ஆசியா
| பரப்பளவு | 4,45,79,000 கிமீ2 (1 ச மைல்)[1] |
|---|---|
| மக்கள்தொகை | 3,879,000,000 (1வது)[2] |
| மக். அடர்த்தி | 87/km2 (225/sq mi) |
| மக்கள் | ஆசியர் |
| நாடுகள் | 48 (நாடுகளின் பட்டியல்) |
| சார்ந்துள்ளவை |
பட்டியல்
|
| ஏற்புப்பெறாத பகுதிகள் |
பட்டியல்
|
| மொழிகள் | மொழிகளின் பட்டியல் |
| நேர வலயங்கள் | UTC+2 to UTC+12 |
| இணைய TLD | .asia |
| பெரும் நகரங்கள் | மக்கள்தொகை அடிப்படையில் பெருநகரப் பகுதிகளின் பட்டியல்
பட்டியல்
|
ஆசியா உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.[3]
பொதுவாக ஆசியா யுரேசியாவின் கிழக்கு ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.[4][5] கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.
ஆசியா என்னும் இடப்பெயர் மிகப் பழமையானது. இதன் அளவு, பல்வகைமைத் தன்மை என்பவற்றை நோக்கும்போது, இது பல்வேறுபட்ட பகுதிகளையும், மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் கருத்துவேயன்றி, ஒருதன்மைத்தான இயற்பியப் பொருள் அல்ல.[6] ஆசியாவில் பல்வேறு பகுதிகளும் மக்களும், இனக்குழுக்கள், பண்பாடு, சூழல், பொருளாதாரம், வரலாற்றுப் பிணைப்பு, அரசியல் முறைமை போன்ற விடயங்களில் தமக்குள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன.
பொருளடக்கம் |
வரைவிலக்கணமும் எல்லைகளும் [தொகு]
கிரேக்கரின் மூன்று கண்ட முறை [தொகு]
ஆசியாவையும், ஐரோப்பாவையும் முதலில் வேறுபடுத்தி அறிந்தவர்கள் பண்டைக் கிரேக்கர்கள் ஆவர். அவர்கள், ஏஜியக் கடல், டார்டனெல்சு, மர்மாராக் கடல், பொசுப்போரசு, கருங்கடல், கெர்ச் நீரிணை, அசாவ் கடல் ஆகியவற்றை ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான எல்லையாகக் கொண்டனர். நைல் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாகக் கொள்ளப்பட்டது. எனினும், சில கிரேக்கப் புவியியலாளர் செங்கடல் பொருத்தமான எல்லையாக இருக்கும் எனக் கருதினர்.[7] நைல் ஆற்றுக்கும், செங்கடலுக்கும் இடையில் இருந்த டேரியசுக் கால்வாய், பெரும்பாலான கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம் ஆகியது. கருங்கடலுட் கலக்கும் டொன் ஆறு ஆசியாவின் மேற்கு எல்லையாக அமைந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நைல் ஆற்றுக்குப் பதிலாக செங்கடலே ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக நிலைபெற்றது. தொடக்கத்தில் ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லை ஆர்க்டிக் பெருங்கடல் வரை எட்டவில்லை.[7] ஆனால், நாடுகாண் பயணங்கள் வளர்ச்சியடைந்த பின்னர் இவ்வெல்லையை மீள்வரையறை செய்யவேண்டி ஏற்பட்டது.
ஆசியா-ஐரோப்பா எல்லை [தொகு]
சாரக உருசியாவின் மன்னனான பேரரசர் பீட்டர், சுவீடனும் ஓட்டோமான் பேரரசும் கிழக்குப் பகுதி நிலங்களுக்கு உரிமை கொண்டாடியதை முறியடித்ததுடன், சைபீரியப் பழங்குடியினரின் ஆயுத எதிர்ப்புக்களையும் முறியடித்து 1721ல் உருசியப் பேரரசை உருவாக்கினான். இப் பேரரசு ஊரல் மலைகளை எட்டி அதற்கு அப்பாலும் பரந்திருந்தது. இதனால், டான் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக இருந்தது வட ஐரோப்பியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அக்காலத்தில் உருசியப் பேரரசின் முக்கியமான புவியியல் கோட்பாட்டாளராக இருந்தவர் வொன் இசுட்ராலென்பேர்க். போல்ட்டாவா சண்டையில் பிடிபட்ட ஒரு சுவீடியப் போர்க்கைதி. இவருக்குப் பீட்டரின் சைபீரிய அலுவலரான வசிலி டாட்டிசுச்சேவ் என்பவரின் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் எதிர்கால நூல் ஒன்றுக்காகப் புவியியல், மானிடவியல் ஆகியவை தொடர்பிலான ஆய்வுகளைச் செய்வதற்குச் சுதந்திரம் கிடைத்தது.
