அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட்
Alexander von Humboldt
பிறப்புசெப்டம்பர் 14, 1769
பெர்லின், புருசிய இராச்சியம் (புனித உரோமைப் பேரரசு)
இறப்பு6 மே 1859(1859-05-06) (அகவை 89)
பெர்லின், புருசிய இராச்சியம் (செருமனி]]
தேசியம்செருமனியர்
துறைபுவியியல்
கல்வி கற்ற இடங்கள்பிரைபேர்க் கல்லூரி (பட்டயம், 1792)
பிராங்க்பூர்ட் பல்கலைக்கழகம்
கோட்டிங்கன் பல்கலைக்கழகம்
பெர்லின் பல்கலைக்கழகம்[1]
குறிப்பிடத்தக்க மாணவர்கள்அகாசி லுயி[2]
அறியப்படுவதுஉயிர்ப்புவியியல்
தாக்கம் 
செலுத்தியோர்
பிரீடரிக் ஷெல்லிங்[1][3]
பின்பற்றுவோர்டார்வின், வாலேசு, தூரோ, விட்மன், எமர்சன், இர்விங்
விருதுகள்கோப்லி விருது (1852)
கையொப்பம்

அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் (Alexander von Humboldt, 14 செப்டம்பர் 1769 – 6 மே 1859). ஒரு புருசியப் புவியியலாளர், இயற்கை அறிவியலாளர், நாடுகாண் பயணி. தனது அறிவியல் பயணத்தைப் பற்றி காஸ்மோஸ் என்ற நூலாக கூம்போல்ட் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக எழுதிய முப்பது நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஆங்கிலத்தில் மூன்று முறை இவையாவும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது நூல்கள் பல இளம் அறிவியல் அறிஞர்களைத் தோற்றுவிக்க உதவியது, குறிப்பாக, பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிமுகப்படுத்திய டார்வினை இவரது எழுத்துக்கள் ஊக்குவித்தது. நான் தற்போது ஹம்போல்ட்டைப் படிக்க மட்டுமே பொருத்தமாக இருக்கிறேன்; அவர் இன்னொரு சூரியனைப் போல நான் பார்க்கும் அனைத்தையும் ஒளிரச் செய்கிறார் என்று தம் இளவயதில் தான் வழிகாட்டியாகக் கொண்ட கூம்போல்ட்டைப் பற்றி அவரது அஞ்சல் நண்பரான டார்வின் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். டார்வின் தனது அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூலை வெளியிட்ட காலத்தில் ஹம்போல்ட் புகழின் உச்சியில் இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு:[தொகு]

A portrait of Humboldt by Friedrich Georg Weitsch, 1806

ஜெர்மனி நாட்டின் அறிவியல் அறிஞரான இவர் 1769 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள், பெர்லின் நகரில் அலெக்ஸாண்டர் ஜார்ஜ் வோன் ஹம்போல்ட் என்ற அரசு அதிகாரிக்கும், 'மேரி எலிசபெத் என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக, ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அறிவியியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது உடலில் ஏற்பட்ட புண்ணில் மின்முனைகளைப் (electrode) பொருத்தி மின்சாரத்தைச் செலுத்தி உடலில் ஏற்படும் மாறுதலை ஆராயும் அளவிற்கு அறிவியலில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

அக்கால ஐரோப்பிய அறிவியல் அறிஞர்கள் கொண்ட அறிவியல் தத்துவங்கள் என்ற கருத்துக் கோட்பாட்டின்வழி, அறிவியல் அறிஞராக வேண்டுமானால் புத்தகங்களில் இருந்தும், நூலகங்களில் இருந்தும், ஆய்வுக்கூடங்களில் இருந்தும் விடுபட்டு, உலகைச் சுற்றி வந்து ஆய்வு நடத்தி, இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற முறையைப் பின்பற்ற விரும்பினார். நிலக்கரி சுரங்கம், சுரங்க ஆய்வு போன்றவற்றைத் தானாகவே தன்னார்வமுடன் பயின்று நிலவியலாளராகப். அவர் காலத்தில், அறிவியல் பல துறைகளாக உயிரியல், நிலவியல், தாவரவியல் என்றெல்லாம் தனித்தனியாகப் பலப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கவில்லை. இவரைப் போன்ற முன்னோடியான அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பே பின்னர் அறிவியலில் பல பிரிவுகள் ஏற்படக் காரணமாக இருந்தது. மாவீரன் நெப்போலியனுடன் எகிப்து நாட்டிற்கும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கும் சென்று ஆராய்ச்சிப் பயணம் செய்ய நினைத்த இவர் பயணம் தடைபட்டுப் போனது.

