இந்திய மயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய மயில்
Indian peafowl
ஆண் மயில்
பெண் மயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
துணைக்குடும்பம்:
பாசியானிடே
பேரினம்:
பாவோ (Pavo)
இனம்:
கிரிசுடேடசு (cristatus)
இருசொற் பெயரீடு
பாவோ கிரிசுடேடசு
Pavo cristatus

லி. 1758
பரவல்

மயில் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற, இந்திய மயில் (பாவோ கிரிசுடேடசு), அல்லது நீல மயில் என்பது இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவை இனமாகும். இது இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [2]

இந்திய மயில்கள் பால் ஈருருமை கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் வண்ணமயமான கண் போன்ற புள்ளிகள் கொண்ட இறக்கைகளாலான பெரிய தோகைகளை கொண்டிருக்கின்றன. பெண் மயில்களை கவர முற்படும்போது இந்த தோகைகளை உயர்த்தி ஒரு பெரிய விசிறி போல காட்டுகின்றன. மயிலின் விரிவான தொகையின் செயல்பாடு பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. 19 ஆம் நூற்றாண்டில், சார்லஸ் டார்வின், இது ஒரு புரியாத புதிர் என்றும், சாதாரணமான இயற்கைத் தேர்வு மூலம் விளக்குவது கடினம் என்றும் குறிப்பிட்டார். பெண் மயில்கள் பெரிய தோகைகளை கொண்டிருப்பதில்லை. அவை பெரும்பாலும் வெள்ளை நிற முகம், பச்சை நிற கீழ் கழுத்து, மற்றும் மந்தமான பழுப்பு அல்லது சாம்பல் நிற இறகுகளைக் கொண்டிருக்கின்றன.

மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருந்தாலும் பறக்கும் திறன் கொண்டவை. இந்திய மயில்கள் திறந்த காடுகளில் அல்லது பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் வாழ்கிறது, அங்கு இவை பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவை பாம்புகள், பல்லிகள் மற்றும் சிறிய கொறித்துண்ணிகளை வேட்டையாடுகின்றன. மயில்களின் அகவல் இவற்றைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இந்த அகவல் சத்தமானாது வனப் பகுதிகளில் புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் இருப்பதை மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக பயன்படுகின்றன.

இந்த பறவை இந்து மற்றும் கிரேக்க புராணங்களில் பரவலாக காணப்படுகின்றது. தமிழ் கடவுளாக அறியப்படுகின்ற முருகனின் வாகனமாக கருதப்படுகின்றது. இது இந்தியாவின் தேசியப் பறவையாகும்.[3]

தோற்றம்[தொகு]

ஒரு ஆண் மயிலின் கழுத்து

இந்திய மயில்கள் பால் ஈருருமை கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் உருவில் பெரியவை. மயிலின் அலகின் முனையில் இருந்து வால் சிறகு வரை ஏறத்தாழ 100-115 செ. மீ. நீளமும், நன்கு வளர்ந்த முதிர்ந்த பறவைகளில் முழுவதுமாக வளர்ந்த தோகையின் கடைசி முனை வரை கணக்கிட்டால் ஏறத்தாழ 195-225 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். இதன் எடை ஏறத்தாழ 2.5 முதல் 4 கிலோ வரை இருக்கும். இந்திய மயில்கள் பறவை இனத்தின் பெரிய மற்றும் கனமான உறுப்பினர்களில் ஒன்றாகும்.

ஆண் மயில்கள் நீல நிற தலை மற்றும் கழுத்தைக் கொண்டிருக்கின்றன. தலையில் உள்ள இறகுகள் குறுகியதாகவும் சுருண்டதாகவும் இருக்கும். தலையில் உள்ள விசிறி வடிவ கொண்டை கருப்பு நிற தண்டுகளுடன் நீல-பச்சை நிற இறகுகளால் ஆனது. கண்ணுக்கு மேலே ஒரு வெள்ளைக் கோடும், கண்ணுக்குக் கீழே ஒரு பிறை வடிவ வெள்ளைத் திட்டும் காணப்படுகின்றன. தலையின் ஓரங்களில் பச்சை கலந்த நீல நிற இறகுகள் உள்ளன. பின்புறம் கருப்பு மற்றும் செம்பு நிற இறகுகள் உள்ளன. ஆண் மயில்கள் வண்ணமயமான கண் போன்ற புள்ளிகள் கொண்ட இறக்கைகளாலான பெரிய தோகைகளை கொண்டிருக்கின்றன. தோகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறகுகள் இருக்கும். பெண் மயில்களை கவர முற்படும்போது இந்த தோகைகளை உயர்த்தி ஒரு பெரிய விசிறி போல காட்டுகின்றன.[4][5]