1730ல், பீட்டர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், சுவீடனுக்குத் திரும்பிய வொன் இசுட்ராலென்பேர்க் ஆசியாவில் எல்லையாக ஊரல் மலைகளைக் குறித்துப் புதிய நிலப்படத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். புவியியல் அடிப்படையிலும், பிற பண்பாட்டுப் பாரம்பரிய அடிப்படையிலும் தமது ஐரோப்பிய அடையாளத்தை வைத்திருப்பதனால், இக்கருத்துரு குறித்து உருசியர்கள் அதிக உற்சாகம் காட்டினர். இந்தக் கருத்தைத் தானே வொன் இசுட்ராலென்பேர்க்குக் கூறியதாக டாட்டிசுச்சேவ் அறிவித்தார். எம்பா ஆறே கீழ் எல்லையாக இருக்கவேண்டும் என வொன் இசுட்ராலென்பேர்க் ஆலோசனை கூறினார். அடுத்த நூற்றாண்டு முழுவதும் பல்வேறு முன்மொழிவுகள் வெளியாயின. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஊரல் ஆறே எல்லை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எல்லை கருங்கடலில் இருந்து, கசுப்பியன் கடலுக்கு நகர்த்தப்பட்டது.[8] அக்காலத்து நிலப்படங்களில் டிரான்சுகாக்கேசியா ஆசியாக் கண்டத்துள் இருந்தது. அப்பகுதியின் பெரும்பகுதி பின்னர் சோவியத் ஒன்றியத்தினுள் சேர்த்துக்கொள்ளப்பட்டதால், எல்லையை தெற்கே நகர்த்தவேண்டும் என்னும் கருத்து எழுந்தது.
ஆசியா-ஓசானியா எல்லை [தொகு]
ஆசியாவுக்கும் ஓசானியாவுக்கும் இடையிலான எல்லை மலாயத் தீவுக்கூட்டங்களில் ஓரிடத்தில் வைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ""தென்கிழக்கு ஆசியாவும் ஓசானியாவும்" என்னும் தொடர், அது உருவான காலத்தில் இருந்தே பல்வேறுபட்ட புவியியல் பொருள்களை உடையதாக இருந்தது. எவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுத்தபோதிலும் ஓசானியா என்றும் ஆசியாவாக இருந்ததில்லை. மலாயத் தீவுக்கூட்டங்களில் எந்தத் தீவு ஆசியாவுக்குள் அமையும் என்பது, இத் தீவுகள் மீது பல்வேறு பேரரசுகள் கொண்டிருந்த குடியேற்றவாத உரிமைகளில் தங்கியிருந்தது. தென்கிழக்கு ஆசியாவின் எல்லை தற்போதைய நிலைக்குக் குறுகியது படிப்படியாக ஏற்பட்டது ஆகும்."[7]
மக்கள்தொகைப் புள்ளியியல் [தொகு]
உலகில், மனித வளர்ச்சிச் சுட்டெண் மிகக் கூடுதலாக வளர்ந்திருப்பது கிழக்காசியாவிலேயே ஆகும். முன்னேற்றம் நலவியல், கல்வி, வருமானம் என்பவை தொடர்பிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கடந்த 40 ஆண்டுகளில் சராசரி மனித வளர்ச்சிச் சுட்டெண் இரண்டு மடங்காகியுள்ளது. 1970ல் இருந்து மனித வளர்ச்சிச் சுட்டெண் மேம்பாட்டின் அடிப்படையில் உலகில் இரண்டாவது நிலையில் இருக்கும் சீனாவே, கல்வி, நலவியல் ஆகியவற்றில் அல்லாது வருமான அடிப்படையில் மட்டும் முதல் பத்துக்குள் அடங்கிய ஒரே நாடு ஆகும். சீனாவின் தலைக்குரிய வருமானம் கடந்த நான்கு பத்தாண்டுகளில் 21 மடங்கு ஆகியுள்ளதுடன், இக்காலப் பகுதியில் பல நூறு மில்லியன் மக்களை வறுமை நிலையில் இருந்து உயர்த்தியுள்ளது. இருந்தாலும், பள்ளிச் சேர்க்கை, வாழ்நாள் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் சீனா இப்பகுதியின் சிறப்பான வளர்ச்சி பெற்ற நாடுகளுள் அடங்கவில்லை.[9]
1970 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக நலவியல், கல்வி ஆகியவற்றின் மேம்பாட்டின் அடிப்படையில் விரைவாக வளரும் நாடாகத் தென்னாசிய நாடான நேப்பாளம் விளங்குகிறது. இதன் தற்போதைய வாழ்நாள் எதிர்பார்ப்பு 1970 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 25 ஆண்டுகள் கூடுதலானது. நேப்பாளத்தில் பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள ஐந்து சிறுவர்களில் நான்குக்கும் கூடுதலானவர்கள் இப்போது தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஐந்து பேருக்கு ஒருவராகவே இருந்தது.[9]
மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் சப்பானும், தென்கொரியாவும் முறையே 11, 12 ஆவது இடங்களில் உள்ளன. இவை மிக உயர்ந்த மனித வளர்ச்சி வகைக்குள் அடங்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து, ஆங்காங் 21 ஆவது இடத்திலும், சிங்கப்பூர் 27 ஆவது இடத்திலும் உள்ளன. ஆப்கானித்தான் மதிப்பிடப்பட்ட 169 நாடுகளுள் 155 ஆவது இடத்தைப் பெற்று, ஆசிய நாடுகளுள் மிகக் கீழான நிலையில் உள்ளது.[9]
மொழிகள் [தொகு]
ஆசியாவில் பல மொழிக் குடும்பங்களும், தனித்த மொழிகளும் உள்ளன. பெரும்பாலான ஆசிய நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தாயக மொழிகள் பேசப்படுகின்றன. "எத்னாலாக்" தரும் தகவல்களின்படி, இந்தியாவில் 800க்கு மேற்பட்ட மொழிகளும், இந்தோனீசியாவில் 600க்கு மேற்பட்ட மொழிகளும், பிலிப்பைன்சில் 100க்கு மேற்பட்ட மொழிகளும் பேசப்படுகின்றன. சீனாவில் அதன் பல்வேறு மாகாணங்களிலும் பல மொழிகளும், கிளை மொழிகளும் பேசப்படுகின்றன.
