அரிச்சந்திரன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிச்சந்திரன் கோவில் என்றாலே உலகத்தில் வாழும் அனைத்து இந்துக்களுக்கும் நினைவிற்கு வருவது காசி (பனாரஸ்) என்னும் வாரணாசி நகரம் ஆகும். இந்துவாகப் பிறந்த ஒருவரின் சடலத்தை காசியில் கங்கைக் கரையில் அரிச்சந்திர மயானத்தில் எரித்தால் அவர்கள் சொர்க்கலோகம் அடைவார்கள் என்கிற நம்பிக்கையில் வசதி படைத்தவர்கள் இறந்தவுடன் பூத உடலை காசிக்கு எடுத்துச் சென்று அரிச்சந்திர மயானத்தில் எரியூட்டி அஸ்தியை கங்கையில் கரைக்கும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது.

காசி நகர் மயானத்திற்கு சிறப்பு ஏற்பட்டதற்கு காரணம் அம்மயானத்தை ஒரு காலத்தில் அரிச்சந்திரன் காவல் காத்து காசி விஸ்வநாதரின் நேரடி ஆசியும் பெற்று வரம் பெற்ற காரணத்தினால் தான் காசி மயானம் சிறப்பு பெறுகிறது. அந்த நாள் முதல், பூலோகத்தில் உள்ள அனைத்து மயானங்களையும் அரிச்சந்திரன் காவல் காக்கின்றார் என்ற தத்துவத்துடன் ஒவ்வொரு மயானத்திலும் அரிச்சந்திரன் கோவில்கள் அமைக்கப்பட்டு அரிச்சந்திரன் ஆலயத்தில் அபிஷேகம் செய்து, ஆசீர்வாதம் பெற்று அனுமதி பெற்ற பிறகே மயானத்துக்குள் நுழைந்து இறந்த உடலுக்கு ஈமச்சடங்குகள் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு விளங்கி வருகிறது.

அரிச்சந்திரன் கோயிலின் உயர்வுகள்[தொகு]

காசியில் நடப்பது போன்றே ஒவ்வொரு ஊர் மயானத்திலும் பிணத்தை எரியூட்டின பிறகு அதை ஆற்றில் கரைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பெரும்பாலான மயானங்கள் ஆற்றின் கரையோரத்தில் அமைக்கப்படுகிறது. ஆறு இல்லாத ஊர்களில் மயானத்தின் பக்கத்தில் கங்கைக்கு நிகரான திருக்குளம் அமைக்கப்பட்டிருக்கும். ஈமச்சடங்கு முடிந்தவுடன் அஸ்தியை அந்த தடாகத்தில் கரைத்து விட்டு புனித நீராடும் வழக்கம் தொன்றுதொட்டு விளங்கி வருகிறது.

கால வெள்ளத்தால் தமிழ்நாட்டு கிராமங்களில் மயானத்தில் அரிச்சந்திரனுக்கு முறையான ஆலயம் இல்லாத நிலையில் சவத்தைக் கொண்டு வந்து மயானத்திற்கு முன் உள்ள ஏதாவது ஒரு " கருங்கல் " அருகே சடலத்தை கீழே இறக்கி வைத்துவிடுவார்கள். பிறகு அந்த கல்லை அரிச்சந்திரனாக பாவித்து அனைத்து விதமான பால், தயிர், பஞ்சாமிர்தம் பன்னீர், மஞ்சள், விபூதி போன்றவைகளால் அபிஷேகங்களெல்லாம் அக்கல்லிற்கு முறைப்படி செய்து அந்த அரிச்சந்திரனாக பாவிக்கப்பட்ட கல்லுக்கு விபூதி, சந்தனம் திலகமிட்டு மாலை சாற்றி ஆராதனை செய்வார்கள். இதன் பிறகுதான் மயானத்தின் உள்ளே சென்று எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்வார்கள்.

இதுவரை தமிழகத்தில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களின் 56 கிராமங்களில் அரிச்சந்திரன் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் உள்ள கருவடிக்குப்பம் குரு சித்தானந்தர் சுவாமி திருக்கோவில் அருகில் அமைந்துள்ள கருவடிக்குப்பம் இடுகாட்டில் சக்கரவர்த்தி அரிச்சந்திரனுக்கு கோயில் அமைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகிறது, இங்கு அரிச்சந்திரன் இராஜாவாகவும். வெட்டியானாகவும் தன் மனைவியுடன் அருள்பாலிக்கின்றார்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிச்சந்திரன்_கோயில்&oldid=3714345" இலிருந்து மீள்விக்கப்பட்டது