பெற்றோர்கள் மறைவிற்குப் பிறகு இவரது இளம் வயதிலேயே பரம்பரைச் சொத்து இவர் கைவசமானது. இதனால் பயணம் செய்ய பிறரின் நிதியுதவி இவருக்குத் தேவைப்படவில்லை. அறிவியல் ஆராய்ச்சியை தொடர தனது சொந்த செலவிலேயே ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டார். இவருடன் பிரெஞ்சு தாவரவியலார் அய்மி பான்பிளான்ட் என்பவரும் உடன் சென்றார். இவர்கள் சென்ற காலத்தில் உலக அரசியல் சூழ்நிலையும் இவர்களின் பயணத்திற்குச் சாதகமாக அமைந்தது. ஸ்பெயின் நாட்டின் மன்னர் தென்னமெரிக்கக் கண்டத்தை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எண்ணினார். ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கத்தால் அக்காலத்தில் தென்னமெரிக்கா இலத்தீன் அமெரிக்கா அல்லது எசுப்பானிய அமெரிக்கா என்றும் பரவலாக அழைக்கப்பட்டு வந்தது. தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் இருப்பதாகக் கருதப்பட்ட தங்கச் சுரங்கத்தை கைப்பற்றுவது, தென்னமெரிக்காவின் செல்வத்தைச் சுரண்டுவது அக்கால ஸ்பெயின் நாட்டின் குறிக்கோளாக இருந்தது. இக்கொள்கையை நிறைவேற்றும் பொருட்டு ஹம்போல்ட் பயணத்திற்கு ஸ்பெயின் மன்னர் தடையின்றி தாராளமாக அனுமதி அளித்தார்.

அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் (1799-1804):[தொகு]

Alexander von Humboldt's Latin American expedition

ஸ்பெயின் நாட்டின் சார்பாக ஹம்போல்ட் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பயணதிற்கான காலம் சரியாக ஐந்து ஆண்டுகளும் மூன்று மாதங்களும் ஆகும். இதைத் தொடர்ந்து உருவாகிய ஆராய்ச்சி முப்பது நூல்களாக வெளியிடப்பட்டன. ஏறத்தாழ 24,000 மைல்கள் கொண்டது இப்பயணம், அதாவது உலகை ஒருமுறை சுற்றிவரும் தூரம் கொண்டது இப்பயணம். இவரும் இவரது நண்பர் தாவரவியலார் அய்மி பான்பிளான்ட்டும் தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுவேலா, கொலம்பியா, எக்குவடோர், பெரு நாடுகளிலும், மற்றும் மெக்சிக்கோ, கியூபா நாட்டுப் பகுதிகளிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். அவற்றில் மிக முக்கியமான ஆராய்ச்சிகள் பெரு நாடு மற்றும் எக்குவேடார் நாட்டின் பகுதிகளில் உள்ள அந்தீசு மலைத்தொடர் பகுதிகளிலும், குறிப்பாக இக்குவேடார் நாட்டின் சிம்பராசோ என்ற உறங்கும் எரிமலை சிகரத்தின் பகுதியிலும், வெனிசுலா நாட்டுக் காடுகளிலும், அங்குள்ள ஓரினோகோ ஆற்றிலும் மேற்கொள்ளப்பட்டது. ஆர்நிக்கோ ஆற்றின் முழு நீளமும், அதன் 1,700 மைல்கள் தொலைவும் இவர்களால் ஆராயப்பட்டது. இப்பகுதியின் காடுகள் அபாயகரமான விலங்குகளாலும், கொடிய நோய்களாலும் மரணத்தைக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.

Humboldt and Bonpland in the Amazon rainforest

அப்பொழுது அக்காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள் உபயோகப்படுத்திய குரேர் தாவரம் கொண்டு உருவாக்கப்படும் நஞ்சு தடவிய அம்பு தயாரிக்கும் முறையை அவர்களிடம் இருந்து அறிந்து கொண்டார். மலேரியா நோய்க்கு மருந்தான குயினின் தயாரிக்கப் பயன்படும் சின்கோனா மரப்பட்டையைப் பற்றிய தகவலையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் பெரு கடற்கரையை ஒட்டிய பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நீரோட்டத்தையும் அதனால் பெருவிற்கு கிடைக்கும் மழைப்பொழிவைப் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர் இந்நீரோட்டம் கூம்போல்ட் நீரோட்டம் என்று இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. புதிய வகை மின்சார ஈல் மீன் இருப்பதும் இவரால் குறிப்பெடுக்கப்பட்டது. பல விலங்குகளின் தோல்கள், பற்பல பறவைகளின் சிறகுகள், ஏராளமான தாவரங்களின் இலை மற்றும் பூக்கள் என ஒரு பெரிய சேகரிப்பு இப்பகுதியில் ஹம்போல்ட்டிற்குக் கிடைத்தது. பெரு நாட்டின் பகுதியின் ஆண்ட்டீஸ் மலைத்தொடரின் பகுதி இவரால் விரிவாக வரையப்பட்டது.

