இடார்வினின் மரப்பட்டைச் சிலந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடார்வினின் மரப்பட்டைச் சிலந்தி
இடார்வினின் மரப்பட்டைச் சிலந்தியின் வலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. darwini
இருசொற் பெயரீடு
Caerostris darwini
Kuntner & Agnarsson, 2010

இடார்வினின் மரப்பட்டைச் சிலந்தி (ஆங்கிலம்: Darwin's bark spider ; இலத்தின்: Caerostris darwini) வட்டமான சுருள் வடிவ வலைக் கூட்டை உருவாக்கும் ஒரு சிலந்தி இனமாகும். இவற்றின் வலை ஏனைய சிலந்திவலைகளை விட மிகப்பெரிதாக இருப்பதுடன் மிக்க வலிமையுடனும் உள்ளது. வலையின் நீளம் ஏறத்தாழ 25 மீட்டர் (82 அடி). சிலந்தி இனங்களுள் வலிமை மிக்க வலையைப் பின்னும் சிலந்தி இனமும் இதுவே ஆகும். குண்டு துளைக்காத கவசம் தயாரிக்கப்பயன்படும் கெவ்லார் எனப்படும் செயற்கை இழையை விட பத்து மடங்கு வலிமை கொண்ட இழை உள்ள வலையை இச்சிலந்தி இனம் உருவாக்குகிறது. உயிரினங்களில் இருந்து தருவிக்கப்படும் பொருட்களுக்குள் மிக்க வலிமையானதும் இதுவேயாகும்.

ஆற்றின் மேலே காணப்படும் இடார்வினின் மரப்பட்டைச் சிலந்தியின் வலை
Bark spider showing how exoskeleton looks like bark
Bark spider showing eyes

இவை மரத்தின் கொப்பு, முள், காய்ந்த மரப்பட்டை போன்றவற்றைப் போல உருமறைந்து காணப்படுவதால், மரப்பட்டைச் சிலந்தி என்று அழைக்கப்படுகின்றன.[1] ஆறு, அருவி, ஏரி உள்ள இடங்களில் இவை தமது இருப்பிடத்தைக் கொண்டுள்ளன. ஆற்றின் மேலே வலைகளைப் பின்னுவதன் மூலம் அங்கு பறக்கும் ஈ இனங்களைப் பிடித்து உணவுக்குப் பயன்படுத்துகின்றன. இவை எவ்வாறு மிகப்பெரிய வலையை ஆற்றின் மேலே அமைக்கின்றன, ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு எவ்வாறு தொடுக்கின்றன என்பவற்றை அறிவியல் நிபுணர்கள் ஆராய்கின்றனர்.

பெண் சிலந்தி இனங்கள் இரண்டு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவும் (ஏறத்தாழ 18 மில்லிமீட்டர்) ஆண்கள் பெண்களின் அளவிலும் 3 - 5 மடங்கு குறைவானதும் (ஏறத்தாழ 6 மில்லிமீட்டர்) ஆகும்.

மடகாஸ்கரில் ரனோமஃபானா தேசிய வனப்பூங்காவில் ஓடும் நமோரோனா ஆற்றில் (21°15’S, 47°25’E. ) மற்றும் அண்டாசிப்-மண்டாடிடா தேசிய வனப்பூங்காவில் முதன்முறையாக அறியப்பட்டது. பேராசிரியர் அக்னார்சன் (Agnarsson) மற்றும் அவரது சகா மட்ஜாஸ் குன்ட்னேர் ( Matjaz Kuntner) ஆகியோர் இதனைக் கண்டுபிடித்தனர்.[2]

இவ்வினத்தைப் பற்றிய விவர அறிக்கை 24 நவம்பர் 2009இல் டார்வினின் “இனங்களின் தோற்றம்” எனும் நூலின் 150வது தினத்தைக் கொண்டாடும் வண்ணம் வெளியிடப்பட்டது, டார்வினின் 200வது பிறந்ததினத்தை முன்னிட்டு கௌரவப்படுத்தும் நோக்கில் அவரது பெயரில் இச்சிலந்தியின் இனப்பெயர் இடப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Matjaž Kuntner & Ingi Agnarsson (2010). "Web gigantism in Darwin's bark spider, a new species from Madagascar (Araneidae: Caerostris)" (PDF). The Journal of Arachnology (American Arachnological Society) 38: 346–356. http://www.nephilidae.com/mk/articles/Kuntner&Agnarsson2010.pdf. பார்த்த நாள்: 2022-05-16. 
  2. Matt Walker (16 September 2010). "Gigantic spider's web discovered in Madagascar". BBC News. http://news.bbc.co.uk/earth/hi/earth_news/newsid_9001000/9001866.stm. பார்த்த நாள்: 17 September 2010.