தோகைகளை உயர்த்திய ஒரு ஆண் மயில்

வயது முதிர்ந்த பெண் மயில்கள் ஒரு முகடு கொண்ட பழுப்பு நிற தலையைக் கொண்டுள்ளன. முகடின் நுனிகள் பச்சை நிறத்தில் உள்ளன. இதன் மேல் உடல் பழுப்பு நிறத்திலுள்ளது. கீழ் கழுத்து பச்சை நிறமாகவும், மார்பக இறகுகள் பச்சை நிறம் கலந்த அடர் பழுப்பு நிறத்தில் பளபளப்பாகவும் இருக்கும். அடிப்பகுதி வெண்மையாகவும், வால் சிறகுகள் அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.[4] மயில் குஞ்சுகள் இளஞ்சிவப்பு கண்களுடன் கழுத்தில் கரும்பழுப்பு நிற அடையாளத்துடன் காணப்படுகின்றன.[6][6][7]

மயில்கள் உரத்த அகவல் ஒலிகளை எழுப்புகின்றன. மயில்களின் அகவல் இவற்றைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இந்த அகவல் சத்தமானாது வனப் பகுதிகளில் புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் இருப்பதை மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக பயன்படுகின்றன.[4][7]

திரிபுகள் மற்றும் கலப்பினங்கள்[தொகு]

கருப்பு நிற தோள்பட்டை கொண்ட ஒரு இந்திய மயில்

இந்திய மயில்களில் பல நிறமாற்றங்கள் உள்ளன. இவை காடுகளில் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் இவற்றைப் பொதுவானதாக ஆக்கியுள்ளது. கருப்பு தோள் கொண்ட திரிபுகள் ஆரம்பத்தில் இந்திய மயில்களின் ஒரு கிளையினமாகக் கருதப்பட்டது.[8] இயற்கையியலாளர் மற்றும் உயிரியலாளர் சார்லஸ் டார்வின் (1809-1882) இது தனி கிளையினம் அல்ல என்றும், வளர்ப்பதற்காக உருவான ஒரு வகையானது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை முன்வைத்தார்.[9] இந்த பிறழ்வில், வயது முதிர்ந்த ஆண் மயில்கள் கறுப்பு இறக்கைகளுடைய கருநிறமிகளாக உள்ளன.[6][10][11]

தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் உருவான வெள்ளை மயில்

இந்திய மயிலின் பிற நிற வடிவங்களில் வெள்ளை நிற திரிபுகள் அடங்கும். இவை தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு மாறுபாட்டின் விளைவாகும்.[12] இந்த வெள்ளை நிற மயில்கள் பெரும்பாலும் விலங்குக் காட்சிச்சாலைகள் மற்றும் உயிரியல் பூங்காக்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

ஒரு ஆண் பச்சை மயில் (பாவோ மியூட்டிகசு) மற்றும் ஒரு பெண் இந்திய மயில் (பாவோ கிரிசுடேடசு) இடையேயான சேர்க்கை "சுபால்டிங்" எனப்படும் ஒரு கலப்பினத்தை உருவாக்குகின்றன.[13] தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் உருவாக்கப்பட்ட அறியப்படாத வம்சாவளியைச் சேர்ந்த இந்த கலப்பின பறவைகள் காடுகளுக்குள் விடுவிக்கப்பட்டால் சிக்கல்கள் ஏற்படலாம், ஏனெனில் அத்தகைய கலப்பினங்கள் மற்றும் அவற்றின் சந்ததிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகின்றன.[14][15]

வாழ்விடம்[தொகு]

ஒரு பெண் மயில் தனது குஞ்சுகளுடன்

இந்திய மயில் இந்திய துணைக்கண்டம் முழுவதும் வசிக்கும் ஒரு பறவையினமாகும். இது பொதுவாக வறண்ட தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கிறது.[16] இந்திய மயில்கள் திறந்த காடுகளில் அல்லது பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் வாழ்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில், அவை பாதுகாக்கப்படுவதால், மக்கள் வசிக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சுற்றி காணப்படுகின்றன.[17]

இந்திய மயில் ஐரோப்பாவில் கி.மு. 450 வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.[18] இது பிறகு உலகின் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.[7][19][20]

