அரசரும் புலவரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசரும் புலவரும்
நூல் பெயர்:அரசரும் புலவரும்
வகை:சிறுகதைகள்
துறை:சிறுவர் இலக்கியம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:40
பதிப்பகர்:வள்ளுவர் பண்ணை, சென்னை
பதிப்பு:1960
ஆக்க அனுமதி:வள்ளுவர் பண்ணை, சென்னை

அரசரும் புலவரும் என்னும் நூல் புறநானூறில் புகழப்படும் குமணன், அதியன் நெடுமான் அஞ்சி என்னும் இரண்டு வள்ளல்களை அறிமுகம் செய்யும் சிறுவர் இலக்கியம் ஆகும். 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்நூலை எழுதியவர் அந்நாளைய பொதுக்கல்வி இயக்குநரக நூலகரும் பின்னாளைய தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை இயக்குநருமான வே. தில்லைநாயகம் ஆவார். நூலின் முதற்பகுதி ‘அண்ணனும் தம்பியும்’ என்னும் தலைப்பில் ஐந்து இயல்களையும் இரண்டாம் பகுதி ‘அரசரும் புலவரும்’ என்னும் தலைப்பில் ஐந்து இயல்களையும் கொண்டிருக்கின்றன.

அண்ணனும் தம்பியும்[தொகு]

அண்ணனும் தம்பியும் என்னும் பகுதியில் (1) முடங்கல் வந்தது!, (2) குடும்பச் சண்டை, (3) புலவர் புறப்பட்டார்!, (4) ஐயோ, அண்ணா!, (5) மாண்டவர் மீண்டார்! என்னும் ஐந்து இயல்கள் இருக்கின்றன. இந்த இயல்களில், அண்ணன் தம்பி ஆகிய இருவர் உரையாடும் முறையில், சங்க காலத்தில் பழநி மலைத்தொடர்|பழநி மலைத்தொடரில் உள்ள முதிர மலைப் பகுதியை ஆண்ட குமணன் என்னும் சிற்றரசரின் கொடைத்திறம் கதையாகக் கூறப்பட்டு உள்ளது.

குமணனின் கதை[தொகு]

பழநிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையில் இருக்கிறது குமணமங்கலம் (கொமரலிங்கம் என்பது தற்போதைய பெயர்). இப்பெயர் இப்பகுதியை ஆண்ட குமணனின் பெயரால் துலங்குகிறது. முதிரமலை என்பது இதனுடைய பழைய பெயர். குமணன் இயற்றமிழை வளர்த்த புலவர்களையும் இசைத்தமிழை வளர்த்த பாணர்களையும் நாடகத்தமிழை வளர்த்த கூத்தர்களையும் புரந்தான். அவர்களுக்கு பொன்னையும் பொருளையும் கொடையாகக் கொடுத்தான். இதனால் குமணனின் புகழ் பரவியது. இதனைக் கண்டு குமணனுக்குத் தம்பியான இளங்குமணன் பொறாமைகொண்டான். இதனை அறிந்த குமணன், போரைத் தவிர்த்து தன்னுடைய நாட்டை இளங்குமணனிடம் ஒப்படைத்துவிட்டு, நண்பர்களோடு காட்டிற்குச் சென்றுவிட்டான். ஆனால் இளங்குமணனோ தன் அண்ணனை ஒழிக்க நினைத்தான். எனவே, ‘குமணன் தலையை கொய்துகொண்டு வருபவர்களுக்கு ஆயிரம்பொன் பரிசு’ என இளங்குமணன் அறிவித்தான். இந்நிலையில் குமணனிடம் கொடை பெற்றுச் செல்வதற்காக பெருந்தலைச்சாத்தனார் என்னும் புலவர் முதிர மலைக்கு வந்தார். நடந்தவைகளை அறிந்தார். பெருஞ்சித்திரனாருக்கு யானையைப் பரிசளித்த வள்ளல் குமணனின் நிலையை எண்ணி இரங்கினார். குமணனைத் தேடி காட்டிற்கு சென்றார். அவனைச் சந்தித்தார். குமணனனோ புலவருக்கு எதனைக் கொடையாகக் கொடுப்பது எனத் தெரியாது தவித்தான். அப்பொழுது அவன்தன் தம்பியின் ஆணை நினைவிற்கு வந்தது. தன்னுடைய உடைவாளை எடுத்து புலவரிடம் கொடுத்தான். தனது தலையைக் கொய்து சென்று இளங்குமணனிடம் கொடுத்து ஆயிரம் பொன்களைப் பரிசாகப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினான். புலவர் குமணனின் வாளை எடுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து அகன்றார்.

