கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுப்புட்னிக் 2 புவிச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும். 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலத்தில் லைக்கா என்னும் பெயருடைய நாய் ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது. ஒரு விண்கலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட முதல் உயிருள்ள விலங்கு இதுவாகும். இக் கலம் 4 மீட்டர் (13 அடி) உயரமும், 2 மீட்டர் (6.5 அடி) அடி விட்டமும் கொண்ட ஒரு கூம்பு வடிவம் கொண்டது. இது பல ஒலிபரப்பி, தொலைஅளவைத் தொகுதி, கட்டுப்பாட்டு மையம், வெப்பநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதி, பல அறிவியற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூடப்பட அறையில் லைக்கா வைக்கப்பட்டது.
பொறியியல், உயிரியல் ஆகியன தொடர்பான தரவுகள் டிரால் டி என்னும் தொலையளவுத் தொகுதியால், ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நிமிட காலம் தரவுகள் புவிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சூரியக் கதிர்வீச்சையும், அண்டக் கதிர்வீச்சையும் அளப்பதற்காக இரண்டு ஒளிமானிகள் கலத்தில் இருந்தன.