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

மரக் கிளையில் அமர்ந்திருக்கும் ஆண் மயில்

ஆண் மயில்கள் அதன் ஆடம்பரமான தோகைகளை விரித்து காட்டும் காட்சிகளுக்கு மிகவும் பிரபலமானது. இந்த தோகை இறகுகள் மயில்களின் முதுகில் இருந்து வளர்ந்தாலும், உயிரியலில் ரீதியாக வாலின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. தொகையின் நிறங்கள் எந்த நிறமிகளாலும் ஏற்படுவதில்லை மாறாக இறகுகளின் நுண்ணிய அமைப்பு மற்றும் அதன் விளைவாக ஒளியியல் நிகழ்வுகளால் வண்ணமயமாக தெரிகின்றன.[21] ஆண் மயிலின் நீண்ட தோகை இறகுகள் இரண்டாவது வயதுக்கு பிறகு வளரத் தொடங்கும். நான்கு வயதாகும் போது முழுமையாக வளர்ந்த தோகைகள் காணப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் முழுதாக உருவாகி பின்னர் ஆகத்து மாத இறுதியில் உதிர்க்கப்படுகின்றன.[22][23]

பொதுவாக மயில்கள் சிறிய குழுக்களாக தரையில் உண்ணும். இந்த குழு ஒரு ஆண் மயில் மற்றும் 3 முதல் 5 பெண் மயில்கள் மற்றும் குஞ்சுகளைக் கொண்டிருக்கும். இனப்பெருக்க காலத்திற்குப் பிறகு, மந்தைகளில் பெண் மயில்கள் மற்றும் குஞ்சுகள் மட்டுமே இருகின்றன. இவை அதிகாலையில் திறந்த வெளியில் காணப்படுகின்றன. பகல் நேரத்தில் வெப்பத்தின் போது மர நிழல்களில் ஓய்வெடுக்க முனைகின்றன. அந்தி வேளையில், குழுக்களாக நீர் பருகுவதற்காக நீர்நிலைகளுக்கு செல்கின்றன. இடையூறு ஏற்படும் போது, ​​மயில்கள் ஓடுவதை வழக்கமாக கொண்டுள்னன, சில அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே பறந்து தப்பிச்செல்கின்றன.[7] மயில்கள் உயரமான மரங்களில் இரவில் குழுக்களாக கூடுகின்றன. சில நேரங்களில் பாறைகள், கட்டிடங்கள் அல்லது தூண்களைப் பயன்படுத்துகின்றன.[24][25]

மயிலின் அகவல்

மயில்கள் குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் உரத்த அகவல் குரல்களை எழுப்புகின்றன. பொதுவாக இரு பாலினத்தாலும் ஆறு எச்சரிக்கை அழைப்புகளைத் தவிர ஏறக்குறைய ஏழு வெவ்வேறு அழைப்பு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[26]

இனப்பெருக்கம்[தொகு]

ஒரு பெண் மயிலிடம் தோகையை விரித்து காண்பிக்கும் ஆண் மயில்

மயில்கள் பொதுவாக அணைத்து பருவங்களிலும் இனப்பெருக்கம் செய்தாலும், பெரும்பாலும் மழைக் காலத்தில் பரவலாக இனப்பெருக்கம் செய்கின்றன. மயில்கள் பொதுவாக 2 முதல் 3 வயதில் பாலியல் முதிர்ச்சியை அடைகின்றன.[27] பல ஆண் மயில்கள் பெண் மயில்களை ஈர்ப்பதற்காக ஒரே தளத்தில் கூடலாம்.[28] ஆண் மயில்கள் தனக்கென ஓர் இடத்தை பராமரிக்கின்றன. அந்த இடத்தை பெண் மயில்களை பார்வையிட அனுமதிக்கின்றன.[29] ஆண் மயில்கள் தனது பெரிய தோகையை விசிறி போல உயர்த்துகின்றன. இறகுகளை அவ்வப்போது அதிரவைத்து, ஒரு சலசலப்பான ஒலியை உருவாக்குகின்றன. ஒரு ஆண் மயில் பெண் மயிலை எதிர்கொள்ளும் போது அதன் தோகை அமைப்பைக் காட்டுவதற்காக பெண் மயிலை சுற்றி வருகிறது.[30] பெண் மயில்கள் இல்லாவிட்டாலும் சில நேரங்களில் ஆண் மயில்கள் தோகைகளை விரித்துக் காட்சியளிக்கலாம். ஒரு ஆண் மயில் காட்சியளிக்கும் போது, ​​பெண் மயில்கள் எந்த ஒரு ஆர்வமும் இல்லாதது போல தனது வேலையே தொடர்கின்றன.[31]