Humboldt and Bonpland at the Chimborazo base

இக்குவேடார் நாட்டின் பகுதியில் உள்ள ஆண்டீஸ் மலைத்தொடரில் உள்ள சிம்பராசோ மலையின் சிகரத்தின் பல உயரங்களிலும் காற்றழுத்தம் ஹம்போல்ட்டினால் அளக்கப்பட்டது. இவர் பயணக் காலத்தில் சிம்பராசோ சிகரம்தான் உலகின் மிக உயரமான சிகரம் எனக் கருதப்பட்டது. கடலில் தொலைவில் இருந்து காணமுடிந்த இச்சிகரத்தில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை காற்றழுத்தமும் மற்ற பிற அளவுகளும் இவரால் குறிக்கப் பட்டன. ஒவ்வொரு உயரத்திலும் காணப்படும் விலங்குகளும் தாவரங்களும் இவரால் ஆவணப்படுத்தப்பட்டன. உயிரினங்களின் வகையும், அவற்றின் இருப்பும் உயரத்திற்கு ஏற்ப வேறுபடுவதை அப்பொழுது அவர் கண்டுகொண்டார். ஆனால் இவரால் சிகரத்தை அடைய முடியாமல் முயற்சியைக் கைவிட்ட பிறகு எழுபது ஆண்டுகள் கழித்தே எட்வர்ட் வைம்ப்பெர் என்ற ஆங்கிலேயர் ஒருவரால் சிம்பராசோ சிகரத்தை அடைய முடிந்தது. ஆனால் ஹம்போல்ட் வரைந்த விரிவான வரைபடங்களும் அதில் குறிக்கப்பட்ட பற்பல அளவீடுகளும் இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு என்ற அவரது கோட்பாட்டிற்கு உறுதுணையான ஆதாரங்களாக விளங்கின.

ஒத்தவெப்பநிலை வரைபடங்கள்[தொகு]

Isothermal chart of the world created by William Channing Woodbridge using Humboldt's work.

கூம்போல்ட்டின் மிக முக்கியப் பங்களிப்பு அவர் உருவாக்கிய ஒத்தவெப்பநிலை வரைபடங்கள். தனது தென்னமெரிக்க ஆராய்ச்சிப் பயணத்தில் பல அறிவியல் சோதனைக் கருவிகளை ஹம்போல்ட் தன்னுடன் எடுத்துச் சென்றார். பதினான்கு கோவேறு கழுதைகள் பொதி சுமந்து செல்லும் அளவுக்கு பெட்டிப் பெட்டியாகக் கருவிகளை எடுத்துச் சென்றார். அக்கால பிரெஞ்சு நிறுவனகள் சுற்றுச்சூழலை துல்லியமாக அளக்கும் பல்வேறு அறிவியல் உபகரணங்களை வடிவமைத்திருந்தன. கூம்போல்ட்டும் எதையம் முறையாக அளந்து துல்லியமாகக் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தும் பண்பைக் கொண்டவர். எனவே தான் சென்ற இடங்களின், ஆச்சிஜன், வானின் நீலநிறத்தின் அளவு, காற்றின் வேகம், வளிமண்டல அழுத்தம், உயரம், வெப்பநிலை, நிலத்தின் அமைப்பு, காந்தப்புலத்தின் வலிமை, ஒவ்வொரு இடத்திலும் உள்ள விலங்குகள், தாவரங்கள் அவற்றின் எண்ணிக்கை எனப் பற்பல குறிப்புகளை ஒன்றுவிடாமல் கவனமாகக் குறிப்பெடுத்து தனது வரைபடத்தில் குறித்துக் கொண்டார்.