புலவர் மறுநாள் குமணனின் தலையை ஒரு கையிலும் அவனது வாளை மறுகையிலும் ஏந்திக்கொண்டு இளங்குமணனின் அரண்மனைக்குச் சென்றார். குமணன்னின் கொய்யப்பட்ட தலையைக் கண்ட இளங்குமணன், புலவரின் வறுமையை நீக்க தனது தலையையே கொடுத்த குமணன் பெருமையை எண்ணி, தன்னுடைய தவறை உணர்ந்து அழுது புலம்பினான்; தற்கொலை செய்துகொள்ள முயன்றான். அம்முயற்சியைத் தடுத்த புலவர், “குமணன் சாகவில்லை. இது செவ்வாழைத் தண்டால் செய்யப்பட்ட போலித்தலை. உன்னைத் திருத்துவதற்காக நான் செய்தது” எனக் கூறினார். பின்னர் இளங்குமணன் காட்டிற்குச் சென்று தன் அண்ணன் குமணனை அழைத்துவந்து ஆட்சியை ஒப்படைத்தான்.

அரசரும் புலவரும்[தொகு]

அரசரும் புலவரும் என்னும் பகுதியில் (1) எங்கே போனீர்கள்?, (2) தர்மபுரி போனோம்!, (3) அஞ்சி, (4) ஒளவையார் வந்தார்!, (5) நெல்லிக்கனி என்னும் ஐந்து இயல்கள் இருக்கின்றன. இந்த இயல்களில், அண்ணன் தம்பி ஆகிய இருவர் உரையாடும் முறையில், சங்க காலத்தில் தகடூரை ஆண்ட அதியமான் அஞ்சி என்னும் சிற்றரசரின் கொடைத்திறம் கதையாகக் கூறப்பட்டு உள்ளது.

அதியமான் அஞ்சியின் கதை[தொகு]

தகடூரில் வாழ்ந்தவர் ஒளவை. அதியமான் கோட்டை, குதிரைமலை ஆகிய பகுதிகளை ஆண்டவன் அதியமான். அதியமான் என்பது குடிப்பெயர். அஞ்சி என்பது அவனது இயற்பெயர். எனவே அவன் அதியமான் நெடுமான் அஞ்சி என அழைக்கப்பட்டான். அவன் பெருவீரன்; கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனைக் காண ஒருநாள் ஒளவையார் வந்தார். வாயிற்காவலனிடம் சொல்லி அனுப்பினார். அவரை வரவேற்க அஞ்சியோ அவந்தன் ஆள்களோ வரவில்லை. இதனால் சினமுற்ற ஒளவை திரும்பிச் செல்லத்தொடங்கினார். இதனை அறிந்த அஞ்சி ஓடோடிவந்து மன்னிப்புக் கேட்டான். ஒளவை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அவரை அங்கேயே தங்கச் செய்தான். ஒளவை அதியனுக்கும் பிறருக்கும் நடக்க இருந்த போர்களைத் தவிர்த்தார். அதியனுக்கு ஆலோசனைகள் பல கூறினார். ஒருநாள் அஞ்சி அருகிலிருந்த காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். அங்கே உண்டவர்களின் வாழ்நாளைக் கூட்டும் அரிய நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அதனை தான் உண்டால் தனக்கு மட்டும்தான் பயன். தன்னை உள்ளிட்ட எல்லோருக்கும் உதவும் ஒளவை உண்டால் நாட்டுக்கே பயன் எனக் கருதிய அதியன் அந்த நெல்லிக்கனியை அவருக்குக் கொடுத்தான்.

வெளி இணைப்பு[தொகு]

அரசரும் புலவரும் என்னும் இந்நூலின் எண்மப்படி (Digital Copy)[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசரும்_புலவரும்&oldid=3708076" இலிருந்து மீள்விக்கப்பட்டது