மயில் முட்டை

ஒரு மயிலின் கூடு என்பது இலைகள், குச்சிகள் மற்றும் பிற குப்பைகளால் தரையில் அமைக்கப்படுவதாகும். கூடுகள் சில சமயங்களில் கட்டிடங்களில் மீது அல்லது முந்தைய காலங்களில் கழுகுகளின் பயன்படுத்தப்படாத கூடுகளில் அமைக்கப்பட்டன.[32] பெண் மயில் நான்கு முதல் எட்டு முட்டைகளை இடுகின்றது. பொதுவாக முட்டைகளை பெண் மயில்கள் அடை காக்கின்றன. ஒரு ஆண் மயில் முட்டையை அடைகாக்கும் அசாதாரண நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.[7][33] இந்த முட்டைகள் அடை காக்கப்பட்டால் குஞ்சு பொரிக்க ஏறத்தாழ 28 நாட்கள் ஆகும். முட்டை பொரித்த பிறகு வெளிவரும் குஞ்சுகள் தாயைப் பின்தொடர்கின்றன.[4] குஞ்சுகள் சில சமயங்களில் தங்கள் தாய்மார்களின் முதுகில் ஏறிக்கொள்ளும். பெண் பறவைகள் அவற்றை பாதுகாப்பான மரக்கிளைக்கு கொண்டு செல்ல இது உதவுகின்றது.[34]

உணவு[தொகு]

மயில்கள் அனைத்துண்ணிகளாகும். இவை விதைகள், பழங்கள், தானியங்கள், பூச்சிகள், புழுக்கள், சிறிய பாலூட்டிகள், தவளைகள், கொறிப்பான்கள் மற்றும் பல்லிகள் போன்ற ஊர்வன ஆகியவற்றை உண்கின்றன.[35] இவை சிறிய பாம்புகளை உண்கின்றன.[36][37] இவை பூ மொட்டுகள், இதழ்கள், புல் மற்றும் மூங்கில் தளிர்களையும் உண்ணும்.[35] பயிரிடப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் மயில்கள் நிலக்கடலை, தக்காளி, நெல், மிளகாய், வாழை போன்ற பலதரப்பட்ட பயிர்களை உண்ணும்.[31]

ஆயுட்காலம் மற்றும் இறப்பு காரணிகள்[தொகு]

குஞ்சுகள் பெரும்பாலும் தாயுடனேயே இருக்கின்றன. மயில் குஞ்சுகளை பல விலங்குகள் மற்றும் பறவைகள் வேட்டையாடுகின்றன.

சிறுத்தை, செந்நாய், நரி மற்றும் புலி போன்ற பெரிய விலங்குகள் வயது வந்த மயில்களை பதுங்கியிருந்து தாக்க வல்லவை.[25][38] இருப்பினும் வழக்கமாக இந்த விலங்குகள் சிறிய மயில்களை மட்டுமே வேட்டையாடுகின்றன, ஏனெனில் வயது வந்த மயில்கள் பொதுவாக மரங்களுக்குள் பறப்பதன் மூலம் தரையில் வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்க முடியும்.[39][40][41] சில சமயங்களில் பருந்து மற்றும் ஆந்தை போன்ற பெரிய வேட்டையாடும் பறவைகளாலும் நெயில் குஞ்சுகள் வேட்டையாடப்படுகின்றன.[42][43] வயது வந்த பறவைகளை விட குஞ்சுகள் வேட்டையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில சமயங்களில் இவை தெருநாய்களால் கொள்ளப்படுகின்றன. நாட்டுப்புற வைத்தியங்களுக்காக சில சமயங்களில் மனிதர்களால் இவை வேட்டையாடப்படுகின்றன.[31] குழுக்களாக உணவு உண்பது பாதுகாப்பாக கருதப்படுகின்றது.[44] நிலப்பரப்பில் வேட்டையாடும் விலங்குகளைத் தவிர்ப்பதற்காக இவை உயரமான மரங்களின் உச்சிகளில் கூடுகின்றன.[25] இந்தப் பறவைகள் ஏறத்தாழ 23 ஆண்டுகள் வரை வாழ்கின்றன, ஆனால் காடுகளில் பெரும்பாலும் சராசரியாக 15 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[45]

பாதுகாப்பு மற்றும் நிலை[தொகு]

பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தில் உள்ள ஒரு ஆண் மயில்

இந்திய மயில்கள் தெற்காசியா முழுவதும் காடுகளில் பரவலாக காணப்படுகின்றன. பல பகுதிகளில் கலாச்சார ரீதியாகவும் இந்தியாவில் சட்டத்தாலும் இவை பாதுகாக்கப்படுகின்றன. ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.[46] மயில்கள் எளிதில் இனப்பெருக்கம் செய்கின்றன. உலகெங்கிலும் உள்ள உயிரியல் பூங்காக்கள், பூங்காக்கள், பறவை ஆர்வலர்கள் இவற்றை வளர்க்கின்றனர்.

