அவியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவியன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் இவனது கொடையைப் பாராட்டிப் பாடியுள்ளார். அந்தப் பாடல் புறநானூறு 383-ஆம் பாடலாக உள்ளது.

இந்தப் பாடலில் இவன் 'கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன்' என்று இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான்.

புலவர் கோழி கூவும் விடியலில் அவியனின் வாயிலில் நின்றுகொண்டு அவனது பகடுகளை வாழ்த்திப் பாடினாராம். (அவியன் அரசனாகவோ, உழவனாகவோ இருக்கலாம். அரசனாயின் பகடு என்பதற்கு யானைப்படை என்றும், உழவனாயின் உழும் எருது என்றும் நாம் எண்ணிக்கொள்ள வேண்டும்.)

அவன் வெளியே வந்தானாம். அப்போது அவன் மனைவியும் அவன் பின்புறம் அவனைத் தழுவிக்கொண்டே வந்தாளாம்.

அவியன் புலவருக்குப் புத்தாடை அணிவித்துப் போற்றினானாம். அவன் அணிவித்த ஆடை பாம்பு உரித்த தோல் போலவும், மூங்கிலில் உரியும் தோல் போலவும் இருந்ததாம்.

அந்தப் புலவர்க்கு அவன் ஒருவனின் கொடை போதுமாம். கொடைக்காகப் பிறரை நாடிச் செல்லமாட்டேன் என்று புலவர் பாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவியன்&oldid=804275" இலிருந்து மீள்விக்கப்பட்டது