மதங்கள் [தொகு]
ஆசியத் தொன்மவியல் சிக்கலானதும் பல்வகைப்பட்டதும் ஆகும். பெரு வெள்ளம் குறித்து கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டில் வரும் கதை, மெசொப்பொத்தேமியத் தொன்மமான கில்கமேசு இதிகாசத்தில் முதன்முதலாகக் காணப்படுகிறது. இந்துப் புராணங்கள் கூறும் விட்டுணுவின் மீன் அவதாரம், மனுவுக்குப் பெரு வெள்ளம் குறித்து எச்சரிக்கை செய்கிறது.
ஏறத்தாழ எல்லா ஆசிய மதங்களும் மெய்யியல் தன்மை கொண்டவை. அத்துடன், ஆசியாவின் மெய்யியல் மரபுகள் பல வகைத்தான மெய்யியல் சிந்தனைகளையும், எழுத்துக்களையும் உள்ளடக்குகின்றன. இந்திய மெய்யியல், இந்து மெய்யியல், பௌத்த மெய்யியல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. இவை, பொருள்சாரா கூறுகளைத் தம்முள் கொண்டவை. அதேவேளை இந்தியாவில், பொருள் இன்பத்தை முன்னிலைப்படுத்தும் சார்வாகம் போன்ற மதங்களும் உள்ளன.
ஆசியாவின் ஒரு பகுதியான மையக்கிழக்கில் தோன்றிய இசுலாம் பல ஆசிய நாடுகளில் முதன்மை மதமாக உள்ளதுடன் ஏறத்தாழ எல்லா ஆசிய நாடுகளிலும் இசுலாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். குடியேற்றவாதக் காலத்துக்குப் பின்னர், பல ஆசிய நாடுகளில் கிறித்தவமும் பரவியுள்ளது.
ஆசிய நாடுகள் [தொகு]
குறிப்புகள் [தொகு]
- ↑ National Geographic Family Reference Atlas of the World. Washington, D.C.: National Geographic Society (U.S.). 2006. p. 264.
- ↑ "Continents of the World". The List. Worldatlas.com. மூல முகவரியிலிருந்து 22 July 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 July 2011.
- ↑ "Like herrings in a barrel". The Economist (The Economist online, The Economist Group) (Millennium issue: Population). 23 December 1999. http://www.economist.com/diversions/millennium/displayStory.cfm?Story_ID=346605..
- ↑ "Asia". eb.com, Encyclopædia Britannica. (2006). Chicago: Encyclopædia Britannica, Inc..
- ↑ National Geographic Atlas of the World (7th ed.). Washington, DC: National Geographic. 1999. ISBN 978-0-7922-7528-2. "Europe" (pp. 68–9); "Asia" (pp. 90–1): "A commonly accepted division between Asia and Europe is formed by the Ural Mountains, Ural River, Caspian Sea, Caucasus Mountains, and the Black Sea with its outlets, the Bosporus and Dardanelles."
- ↑ "Asia". AccessScience. McGraw-Hill. பார்த்த நாள் 26 July 2011.
- ↑ 7.0 7.1 7.2 Lewis & Wigen 1997, pp. 170–173
- ↑ Lewis & Wigen 1997, pp. 27–28
- ↑ 9.0 9.1 9.2 "2010 Human Development Report: Asian countries lead development progress over 40 years". UNDP. பார்த்த நாள் 2010-12-22.
மேலும் பார்க்க [தொகு]
| உலகின் கண்டங்கள் |
|---|
| உலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க |
|
||||||||||||||||||||