இருப்பினும் இறைச்சிக்காக சட்டவிரோத வேட்டையாடுதல் இந்தியாவின் சில பகுதிகளில் தொடர்கிறது.[47] பூச்சிக்கொல்லி விதைகளை உண்பதன் மூலம் பரவும் விஷம் காட்டு பறவைகளுக்கு அச்சுறுத்தலாக அறியப்படுகிறது.[48] இறகுகள் பறிக்கப்பட்டதா அல்லது இயற்கையாக உதிர்க்கப்பட்டதா என்பதைக் கண்டறியும் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன, ஏனெனில் இந்தியச் சட்டம் உதிர்ந்த இறகுகளை மட்டுமே சேகரிக்க அனுமதிக்கிறது.[49]

இந்தியாவின் சில பகுதிகளில், மயில்கள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயத்திற்கு தொந்தரவாக இருக்கின்றன.[7] இருப்பினும், வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளை அபரிமிதமான அளவில் உட்கொள்வதன் மூலம் அது வகிக்கும் நன்மையான பங்கால் ஈடுசெய்யப்படுவதாகத் தெரிகிறது. தோட்டங்கள் மற்றும் வீடுகளில் அவை தாவரங்கள் மற்றும் கண்ணாடிகள் போன்றவற்றை சேதப்படுத்துகின்றன. பல நகரங்களில் மயில் மேலாண்மைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.[50][51][52]

பண்பாடு[தொகு]

தமிழ் கடவுளான முருகன் மயில் வாகனத்தின் மீதமர்ந்து வள்ளி மற்றும் தெய்வானை உடன் காட்சியளிக்கிறார்

பல கலாச்சாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான இது, 1963 இல் இந்தியாவின் தேசியப் பறவை என அறிவிக்கப்பட்டது.[7] இந்தியாவில் கோவில் கலை, புராணங்கள், கவிதைகள், நாட்டுப்புற இசை மற்றும் மரபுகளில் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறது.[53][54][55][56] பல இந்து தெய்வங்கள் மயில்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. விஷ்ணுவின் அவதாரமான கிருட்டிணன் தலையில் ஒரு மயில் இறகுடன் சித்தரிக்கப்படுகிறார். தமிழ் கடவுளான முருகன் பெரும்பாலும் மயில் வாகனத்தின் மீதமர்ந்தவாறு சித்தரிக்கப்படுகிறார். "இராமாயணத்தில்" தேவர்களின் தலைவன் இந்திரன், ராவணனை தோற்கடிக்க முடியாமல், மயிலின் இறக்கையின் கீழ் தஞ்சமடைந்ததை விவரிக்கிறது.[54][57]