பிறகு ஒத்த வெப்பநிலை உள்ள இடங்களின் புள்ளிகளை ஒரே கோட்டில் இணைத்தார், இவ்வாறு உருவாக்கிய படங்களுக்கு ‘ஐஸோதெர்ம்’ வரைபடங்கள் எனப்பெயரிட்டார். இவை வளைந்த கோடுகளை உடைய கோட்டோவிய வரைபடங்கள். அவ்வாறு ஒத்த இயற்கை தட்ப வெட்ப சூழ்நிலையில் வசிக்கும் உயிரினங்கள் (விலங்குகளும், தாவரங்களும்) யாவும் ஒத்திருப்பதை இக்கோட்டோவிய வரைபடம் தெளிவு படுத்தியது. அதுவரை இந்த அடிப்படைத் தகவலை, வாழுமிடங்களுக்கு ஏற்ப உயிரனங்கள் மாறுபடும் என்ற தொடர்பை அறிவியல் அறிஞர்கள் கவனிக்கத் தவறியிருந்தனர். முதன் முதலில் தரவுகளை அனைவருக்கும் விளங்கும் வண்ணம் வரைபடங்களாக வரைந்து விளக்கியவர் ஹம்போல்ட்தான். அதற்கு முந்தைய நூற்றாண்டுவரை உருவாக்கப்பட்ட ‘டோப்போக்ராஃபிக்’ என்றழைக்கப்பட்ட நிலவியல் வரைபடங்கள் இதுபோன்ற தகவல்கள் இன்றியே வரையப்பட்டு வந்தன. மேலும் இவர்காலத்தில் அச்சுகூடங்களின் தொழில் நுட்பம் சிறந்த வளர்ச்சியடைந்து இருந்ததால், வரைபடங்களை அதிக அளவில் குறைந்த விலையில் பிரதிகள் எடுப்பதும் சாத்தியாமாயிற்று.

‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு[தொகு]

அறிவியல் தகவல்களை வரைபடக் காட்சி வழியாக கூம்போல்ட் விளக்கிய முறை அறிவியலில் ஒரு திருப்புமுனை. இதனால் இயற்கை சூழலுக்கேற்ப உயிரினங்கள் வாழ்வதும் இடத்திற்கு இடம் அவை வேறுபடுவதும் தெளிவாகியது. நிலப்புவியியலுக்கு இதுவே அடிப்படை என்பதால் இவர் இத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அத்துடன் இந்தப் பங்களிப்பே சுற்றுச்சூழலியலிலும் இவரை முன்னோடியாகக் கருத வைக்கிறது. இயற்கையும், சுற்றுச்சூழலும், உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப் படவேண்டும் என்பதும், இயற்கையில் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதும் புலனாகிறது. இயற்கையில் பல்வேறு சக்திகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன. அவ்வாறு ஏற்பட்டுள்ள தொடர்பு ஓர் ஒருமைப்பாட்டுடேன் இயங்குவதால் இயற்கை சம நிலையில் இருக்கிறது என்று ஹம்போல்ட் முடிவிற்கு வந்தார். இதனை ஹம்போல்ட் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ என்று விளக்கினார்.

ஹம்போல்ட்டின் அறிவியல் பங்களிப்பு:[தொகு]

இவரது அறிவியல் கண்டுபிடிப்புகள், செய்முறைகள், பங்களிப்புகள் தற்கால அறிவியலில் பலதுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேதியியல், பொறியியல், இயற்பியல், மருத்துவம், உயிரியல், கணிதம் போன்ற துறைகள் யாவும் ஏதோ ஒரு விதத்தில் பயனடைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமாகக் கருதப்படுவது, அளவுகளை துல்லியமாகக் குறிப்பிடும் ஒத்தவெப்பநிலை வரைபடங்களும், இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடும் ஹம்போல்ட்டினால் அறிவியல் உலகத்திற்கு காட்டப்பட்டதுதான். இதுவே டார்வினின் உயிரினங்களின் தோற்றம் என்ற கோட்பாட்டிற்கு தாக்கமாக அமைந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

(1) துல்லியமாக வரைபடத்தில் அளவீடுகளைக் குறிப்பது என்பது அறிவியலில் திருப்புமுனையைக் கொண்டுவரும் அளவிற்கு ஒருமிகப்பெரிய மாற்றம் இல்லை எனவும், (2) ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற டார்வினின் கோட்பாடு போல இவரது முப்பது நூல்களிலும் விரவிக் கிடந்த ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ என்ற அறிவியல் தகவல்கள் சுருங்க விளக்கப்படவில்லை எனவும், (3) டார்வினின் கோட்பாடு இவரது கோட்பாட்டின் தகவலை மங்கச் செய்து விட்டது எனவும், இதனாலேயே இவரைப் பற்றிய தகவல்கள் நாளடைவில் மறக்கப்பட்டது எனப் பல காரணங்கள் இவர் புகழ் மங்கியதற்குக் கற்பிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Rupke 2008, ப. 116.
  2. Rupke 2008, ப. 54.
  3. Humboldt attended Schelling's lectures at the University of Berlin (Schelling taught there 1841–1845), but never accepted his இயல் மெய்யியல் (see "Friedrich Wilhelm Joseph Schelling—Biography" at egs.edu, Lara Ostaric, Interpreting Schelling: Critical Essays, Cambridge University Press, 2014, p. 218, and Rupke 2008, ப. 116).

வெளி இணைப்புகள்[தொகு]