ஆவியூர், விருதுநகர்

ஆள்கூறுகள்: 9°44′26″N 78°05′59″E / 9.7404955°N 78.0998218°E / 9.7404955; 78.0998218
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவியூர்
ஆவியூர்
இருப்பிடம்: ஆவியூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°44′26″N 78°05′59″E / 9.7404955°N 78.0998218°E / 9.7404955; 78.0998218
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஆவியூர் (ஆங்கிலம்:Aviyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் காரியாப்பட்டி வட்டத்திலுள்ள ஊர் ஆகும்[4].[5][6][7] மதுரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், காரியாப்பட்டி செல்லும் வழியில் ஆவியூர் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு கிடைத்த சான்றுகளின்படி இந்த ஊர் வரலாற்றுக்கு (??) முந்தைய காலத்தை சேர்ந்தது என தொல்பொருள் வல்லுனர்கள் கூறுகின்றனர். இங்கு 60 அடி கம்பத்தடியான் பெருமாள் கோவில், சின்னக்கருப்பசாமி கொத்தாளம் கோவில், செல்லாயி அம்மன் கோவில், ஆவியூர் மார்நாட்டு பெரிய கருப்பசாமி கோவில், சின்னகருப்பசாமி கோவில், D.கடமங்குளம் ஆவியூர் ரெட்டகருப்பசாமி கோவில், ஆவியூர் மாணிக்கவாசகர் அய்யனார் திருக்கோவில்கள் உள்ளன. இங்கு சின்னகருப்பசாமி பங்குனி உற்சவத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆவியூர் வடக்குத்தெரு கல்வாடி ஜல்லிக்கட்டு நடைபெறும். மாசி கழரியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அழகிய பெருமாள் பெரியகருப்பசாமி கோவில் ஆவியூர் தெற்கு தெரு ஜல்லிக்கட்டு நடைபெறும். மாணிக்கவாசக அய்யனார் கோவில் பங்குனி கழரியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆவியூர் கிழக்கு வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆவியூருக்கு அருகில் குரண்டி என்ற பெயருடைய ஊரில் சமணர் குகை உள்ளது.

நரியைப் பரியாக்கிய ஆவியூர்[தொகு]

பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த வாதவூரடிகள் அராபிய வணிகரிடம் குதிரை வாங்கக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கு சிவபெருமான் குருந்த மரத்தடியில் குரு வடிவாக எழுந்தருளி இவருக்கு உபதேசம் செய்தார். வந்த வேலையை மறந்து இறைவனுக்கு ஆலயம் எழுப்புவதில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள் அனைத்தையும் செலவிட்டார். அப்படி கட்டப்பட்டது தான் ஆவுடையார் கோவில். அரசனிடமிருந்து அழைப்பு வந்ததும், சிவனிடம் முறையிட, பெருமானும் நரிகளைப் பரியாக்கிக் குதிரைச் சேவகனாக வந்து பாண்டியனிடம் ஒப்புவித்துச் சென்றார். இரவில் அக்குதிரைகள் மீண்டும் நரியாயின. அது கண்டு சினந்த அரசன் மாணிக்கவாசகரைச் சிறையிலிட்டான். பின் இறைவன் மாணிக்கவாசகரின் பெருமையை அரசனும் பிறரும் உணருமாறு, வைகையில் வெள்ளம் தோற்றுவித்துத் திருவிளையாடல் புரிந்தார்.

இந்த நிகழ்ச்சி திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் இதற்கு அவரது திருவாசகத்தில் அகச்சான்று உள்ளதா? ஆராய்வோம்.

திருவாசகத்தில் 3 இடங்களில் நரியைப் பரியாக்கிய விபரம் கூறப்பட்டுள்ளது.

கீர்த்த்தித் திருவகவல் 36-ஆவது வரியில் – “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்.”

திருவேசறவு 1-“நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே.”

ஆனந்தமாலை 7- “நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்தாய்.”

இந்த நரியை பரியாக்கிய இடம் இன்று உள்ள ஆவியூர் விருதுநகர் மாவட்டம். இங்கு இன்றளவும் மாணிக்கவாசகருக்குக் கோவில் உள்ளது. குதிரையை கொண்டு வந்து கொடுத்த சிவபெருமான் நொண்டி சாமி என்று பெயருடன் காட்சி அளிக்கிறார். பாண்டிய மன்னனை வெற்றி கொண்ட ராஜேந்திர சோழன் இந்த ஊரின் பெருமையை போற்ற மாணிக்க வாசகர் அமைத்த ஆவுடையார் கோவில் போன்றே இங்கு லிங்கம் இல்லா ஆவுடையை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார். இத்தனை புகழ் பெற்ற ஊர் ஆவியூர்.

இன்றளவும் மாணிக்கவாசகரை குலதெய்வமாக கொண்ட மக்கள் இங்கு உண்டு.

புவியியல் அமைப்பு[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9° 44' N , 78° 6' E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123 மீட்டர் (412 அடி) உயரத்தில் இருக்கின்றது.

சிவன் கோவில்[தொகு]

சோழ அரசன் இராஜராஜ சோழனிடம் பாண்டிய மன்னர்கள் போரில் தோற்றனர். பாண்டிய நாடு சோழர்கள் வசமானது.இந்த பகுதியை நிர்வகிக்க இராஜேந்திர சோழனை அரசப் பிரதிநிதியாக முதலாம் இராஜராஜ சோழன் நியமித்தார். ராஜேந்திர சோழனின் தலைமையில் இந்த சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த சிவன் கோவில் ராஜேந்திர சோழனின் பெயரால் ராஜேந்திர சோழீச்சுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கர்ப்பகிரகமும், அர்த்தமண்டபமும் காணப்படுகின்றன. இந்த கோவிலின் விமானம் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. பின்னர் அரசாண்ட பாண்டிய மன்னர்கள் கோவிலுக்கு சுற்று சுவர் எடுத்து, சிவலிங்கத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

கல்வெட்டுக்கள்[தொகு]

இந்த கோவிலின் வடக்கு சுற்றுச் சுவரில் பிற்காலப் பாண்டிய மன்னர்களை பற்றிய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவற்றில் 1246-ஆம் ஆண்டு முதலாம் ஜடாவர்ம விக்கிரம பாண்டிய மன்னனை பற்றியும், 1250-ஆம் ஆண்டு இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியனை பற்றிய குறிப்பும் காணப்படுகின்றன இந்த கல்வெட்டுக்களில் இந்த ஊர் வயலூர் நாடு என குறிப்பிடுகிறது. இந்த சிவன் கோவில் ராஜேந்திர சோழீச்சுரம் என அழைக்கப்படுகிறது. இந்த ஊர் மக்கள் சிறு வணிகர்களிடம் வரி வசூல் செய்து இந்த கோவிலை மேம்படுத்தி உள்ளனர். இன்னொரு கல்வெட்டின் பொதியன் செய்துங்க நாடாள்வான் என்பவரால் நிறுவப்பட்ட காமகோடா நாச்சியார் என்ற உமா தேவி சிலை உள்ளது. இந்த கோவிலுக்கு உரிய நிலம் அழகு அருளாள பெருமான் என்ற சோழ கங்கா தேவன் என்பவரால் 2 காணி நிலம் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது என இந்த கல்வெட்டு கூறும் செய்தி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-08. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவியூர்,_விருதுநகர்&oldid=3690277" இலிருந்து மீள்விக்கப்பட்டது