பௌத்த தத்துவத்தில், மயில் ஞானத்தை குறிக்கிறது.[58] மயில் இறகுகள் பல சடங்குகள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மயில் உருவங்கள் இந்திய கோயில் கட்டிடக்கலை, பழைய நாணயங்கள், துணிகள் ஆகியவற்றில் பரவலாக உள்ளன மற்றும் பல நவீன கலை மற்றும் பயன்பாட்டு பொருட்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.[18][59][60] கிரேக்க புராணங்களில் மயிலின் இறகுகளின் தோற்றம் பல கதைகளில் விளக்கப்பட்டுள்ளது.[13][61][62] பல நிறுவனங்கல் மயில் உருவங்களைப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பறவைகள் பெரும்பாலும் பெரிய தோட்டங்களில் காட்சிக்காக வளர்க்கப்பட்டன. இடைக்காலத்தில், ஐரோப்பாவில் வீரர்கள் தங்கள் தலைக்கவசங்களை மயில் இறகுகளால் அலங்கரித்தனர். பல கதைகளில், வில்லாளர்கள் மயில் இறகுகளால் பொறிக்கப்பட்ட அம்புகளைப் பயன்படுத்துகின்றனர். மயில் இறகுகள் வைக்கிங் வீரர்கள் இறந்த பிறகு அவர்களுடன் புதைக்கப்பட்டன.[63] பறவையின் சதை பாம்பு விஷம் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இவற்றின் பல பயன்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மயில் ஒரு பகுதியை பாம்புகள் இல்லாமல் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.[64]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pavo cristatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2009.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009.
  2. "Peacock (bird)". Britannica Online Encyclopedia. 
  3. "National Symbols". National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 30 January 2018.
  4. 4.0 4.1 4.2 4.3 Whistler, Hugh (1949). Popular handbook of Indian birds (4th ). Gurney and Jackson, London. பக். 401–410. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4067-4576-6. https://archive.org/stream/popularhandbooko033226mbp#page/n458/mode/1up/. 
  5. Blanford, WT (1898). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. 4. Taylor and Francis, London. பக். 681–70. https://archive.org/stream/birdsindia04oaterich#page/68/mode/1up. 
  6. 6.0 6.1 6.2 Baker, ECS (1928). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 5 (2nd ). Taylor and Francis, London. பக். 282–284. https://archive.org/stream/BakerFbiBirds5/BakerFBI5#page/n304/mode/1up/. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 Ali, S; Ripley, S D (1980). Handbook of the birds of India and Pakistan. 2 (2nd ). Oxford University Press. பக். 123–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-562063-1. 
  8. Sclater PL (1860). "On the black-shouldered peafowl of Latham (Pavo nigripennis)". Proc. Zool. Soc. London: 221–222. https://archive.org/stream/lietuvostsrmoksl60liet#page/221/mode/1up. 
  9. van Grouw, H. & Dekkers, W. 2023. The taxonomic history of Black-shouldered Peafowl; with Darwin’s help downgraded from species to variation. Bulletin of the British Ornithologists' Club, 143(1): 111–121. https://doi.org/10.25226/bboc.v143i1.2023.a7
  10. Seth-Smith, D (1940). "Peafowl". Avicultural Magazine 5: 205–206. 
  11. Somes, RG Jr.; R. E. Burger (1991). "Plumage Color Inheritance of the Indian Blue Peafowl (Pavo Cristatus): Blue, Black-Shouldered, Cameo, and Oaten". Journal of Heredity 82: 64–68. doi:10.1093/jhered/82.1.64. 
  12. Somes, RG Jr.; Burger, R. E. (1993). "Inheritance of the White and Pied Plumage Color Patterns in the Indian Peafowl (Pavo cristatus)". J. Hered. 84 (1): 57–62. doi:10.1093/oxfordjournals.jhered.a111277. 
  13. 13.0 13.1 Jackson, CE (2006). Peacock. Reaktion Books, London. பக். 10–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86189-293-5. https://archive.org/details/peacockreaktionb00jack. 
  14. Haldane, J. B. S. (1922). "Sex ratio and unisexual sterility in hybrid animals". Journal of Genetics 12 (2): 101–109. doi:10.1007/BF02983075. https://zenodo.org/record/1428440. பார்த்த நாள்: 11 September 2019. 
  15. Leimu, R.; Fischer, M. (2010). Bruun, Hans Henrik. ed. "Between-Population Outbreeding Affects Plant Defence". PLOS ONE 5 (9): e12614. doi:10.1371/journal.pone.0012614. பப்மெட்:20838662. Bibcode: 2010PLoSO...512614L. 
  16. Dodsworth, P.T.L. (1912). "Occurrence of the Common Peafowl Pavo cristatus, Linnaeus in the neighbourhood of Simla, N.W. Himalayas". Journal of the Bombay Natural History Society 21 (3): 1082–1083. https://biodiversitylibrary.org/page/30222511. பார்த்த நாள்: 21 December 2017. 
  17. Whitman, C.H. (1898). "The birds of Old English literature". The Journal of Germanic Philology 2 (2): 40. doi:10.5962/bhl.title.54912. https://archive.org/stream/cu31924031439544#page/n43/mode/1up/. 
  18. 18.0 18.1 Nair, P. T. (1974). "The Peacock Cult in Asia". Asian Folklore Studies 33 (2): 93–170. doi:10.2307/1177550. http://www.nanzan-u.ac.jp/SHUBUNKEN/publications/afs/pdf/a272.pdf. 
