இலங்கை சனாதிபதிப் பதவி வறிதாதல், பதவியிறக்கல் மற்றும் மீள்நிரப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1978ம் ஆண்டு அரசியலமைப்பில் 7வது அத்தியாயம் 30வது உறுப்புரையின் 1ம் பந்தி பின்வருமாறு கூறுகின்றது. இலங்கைக் குடியரசுக்கு சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின் தலைவரும் ஆட்சித்துறையினதும், அரசாங்கத்தினதும் தலைவரும் ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவருமாவார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை சனாதிபதிப் பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அரசியலமைப்பில் 38வது உறுப்புரை 1ம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

38வது உறுப்புரை 1ம் பந்தி[தொகு]

பதவிக்காலத்தில் இறத்தல்,

தன் கைப்பட இராஜிநாமாவை சபாநாயகருக்கு சமர்ப்பித்தல்,

இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழத்தல்,

பதவிக்காலம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் பதவி ஏற்காதுவிடல்,

38 (2) ல் ஏதேனும் குற்றச்சாட்டின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டால்,

130 (அ) உறுப்புரைப்படி சனாதிபதியின் தெரிவு பிழையானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால்,

மேற்குறித்த நிலைகளில் சனாதிபதிப் பதவி வெற்றிடமாகும்.

இலங்கை சனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை[தொகு]

சனாதிபதிக்கெதிராகக் குற்றப்பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் வழி முறைகளைப் பற்றி அரசியலமைப்பில் 38 (2) ம் உறுப்புரையின்படி விளக்கப்பட்டுள்ளது.

38(2)அ - நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் கடிதத்தின் மூலம் மனப் பலவீனம் அல்லது உடற் பலவீனம் காரணமாக அவரது (சனாதிபதியின்) பதவிக்குரிய பணிகளை நிறைவேற்றுவதற்கு நிரந்தரமாக இயலாதுள்ளார் எனச் சார்த்துகின்ற அல்லது சனாதிபதி பின்வருவனவற்றைப் புரிந்ததற்குக் குற்றவாளியாக உள்ளாரெனச் சார்த்துகின்ற தீர்மானம் பற்றி அறிவித்தல் ஒன்றைக் கொடுக்கலாம்.

1. அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம்

2. தேசத்துரோகம் புரிந்த குற்றம்

3. இலஞ்சம் பெற்ற குற்றம்

4. தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் தூர்ப்பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக்கான குற்றம்

5. அல்லது ஒழுக்கக்கேட்டை உற்படுத்தும் ஏதேனும் சட்டத்தி;ன் கீழான ஏதேனும் தவறு.

மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடாத்தும் படி உயர்நீதிமன்றத்தைக் கோர நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியும்.

குற்றப் பிரேரணையை கொண்டுவரும் வழிமுறை[தொகு]

  • மேற்படி சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச்சாட்டுக்கள் எழுத்து மூலம் குறிக்கப்பட்டு நாடாளுமன்ற அங்கத்தவர்களுள் 2 / 3 குறையாதோர் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு சமர்ப்பிக்கலாம்.
  • இக்கையொப்பம் 2 / 3 க்கு குறைவாக இருப்பின் குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகரால் மறுக்கவும் முடியும்.
  • இருப்பினும் குறித்த பிரேரணைக்குப் நாடாளுமன்ற அங்கத்தவர்களுள் 1 / 2 பாதிப் பங்கினருக்கு மேல் கையொப்பமிடப்பட்டிருப்பின், நியாயங்கள் காணப்படுமிடத்து உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சபாநாயகர் திருப்திப்பட்டு நாடாளுமன்றத்தில் 2 / 3 பெரும்பான்மையைப் பெற முடியுமென கருதினால் குறித்த பிரேரணையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சபாநாயகரால் சேர்க்க முடியும்.

பிரேரணை சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்படுமிடத்து[தொகு]

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் 3 படிமுறைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1. குறித்த பிரேரணை நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். விவாத முடிவில் நடாத்தப்படும் வாக்கெடுப்பில் சமுகமளிக்காத உறுப்பினர் எண்ணிக்கை உட்பட 2 / 3 பெரும்பான்மை வாக்குகள் பெறப்படின் மேற்குறித்த பிரேரணை குறித்து விசாரணையை மேற்கொள்ளும்படி உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
2. உயர்நீதிமன்றம் குறித்த பிரேரணையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். இவ்விடத்தில் தான் குற்றவாளி அல்ல என நிரூபிக்கவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபிக்கவும் சனாதிபதியால் அல்லது அவரின் சட்டத்தரணியால் சாட்சியமளிக்க யாப்பில் இடம் வழங்கப்பட்டுள்ளது. (129 (2) உறுப்புரைப்படி இந்த விசாரணை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படல் வேண்டும்.)
3. சனாதிபதியால் மனப்பலவீனம் அல்லது உடற் பலவீனம் காரணமாக அவரது பதவியைத் தொடர்ந்தும் வகிக்க முடியதென, அல்லது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிக்கை (தீர்ப்பு) சமர்ப்பிக்கப்படும் இடத்து மீண்டும் நாடாளுமன்றத்தில் சமுகமளிக்காத உறுப்பினர் உட்பட 2 / 3 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யலாம்.

