இரவுக் காவல் (ஓவியம்)
| இரவுக் காவல் (De Nachtwacht) | |
|---|---|
| ஓவியர் | ரெம்பிராண்ட் |
| ஆண்டு | 1642 |
| வகை | எண்ணெய்வண்ண ஓவியம் |
| பரிமாணம் | 363 சமீ × 437 சமீ (142.9 அங் × 172.0 அங்) |
| இருக்குமிடம் | ரீக்சுமியூசியம்,அம்சுட்டர்டாம் |
இரவுக் காவல் (Night Watch) என்பது, ஒல்லாந்த ஓவியர் ராம்பிராண்ட் வான் ரீன் (Rembrandt van Rijn) என்பவரால் வரையப்பட்ட புகழ் பெற்ற ஓவியம் ஆகும். இது தற்போது நெதர்லாந்தின் தலைநகர் அம்சுடர்டாமில் உள்ள "ரீக்சுமியூசியம்" என்னும் அரச அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களில் மிகவும் புகழ் பெற்ற ஓவியம் இதுவே. அத்துடன் உலகின் மிகவும் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும் இது மதிக்கப்படுகின்றது.
பொருளடக்கம் |
முக்கிய அம்சங்கள் [தொகு]
இவ்வோவியத்தின் புகழுக்கு மூன்று விடயங்கள் முக்கியமான காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஒன்று, இதன் அளவு. இரண்டாவது, ஒளியையும் நிழலையும் ஓவியத்தில் கையாண்டிருக்கும் விதம். மூன்றாவது, நிலையான படம் என்பதற்குப் புறம்பாக இதில் காணப்படும் இயக்க உணர்வு. மிகவும் பெரிய ஓவியமான இதன் அளவு 363 சமீ x 437 சமீ (11 அடி 10 அங். x 14 அடி 4 அங்.).
இந்த ஓவியம் 1642 ஆம் ஆண்டில், ஒல்லாந்தரின் பொற்காலம் என்று சொல்லப்படும் ஒரு காலப் பகுதியில் வரைந்து முடிக்கப்பட்டது. இவ்வோவியத்தின் பெயர் வரக் காரணமான நகர் காவலர் பிரிவை அதன் தலைவரான பிராண்சு பானிங் கோக், லெப்டினன்ட் வில்லெம் வான் ரூய்ட்டென்பர்க் என்போர் வெளியே நடத்திச் செல்வதை இவ்வோவியம் காட்டுகிறது. ஒளியையும் நிழலையும் திறமையாகப் பயன்படுத்தி ஓவியத்தில் காணும் முக்கியமான பாத்திரங்கள் மீது ஓவியர் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஓவியத்தில் செய்யப்பட்ட மாறுதல்கள் [தொகு]
இவ்வோவியம் வரையப்பட்டதற்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியிலும் இதன் மீது சற்று மங்கல் நிறமான "வார்னிசு" எனப்படும் ஒளிபுகவிடும் பூச்சு பூசப்பட்டிருந்தது. இதனால், இப்படத்தில் காணப்படுவது ஒரு இரவுக் காட்சி என்பது போன்ற பிழையான தோற்றம் இருந்துவந்தது. 1940 ஆம் ஆண்டில் இப் பூச்சு அகற்றப்பட்டது.
1715 ஆம் ஆண்டில் இது அதன் முன்னைய இடத்திலிருந்து அம்சுட்டர்டாம் நகர மண்டபத்துக்கு இடம் மாற்றப்பட்டபோது இதன் நான்கு பக்கங்களிலும் இருந்து பகுதிகள் வெட்டி அகற்றப்பட்டன. புதிய இடத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில் பொருந்துமாறு அதன் அளவைக் குறைப்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இவ்வாறு செய்வது வழமையாக இருந்தது. இதனால் ஓவியத்தின் வலப் பக்கத்தில் இருந்த இரண்டு மனித உருவங்களும்; மேற்புறத்தில் வளைவின் மேற்பகுதி, கைப்பிடிச்சுவர், படிக்கட்டின் விளிம்பு என்பனவும் அகற்றப்பட்டன. கைப்பிடிச் சுவரும், படிக்கட்டும், ஓவியத்துக்கு முன்னோக்கிய இயக்க உணர்வைக் கொடுப்பதற்காக ஓவியரால் பயன்படுத்தப்பட்டவை. இப்போது இலண்டன் தேசிய ஓவியக் கூடத்தில் உள்ள இவ்வோவியத்தின் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதி ஒன்று இவ்வோவியத்தின் பழைய நிலையைக் காட்டுகிறது.
வரைதல் பணி [தொகு]
இந்த ஓவியத்தைக் குடிமக்கள் காவல் படையின் தலைவரும் அதன் 17 உறுப்பினர்களும் சேர்ந்து வரைவித்தனர். எனினும், ஓவியத்தின் பின்னணியில் படைத் தலைவர் தவிர்ந்த 18 பெயர்கள் உள்ளன. ஓவித்தில் காணப்படும் தோற்கருவி வாசிப்பவர் காவற்படையைச் சேராதவர். ஊதியம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தப்பட்டவர். இதனால் பணம் எதுவும் கொடுக்காமல் இலவசமாகவே ஓவியத்தில் இடம் பெற்றார். ஓவியத்தில் மொத்தமாக 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஓவியத்தை வரைந்த ரெம்பிரான்டுக்கு 1,600 கில்டர்கள் பணம் வழங்கப்பட்டது. அக்காலத்தில் இது ஒரு பெரிய தொகை. அக்காலத்தில் வெவ்வேறு ஓவியர்களால் ஆயுதப் படையினரை மையப்படுத்தி வரையப்பட்ட ஏழு ஓவியங்களுள் இதுவும் ஒன்று.