  19. Harling, Gavin. "Peafowl (Peacocks)". www.east-northamptonshire.gov.uk (in ஆங்கிலம்). Archived from the original on 12 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-11-12.
  20. Long, J. L. (1981). Introduced Birds of the World. Agricultural Protection Board of Western Australia. 
  21. Blau, S.K. (2004). "Light as a Feather: Structural Elements Give Peacock Plumes Their Color". Physics Today 57 (1): 18–20. doi:10.1063/1.1650059. Bibcode: 2004PhT....57a..18B. 
  22. Sharma, IK (1974). "Ecological Studies of the Plumes of the Peacock (Pavo cristatus)". The Condor 76 (3): 344–346. doi:10.2307/1366352. http://sora.unm.edu/sites/default/files/journals/condor/v076n03/p0344-p0346.pdf. பார்த்த நாள்: 24 March 2013. 
  23. Marien, Daniel (1951). "Notes on some pheasants from southwestern Asia, with remarks on molt". American Museum Novitates (1518): 1–25. https://archive.org/details/notesonsomephea1518mari. 
  24. Trivedi, Pranav; Johnsingh, AJT (1996). "Roost selection by Indian Peafowl (Pavo cristatus) in Gir Forest, India". J. Bombay Nat. Hist. Soc. 93 (1): 25–29. https://biodiversitylibrary.org/page/48603263. பார்த்த நாள்: 21 December 2017. 
  25. 25.0 25.1 25.2 Parasharya, BM; Mukherjee, Aeshita (1999). "Roosting behaviour of Indian Peafowl Pavo cristatus". J. Bombay Nat. Hist. Soc. 96 (3): 471–472. https://biodiversitylibrary.org/page/48583158. பார்த்த நாள்: 21 December 2017. 
  26. Takahashi M; Hasegawa, T (2008). "Seasonal and diurnal use of eight different call types by Indian peafowl ( Pavo cristatus )". Journal of Ethology 26 (3): 375–381. doi:10.1007/s10164-007-0078-4. 
  27. "Common (Indian) Peafowl". Rolling Hills Wildlife Adventure. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 December 2012.
  28. Petrie, M.; Krupa, A.; Burke, T. (1999). "Peacocks lek with relatives even in the absence of social and environmental cues". Nature 401 (6749): 155–157. doi:10.1038/43651. Bibcode: 1999Natur.401..155P. http://www.nbb.cornell.edu/neurobio/BioNB427/READINGS/Sherman1999.pdf. பார்த்த நாள்: 2 June 2010. 
  29. Rands, M.R.M.; Ridley, M.W.; Lelliott, A.D. (1984). "The social organization of feral peafowl". Animal Behaviour 32 (3): 830–835. doi:10.1016/S0003-3472(84)80159-1. 
  30. Stokes, A.W.; Williams, H. W. (1971). "Courtship Feeding in Gallinaceous Birds". The Auk 88 (3): 543–559. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v088n03/p0543-p0559.pdf. பார்த்த நாள்: 24 March 2013. 
  31. 31.0 31.1 31.2 Johnsingh, AJT; Murali, S (1978). "The ecology and behaviour of the Indian Peafowl (Pavo cristatus) Linn. of Injar". J. Bombay Nat. Hist. Soc. 75 (4): 1069–1079. https://biodiversitylibrary.org/page/48297296. பார்த்த நாள்: 21 December 2017. 
  32. Vyas, R. (1994). "Unusual breeding site of Indian Peafowl". Newsletter for Birdwatchers 34 (6): 139. https://archive.org/stream/NLBW34_6#page/n21/mode/1up. 
  33. Shivrajkumar, Y.S. (1957). "An incubating Peacock (Pavo cristatus Linn.)". Journal of the Bombay Natural History Society 54 (2): 464. https://biodiversitylibrary.org/page/48183148. பார்த்த நாள்: 21 December 2017. 
  34. Singh, H. (1964). "Peahens flying up with young". Newsletter for Birdwatchers 4 (1): 14. https://archive.org/stream/NLBW4#page/n14/mode/1up. 
  35. 35.0 35.1 "Pavo cristatus (Indian peafowl)". Archived from the original on 25 September 2022. பார்க்கப்பட்ட நாள் 23 September 2022.
  36. Johnsingh, AJT (1976). "Peacocks and cobra". J. Bombay Nat. Hist. Soc. 73 (1): 214. https://biodiversitylibrary.org/page/48293205. பார்த்த நாள்: 21 December 2017. 
  37. Trivedi, Pranav; Johnsingh, AJT (1995). "Diet of Indian Peafowl Pavo cristatus Linn. in Gir Forest, Gujarat". J. Bombay Nat. Hist. Soc. 92 (2): 262–263. https://biodiversitylibrary.org/page/48613807. பார்த்த நாள்: 21 December 2017. 
  38. Chourasia, Pooja, et al. "Food habits of golden jackal (Canis aureus) and striped hyena (Hyaena hyaena) in Sariska Tiger Reserve, Western India." World Journal of Zoology 7.2 (2012): 106-112.
  39. Hayward, M. W., W. Jędrzejewski, and B. Jedrzejewska. "Prey preferences of the tiger P anthera tigris." Journal of Zoology 286.3 (2012): 221-231.
  40. Arviazhagan, C.; Arumugam, R.; Thiyagesan, K. (2007). "Food habits of leopard (panthera pardus fusca), dhole (cuon alpinus) and striped hyena (hyaena hyaena) in a tropical dry thorn forest of southern India". Journal of the Bombay Natural History Society 104: 178–187. 
  41. Gurjar, Raju Lal, Ramesh Pratap Singh, and Ashok Mishra. "Density of the Indian Peafowl Pavo cristatus in Satpura Tiger Reserve, India." Journal homepage: www. wesca. net 8.1 (2013).
