ஆப்கான் சோவியத் போர்
ஆப்கான் சோவியத் போர் என்பது சோவியத் ஒன்றிய இராணுவத்திற்கும் ஆப்கானிஸ்தான் இடது சாரி அரசுக்கு எதிராக்க் கிளர்ச்சி செய்த இசுலாமிய முஜாஹிதீன் புரட்சியாளர்களுக்கும் இடையே ஆப்கானிஸ்தானில் நடந்த பத்து ஆண்டு சண்டை ஆகும். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஆப்கான் மக்களாட்சிக் குடியரசின் ஆளும் இடது சாரி அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி சோவியத் ஒன்றியம் தனது படைகளை அனுப்பியபது. முஜாஹிதீன் அமைப்பினருக்கு பனிப்போர் காலத்திய சூழ்நிலைக்கேற்ப அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சவுதி அரேபியா, பாக்கித்தான், எகிப்து மற்றும் வேறு சில இசுலாமிய நாடுகளிடம் இருந்து ஆதரவு கிடைத்த்து. லியோனிட் பிரெஷ்னெவ் தலைமையிலான சோவியத் ஒன்றிய அரசு தனது 40வது படைப்பிரிவை, 24 டிசம்பர் 1979 அன்று அனுப்பி வைத்த்தன் மூலம் போர் ஆரம்பமானது. மிக்கைல் கொர்பசோவ் தலைமையிலான சோவியத் ஒன்றிய அரசு 15 பிப்ரவரி 1989 அன்று தனது படைகளை முழுவதுமாகத் திரும்ப்ப் பெற்றுக்கொண்டதன் மூலம் போர் முடிவுக்கு வந்தது. ஆப்கான் சோவியத் போர் முடிவுக்கு வந்த்தும் ஆப்கான் அரசுக்கும் முஜாஹிதீன் அமைப்பினருக்கும் இடையே கடுமையான ஆப்கான் உள்நாட்டுப் போர் மூண்டது.