ஆவியர்
ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவியர் குடியினர் “அருந்திறல் அணங்கின் ஆவியர்” எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது.
இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். ‘முருகன் நற்பேர் ஆவி’ என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [2] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். வையாவிக்கோப் பெரும்பேகன் [3] [4] வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பாட்டுடைத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். இவனது தந்தை இரண்டாம் பத்தின் தலைவன் சேரலாதன். தாய் வேளாவிக்கோமான் பதுமன் என்பானின் தேவி. [5] பதற்றுப்பத்து ஆறாம் பத்தின் தலைவன் ஆடுகோடுபாட்டுச் சேரலாதன். இவனது தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன். தாய் வேளாவிக் கோமான் என்பவனின் தேவி.[6]
தேவி என்னும் சொல்லைச் சங்கப்பாடல்களைத் தொகுத்தவர்கள் அரசன் மகள் இளவரசியைக் குறிக்கும் வகையில் இங்குப் பயன்படுத்தியுள்ளனர்.[7] இச்சொல்லை மனைவியைக் குறிக்கப் பயன்படுத்தும்போது பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு என்று விளங்கும் வகையில் குறிப்பிட்டுள்ளர். கோப்பெருந்தேவி என்று பாண்டியன் மனைவியைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [8]