  42. Dhanwatey, Amrut S (1986). "A Crested Hawk-Eagle Spizaetus cirrhatus (Gmelin) killing a Peafowl Pavo cristatus Linnaeus". J. Bombay Nat. Hist. Soc. 83 (4): 202. https://biodiversitylibrary.org/page/48772392. பார்த்த நாள்: 21 December 2017. 
  43. Tehsin, Raza; Tehsin, Fatema (1990). "Indian Great Horned Owl Bubo bubo (Linn.) and Peafowl Pavo cristatus Linn". J. Bombay Nat. Hist. Soc. 87 (2): 300. https://biodiversitylibrary.org/page/48807014. பார்த்த நாள்: 21 December 2017. 
  44. Yasmin, Shahla; Yahya, HSA (2000). "Group size and vigilance in Indian Peafowl Pavo cristatus (Linn.), Family: Phasianidae". J. Bombay Nat. Hist. Soc. 97 (3): 425–428. https://biodiversitylibrary.org/page/48567869. பார்த்த நாள்: 21 December 2017. 
  45. Flower, M.S.S. (1938). "The duration of life in animals – IV. Birds: special notes by orders and families". Proceedings of the Zoological Society of London: 195–235. 
  46. Madge S; McGowan, P (2002). Pheasant, partridges and grouse, including buttonquails, sandgrouse and allies. Christopher Helm, London. 
  47. Ramesh, K.; McGowan, P. (2009). "On the current status of Indian Peafowl Pavo cristatus (Aves: Galliformes: Phasianidae): keeping the common species common". Journal of Threatened Taxa 1 (2): 106–108. doi:10.11609/jott.o1845.106-8. 
  48. Alexander JP (1983). "Probable diazinon poisoning in peafowl: a clinical description". Vet. Rec. 113 (20): 470. doi:10.1136/vr.113.20.470. பப்மெட்:6649386. 
  49. Sahajpal, V.; Goyal, S.P. (2008). "Identification of shed or plucked origin of Indian Peafowl (Pavo cristatus) tail feathers: Preliminary findings". Science and Justice 48 (2): 76–78. doi:10.1016/j.scijus.2007.08.002. பப்மெட்:18700500. 
  50. "La Canada, California, City Council, Peafowl Management Plan Update" (PDF). Archived from the original (PDF) on 7 June 2011.
  51. "East Northamptonshire plan" (PDF). Archived from the original (PDF) on 13 June 2011.
  52. "Living with peafowl. City of Dunedin, Florida" (PDF). Archived from the original (PDF) on 21 December 2008.
  53. Fitzpatrick J (1923). "Folklore of birds and beasts of India". J. Bombay Nat. Hist. Soc. 28 (2): 562–565. https://biodiversitylibrary.org/page/30113154. பார்த்த நாள்: 21 December 2017. 
  54. 54.0 54.1 Lal, Krishna (2007). Peacock in Indian art, thought and literature. Abhinav Publications. பக். 11, 26, 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-429-5. https://books.google.com/books?id=wuotb7YyrigC. 
  55. Colin Masica (1991). The Indo-Aryan languages. Cambridge language surveys. Cambridge University Press. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-23420-7. https://archive.org/details/indoaryanlanguag0000masi. 
  56. Witzel, Michael (2002). Early Loan Words in Western Central Asia: Substrates, Migrations and Trade.. Harvard University. http://www.people.fas.harvard.edu/~witzel/C._ASIA_.pdf. பார்த்த நாள்: 11 January 2022. 
  57. Anonymous (1891). Ramavijaya (The mythological history of Rama). Bombay: Dubhashi & Co.. பக். 14. https://archive.org/stream/ramavijayathemyt00unwkuoft#page/n27/mode/1up/. 
  58. Choskyi, Ven. Jampa (1988). "Symbolism of Animals in Buddhism". Buddhist Hiamalaya 1 (1). http://ccbs.ntu.edu.tw/FULLTEXT/JR-BH/bh117490.htm. பார்த்த நாள்: 1 June 2010. 
  59. Rolland, Eugene (1915). Faune populaire de la France. Tome 6.. பக். 149. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k5433286x/f161.image. பார்த்த நாள்: 2 June 2017. 
  60. Emeneau, M.B (1943). "Studies in the Folk-Tales of India: I: Some Origin Stories of the Todas and Kotas". Journal of the American Oriental Society 63 (2): 158–168. doi:10.2307/594123. 
  61. Empson, RHW (1928). The cult of the peacock angel. HF & G Witherby, London. https://archive.org/details/MN40203ucmf_2. 
  62. Springett, BH (1922). Secret sects of Syria and the Lebanon. George Allen & Unwin Ltd., London. https://archive.org/details/secretsectsofsyr032392mbp. 
  63. Tyrberg T (2002). "The archaeological record of domesticated and tamed birds in Sweden". Acta Zoologica Cracoviensia 45: 215–231. http://www.isez.pan.krakow.pl/journals/azc_v/pdf/45/16.pdf. பார்த்த நாள்: 2 June 2010. 
  64. "Letter from the Desk of David Challinor, November 2001" (PDF). Smithsonian Institution. Archived from the original (PDF) on 27 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2 June 2010.

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pavo cristatus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மயில்&oldid=3937274" இலிருந்து மீள்விக்கப்பட்டது