தங்களைக் கடந்து விட்ட பின்னரும் தொடர்கின்ற இந்நிலை தமிழர்களின் வாழ்வின் மத்தியிலும் அவர்களின் இலக்கியப் படைப்புக்களின் மத்தியிலும் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றமை அனைவரும் அறிந்த ஒன்றே.
[தொகு] புலம்பெயர் படைப்புக்கள்
புலம்பெயர் படைப்புக்களில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாக பின்வருவனவும் நடந்தேறி வருகின்றன. அவற்றுள் நாடகம், சஞ்சிகை - பத்திரிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், ஒலி ஒளி செயற்பாடுகள், மற்றும் தமிழர் தம் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாசார செயற்பாடுகள் என்பன முக்கியமானவை.
[தொகு] கவிதை
புலம்பெயர் படைப்புக்களில் கவிதைகள் பற்றி நோக்கும்போது இதுவரை வெளிவந்துள்ள புலம்பெயர் படைப்புக்களுள் கவிதைத் தொகுப்புக்களே அதிகமானவையாகும். கவிதைகள் அவை பாடுகின்ற பொருட்பரப்பிலும் அவற்றின் புனைதிறன் உத்தியிலும் திருப்திப்படக்கூடிய அளவுக்கு புதிய வெளிச்சங்களைக் காட்டி நிற்கின்றன.
புலம்பெயர்ந்த காலத்தில் 80 களின் இறுதிவரை தாயக நினைவினையும் அவலத்தையும் பாடிக்கொண்டிருந்த அதிகமான கவிஞர்கள் தற்போது தாம் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டின் சூழலைப் புரிந்து கொண்டு அந்நாட்டின் வாழ்வனுபவங்களையும் பாடத்தொடங்கியுள்ளனர்.
இந்த வகையில் சேரன், வ.ஐ. ச ஜெயபாலன், செழியன், கி. பி அரவிந்தன, இளவாலை விஜயேந்திரன், திருமாவளவன், சக்கரவர்த்தி, நட்சத்திரன் செவ்விந்தியன், தா. பாலகணேசன், இளைய அப்துல்லா, முல்லை அமுதன், முல்லையூரான்(மறைவு) , மைத்திரேயி, பிரதீபா, றஞ்சினி, ஆழியாள் என்றதொரு நீண்ட பட்டியலே கவிதையில் உண்டு.
நோர்வேயில் இருந்து சுவடுகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘துருவச் சுவடுகள்’ என்ற கவிதைத் தொகுப்பே புலம்பெயர்ந்தோர் மத்தியிலிருந்து வெளிவந்த முதலாவது கவிதைத் தொகுப்பாகக் கணிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த பெண்கள் மத்தியிலிருந்து வெளிவந்த ‘மறையாத மறுபாதி’ என்ற கவிதைத் தொகுப்பும் மிகுந்த கவனத்திற்குரிய பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி வந்த தொகுப்பாகும்.
[தொகு] சிறுகதை
கவிதைகளுக்கு அடுத்தபடியாக சிறுகதைகள் முக்கியமானவை. புகலிடத்திலிருந்து வெளியான சஞ்சிகைகளில் வெளிவந்த கதைகளைத் தொகுத்து ‘மண்ணைத் தேடும் மனங்கள்’ என்ற பெயரிலான தொகுப்பு ஒன்று 1986 இல் வெளியாகியது. இதன் பின்னர் ‘புலம்பெயர்ந்தோர் கதைகள்’ ‘பனியும் பனையும்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. பெண் படைப்பாளிகளின் கதைகளைத் தொகுத்து ‘புது உலகம் எமை நோக்கி’ என்று வெளியிட்டனர். இவையெல்லாம் புலம்பெயர் சிறுகதைகளில் தவிர்க்கமுடியாத முக்கியமான ஆரம்பகாலத் தொகுப்புகளாகும். இதன் பின்னர் பல முயற்சிகள் நடந்தேறியுள்ளன.
சிறுகதைகளைப் படைத்துவரும் புலம்பெயர் படைப்பாளிகளில் அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி, குமார்மூர்த்தி(மறைவு) , க.கலாமோகன், பார்த்திபன், ஷோபா சக்தி, சக்கரவர்த்தி, விமல் குழந்தைவேல், ஆசி.கந்தராஜா, முருகபூபதி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,அருண் விஜயராணி,நிருபா,சுமதிரூபன் எனப்பலர் எழுதி வருகின்றனர். புதியவர்களின் வரவும் முக்கியமானது.S.kuneswaran 10:58, 11 ஆகத்து 2011 (UTC)
[தொகு] நாவல்
80 களின் இறுதிப்பகுதியில் இருந்தே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து நாவல்கள் வெளிவரத் தொடங்கின. பார்த்திபனின் பல குறுநாவல்கள் ஆரம்பத்தில் வெளிவந்தன. ஆரம்பத்தில் வெளிவந்த நாவல்கள் தாயக நினைவுடன் தொடர்புபட்டவையாகவும் சீதனப்பிரச்சனை, சாதிப்பிரச்சனை, காதல் மற்றும் திருமண உறவுகள்> இனப்போராட்டத்தின் அவலம் என்பவற்றையே மையமாகவும் கொண்டிருந்தன.
சிறிது காலத்தின் பின்னரே தாம் வாழ்கின்ற சூழலைச் சுட்டும் படைப்புக்களை வரையத் தொடங்கினர். இவ்வகையில் இன்று புலம்பெயர் நாவல்களைப் படைத்த படைப்பாளிகளில் ஷோபா சக்தி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமல் குழந்தைவேல், முல்லை அமுதன், மா. கி. கிறிஸ்ரியன், கி. செ. துரை, பார்த்திபன், இ. தியாகலிங்கம், ஆகியோரைக் குறிப்பிடலாம். இற்றைவரை சுமார் 75 ற்கும் மேற்பட்ட நாவல்கள் வெளிவந்துள்ளன.
[தொகு] புலம்பெயர் படைப்புக்களின் உள்ளடக்கம்
புலம் பெயர் படைப்புகளில் கவிதை சிறுகதை நாவல் என்பனவற்றின் உள்ளடக்கத்தினை பின்வருமாறு வகைப்படுத்தலாம். இது இப்படைப்புக்களின் பொதுவான பார்வையில் வரும்போது தாயகம் சார்ந்த படைப்புக்கள், புலம்பெயர் சூழல் சார்ந்த படைப்புக்கள் என இரண்டாகவும் வகுக்கலாம். எனினும் அவைசுட்டும் பொருட்பரப்பினை நுணுகி நோக்கும்போது அவற்றை பின்வரும் ஆறு பெரும் பிரிவுக்குள் வகைப்படுத்தி நோக்கலாம்.
- தாயக நினைவும் போர்ச்சூழலும்
- புலம்பெயர் வாழ்வின் அவலமும் முரண்பாடும்
- புதிய சூழலில் புதிய அனுபவங்கள்
- பெண்களின் விழிப்புணர்வு
- அரசியல் விமர்சனம்
- அனைத்துலக நோக்கு