ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆஸ்திரேலிய அரசியலமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு
வரையப்பட்டது 1898-1900
உறுதிப்படுத்தப்பட்டது 9 ஜூலை 1900
அமைவிடம் ஆஸ்திரேலியாவின் தேசிய ஆவணக்காப்பகம், கான்பரா, ஆஸ்திரேலியா
வரைவாளர்கள் ஆண்ட்ரூ கிளார்க், மற்றும் ஏனையோர்
கையெழுத்திட்டோர் ஆஸ்திரேலிய மாநிலங்களின் முதலமைச்சர்கள்
நோக்கம் ஆஸ்திரேலியக் காலனிகளை ஒரு நாடாக ஒன்றிணைத்தல், மற்றும் ஆஸ்திரேலிய பொதுநலவாய அரசிற்கான சட்டங்களை இயற்றுதல்

ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு (Constitution of Australia) என்பது ஆஸ்திரேலிய அரசாங்கம் செயற்படுவதற்கான சட்டம் ஆகும். இச்சட்டம் பல ஆவணங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் முக்கியமானது பொதுநலவாய ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு ஆகும். இவ்வரசியலமைப்பு 1898-1900 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து மாநிலங்களிலும் இருந்து பொதுமக்கள் அளித்த வாக்குகளை அடுத்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான நகல் சட்டம் பொதுநலவாய ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்புச் சட்டம் 1900 என்ற பெயரில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாக ஆக்கப்பட்டது.

இதற்கான அரச ஆணை விக்டோரியா மகாராணியினால் 1900, ஜூலை 9 ஆம் நாளன்று கையெழுத்திடப்பட்டு, சட்டபூர்வமாக்கப்பட்டது. இச்சட்டம் ஆஸ்திரேலியா முழுவதும் 1901 ஆம் ஆண்டு ஜனவரி 1 இலிருந்து நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இச்சட்டம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தினால் சட்டபூர்வமாக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஆஸ்திரேலியா விடுதலை அடைந்த நாடாக இருப்பதால், ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் இச்சட்டத்தை மாற்றுவதற்கோ, இல்லாமல் ஆக்குவதற்கோ எவ்வித உரிமையையும் கொண்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய மக்களின் வாக்கெடுப்பு மூலமே மாற்ற முடியும்.

இவ்வரசியலமைப்புச் சட்டத்தின் ஏனைய சில பிரிவுகள் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இவற்றில் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் குறிப்பிடத்தக்கது. இச்சட்டம் பொதுநலவாயத்தினால் 1942 ஆம் ஆண்டிலும், பின்னர் ஆஸ்திரேலியச் சட்டம் 1986 என்ற சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இவற்றிம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்த அனைத்து சட்டபூர்வமான இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. ஆனாலும் இரண்டாம் எலிசபெத் மகாராணி இரு நாடுகளுக்கும் அரசியாகத் தொடர்ந்திருக்க சட்டம் அனுமதித்தது.

வெளி இணைப்புகள்[தொகு]