இலங்கை வரலாற்றில்[தொகு]

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக 1991ம் ஆண்டில் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரையப்பட்டது.

இக்குற்றப் பிரேரணையில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அரை வாசிக்கு மேல்) கையொப்பமிட்டிருந்தனர் என கூறப்படுகின்றது. சபாநாயகரினால் ஆரம்பத்தில் அக்குற்றப்பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும் பின்னர் கையொப்பமிட்டுள்ள உறுப்பினர்களின் கையொப்பங்கள் பிழையானது என காரணம் காட்டப்பட்டதினால் உரிய குற்றப் பிரேரணை நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

விமர்சனங்கள்[தொகு]

1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்புப் பற்றிய விவாதத்தில் கலாநிதி என்.எம். பெரேரா குறிப்பிட்ட பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்

  • சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான சட்டவிதிகள் யாப்பில் இடம்பெற்றபோதிலும்கூட இது நடைமுறைக்கு சாத்தியப்படுமா? என்பது கேள்விக் குறியே.
  • சனாதிபதிக்கெதிராக முறையில் குற்றப்பிரேரணை ஒன்றினை கொண்டு வர முனையும் நிலையில் சனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் ஒன்றுமே செய்யமுடியாது போகும். (குற்றப்பிரேரணையை சபாநாயகர் ஏற்றபின் திர்ப்பு வரும்வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தினைச் சனாதிபதி இழந்துவிடுகிறார்)
  • மேலும் யாப்புவிதிகளை நுணுக்கமாக ஆராயும்போது உயர்நீதிமன்றம் இப்பிரேரணையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் பிரதிவாதியின் சார்பில் யாரை விசாரிப்பதென்ற தெளிவுகளும் கூறப்படவில்லை.

சனாதிபதி பதவி வெற்றிடமானால் மீள் நிரப்பல்[தொகு]

நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதிப்பதவி அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் வெற்றிடமானால் அடுத்துவரும் சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் 37ம் உறுப்புரை, 40ம் உறுப்புரை போன்றவற்றிலும் 1981ம் ஆண்டு 2ம் இலக்க சனாதிபதியைத் தெரிவுசெய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) சட்ட மூலத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 37ம் உறுப்புரையின் 1ம் பந்தியில் சனாதிபதிக்குரிய தத்துவங்களும், கடமைகளும், பணிகளும் முதலமைச்சினால் பிரயோகிக்கப்படுதலும், புரியப்படுதலும், நிறைவேற்றப்படுதலும் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

சனாதிபதியின் சுகயீனம் காரணமாக, இலங்கையில் இல்லாமை காரணமாக அல்லது வேறேதும் காரணமாகத் தமது பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பாரெனக் கருதுவாரெனில் அத்தகைய காலத்தின் போது சனாதிபதி என்ற பதவியில் முதலமைச்சரைச் சனாதிபதி என்ற பதவிக்குரிய தத்துவங்களையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் அவர் (சனாதிபதி) நியமிக்கலாம் என்பதுடன் அத்தகைய காலத்தின்போது முதலமைச்சர் என்ற பதவியில் பதிற்கடமை ஆற்றுவதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம்.

இச்சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் பதவி வறிதாக இருப்பின் அல்லது செயலாற்ற இயலாதிருப்பின் அத்தகைய காலப்பகுதியின் போது சனாதிபதியின் பதவிக்கான தத்துவங்களையும்ää கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அவர் சபாநாயகரை நியமிக்கலாம்.

37ம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் ஒரு தற்காலிக நிலையாகும்.

சனாதிபதிப்பதவி வெற்றிடமான சந்தர்ப்பம்[தொகு]

1993 மே 1ம் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2வது நிறைவேற்றதிகாரமிக்க சனாதிபதி ரனசிங்க பிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து சனாதிபதிப்பதவி வெற்றிடமானது. (யாப்பின் 38ம் உறுப்புரையின் 1ம் பந்தி (அ) பிரிவின்படி)

இந்நிலையில் (சனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் அவரின் பதவி வறிதாகும் நிலையில்) நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினருள் ஒருவரை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென அரசியலமைப்பின் 40ம் உறுப்புரையில் (1) அ, ஆ, இ பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

சனாதிபதிப் பதவிக்கு அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் பதவி வறிதாகிச் செல்லும் சனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்.

அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட பின்னர் இயன்றளவு விரைவாகவும் எச்சந்தர்ப்பத்திலும் அத்தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். நாடாளுமன்றம் சட்டத்தினால் ஏற்பாடு செய்யக்கூடியவாறான அத்தகயை நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய தேர்தல், இரகசிய வாக்களிப்பு மூலமும், அளிக்கப்பட்ட வாக்குகள் பூரணப்பெரும்பான்மை மூலமும் நடைபெறுதல் வேண்டும்.

அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட பின்னர் இயன்றளவு விரைவாகவும் எச்சந்தர்ப்பத்திலும் அத்தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். நாடாளுமன்றம் சட்டத்தினால் ஏற்பாடு செய்யக்கூடியவாறான அத்தகயை நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய தேர்தல், இரகசிய வாக்களிப்பு மூலமும், அளிக்கப்பட்ட வாக்குகள் பூரணப்பெரும்பான்மை மூலமும் நடைபெறுதல் வேண்டும்.

அரசியலமைப்பின் 40 (1) (இ) பிரிவு அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட காலத்திற்கும், புதிய சனாதிபதிப்பதவி ஏற்கின்ற காலத்திற்குமிடைப்பட்ட காலத்தின்போது சனாதிபதிப்பதவியில் முதலமைச்சர் பதிற்கடமையாற்ற வேண்டும் என்பதுடன், முதலமைச்சர் பதவி வறிதாக இருக்குமெனில் அல்லது முதலமைச்சர் பதிற்கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருப்பாரெனில் சனாதிபதி என்ற பதவியில் சபாநாயகர் பதிற்கடமையாற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அனுபவம்[தொகு]

இலங்கை சனாதிபதி அவர்களின் மறைவையடுத்து அரசியலமைப்பின் 37(2), 40(1) (இ) ஏற்பாடுகளுக்கமைய 1993 மே 1ம் திகதி இலங்கையின் முதலமைச்சர் திரு. டி.பி. விஜயதுங்க அவர்கள் பதில் சனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின்படி பதில் சனாதிபதிக்கு ஒரு மாதம் மட்டுமே கடமையாற்ற முடியும்.

இதற்கிடையில் 40ம் உறுப்புரைப்படி நாடாளுமன்றம் தமது உறுப்பினர் ஒருவரை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு சனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) நாடாளுமன்ற சட்ட மூலத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சனாதிபதிப்பதவி வெற்றிடமாகி 3 தினங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படல் வேண்டும். அவ்வாறு நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் 48 மணிநேரத்திற்குள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் விசேட பிரகடனத்தின்படி சனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்களை (நாடாளுமன்ற அங்கத்தவர்களிடமிருந்து) கோரப்படுவதுடன் வேட்புமனு பெறும் காலம், நேரம் என்பனவும் அறிவிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தினுள் சனாதிபதியைக் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடாத்துவதற்குப் பொறுப்பாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகமே இருப்பார்.

இத்தகைய தேர்தலின்போது கடைப்பிடிக்கப்படும் ஒழுங்குமுறைகள் சாதாரண தேர்தல் முறைகளை ஒத்ததாகும். வேட்புமனு கோரப்படுதல் எனும்போது இங்கு வேட்பாளரின் அனுமதியுடன் ஒரு அங்கத்தவர் அவர் பெயரைப் பிரேரித்து மற்றொருவர் ஆமோதிக்க வேண்டும். எதிர்ப்போட்டிகள் இல்லாதிருப்பின் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் ஏகமனதமாக இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் அறிவிப்பார். அதையடுத்து சனாதிபதி உயர்நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து ஏற்கனவே பதவி வறிதான சனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு சனாதிபதியாகப் பதவியேற்றுக்கொள்வார்.

இதன்படி 1993-05-07ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது பதில் சனாதிபதி டி.பி. விஜயதுங்க அவர்களின் பெயர் முன்மொழியப்பட்டு (விஜயபால மென்டிஸ் முன்மொழிந்தார்), வழிமொழியப்பட்டு (ஏ.ஸி.எஸ். ஹமீட் வழிமொழிந்தார்) எதிர்ப்பிரேரணைகள் இல்லாதிருந்தமையினால் சனாதிபதியாக ஏகமனமதாக தெரிவுசெய்யப்பட்டார். (இவரின் பதவிக்காலம் 1995-01-02 உடன் முடிவடையும். (1989-01-02ம் திகதியன்று ரனசிங்க பிரேமதாச பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவது 1995-01-02 ஆகும்.)

ஒன்றுக்குமேற்பட்டோர் பிரேரிக்கப்பட்டால்[தொகு]

சனாதிபதி தெரிவுக்கான வேட்புமனு கோரப்பட்டதும் ஒன்றுக்குமேற்பட்டோர் பிரேரிக்கப்பட்;டால் தேர்தலை நடாத்த வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றம் செயலாளர் நாயகத்தையே சாரும். அவர் தேர்தலுக்கான திகதி, நேரம் என்பவற்றைக் குறிப்பிடுவார். தேர்தலின்போது இரகசிய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். தேர்தலின் மூலம் சனாதிபதியாகத் தெரிவாவதற்கு பெரும்பான்மை வாக்குகள் அவசியம். அதாவது செல்லுபடியான வாக்குகளில் இரண்டில் ஒன்றுக்கு அதிகமானவாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உசாத்துணை[தொகு]

  • இலங்கைப் நாடாளுமன்ற ஹன்சாட் கோவை -1978]
  • இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு (1978)
  • 1981ம் ஆண்டு 2ம் இலக்க சனாதிபதியைத் தெரிவுசெய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) சட்ட மூலம்

வெளி இணைப்புகள்[தொகு]