இழைமணியப் பழையோள்
இழைமணியப் பழையோள் அல்லது இழைமணிய முதற்றாய் என்பது வாழும் மாந்தரின் தாய்வழி மூதாதையர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்ததாகக் கருத இடம் தரும் ஒரு பெண் தொன்முது தாயைக் (மூதாயைக்) குறிக்கும் சொற்றொடர். இப்பெண்ணின் இழைமணி மரபுப்பொருளின் (மைட்டோக்கோன்றிய டி.என்.ஏ யின்) ஒரு படியுருதான் வழிவழியாக ஒவ்வொறு தாயிடமிருந்தும் குழந்தைகளுக்குச் சென்று இன்று வாழும் மனிதர்களின் கண்ணறைகளின் உள்ளுறுப்புகளானன இழைமணிகளுக்குள் இருக்கின்றன. பைபிள் கதையில் வரும் ஏவாளின் பெயரைக் கொண்டு இம்மூதாதையப் பெண்ணை Mitochondrial Eve (இழைமணி ஏவாள்) என்றும் ஆங்கிலத்தில் அழைப்பர். இருந்தாலும் இப்பெண் மாந்தரினத்தின் முதற்பெண்ணல்ல, மாறாக தொடர்ச்சியாக வந்த மரபுவழியில் இன்றும் தாய்வழி வழித்தோன்றல்களைக் கொண்ட கடைசிப் பெண் மட்டுமே. இப்பெண் வாழ்ந்த நாட்களில் இருந்த மற்ற பெண்களின் வழித்தோன்றல்கள் ஆண் வழியில் வந்து இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல் இப்பெண்ணின் தாயும் பிற மூதாதையர்களும் வாழ்ந்துள்ளனர். இந்த இழைமணி முதல்தாய் படியுரு ஆணின் ஒய்-நிறப்புரிக்கு (ஒய்-குரோமோசோம்)க்கு இணையான பெண் படிவம். ஆனால் தந்தை வழி வரும் பொது ஆண் படியுரு வேறு காலத்தது (பிற்காலத்தது).
இந்தத் தொன்முது தாய் ஏறத்தாழ 170,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அல்லது ஏறத்தாழ 8,000 தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்மணி. இக் காலப்பகுதியானது, ஆப்பிரிக்காவை விட்டு மாந்தர்கள் புலம் பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 60,000 ஆண்டுகள் என்னும் காலக்கணக்குக்கும் முற்பட்ட காலம்.