அமாதி ஜெபாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹமாதி ஜெபாலி
Hamadi Jebali
حمادي الجبالي
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1949 (அகவை 74–75)
ஸூஸ், பிரெஞ்சுக் காலனித்துவ துனீசியா
அரசியல் கட்சிமறுமலர்ச்சிக் கட்சி
முன்னாள் கல்லூரிதுனீசு பல்கலைக்கழகம்
பாரிசு பல்கலைக்கழகம்

அமாதி ஜெபாலி ( Hamadi Jebali,அரபு மொழி: حمادي الجبالي, Ḥamādī al-Ǧibālī‎; பிறப்பு 1949) ஓர் துனீசிய பொறியாளர், இசுலாமிய அரசியல்வாதி மற்றும் பத்திரிகையாளர் ஆவார். துனீசியாவின் மிதவாத இசுலாமிய கட்சியான மறுமலர்ச்சிக் கட்சியின் பொதுச்செயலாளர்.

கல்வியும் தொழில்முறை வாழ்வும்[தொகு]

சூஸ் என்றவிடத்தில் பிறந்த ஹமாதி பொறியியல் படிப்புப் படித்தவர். துனீசியப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றபின்னர் பாரிசில் தமது பட்டமேற்படிப்பில் ஒளிமின்னழுத்தத் துறையில் தொடர்ந்தார்.[1] சூரிய ஆற்றல் மற்றும் காற்றுத் திறன் துறைகளில் வல்லுனராக விளங்கிய ஹமாதி சூஸில் தமது சொந்த முனைவகமொன்றை நிறுவினார்.[2]

அரசியல் மற்றும் பத்திரிகைத் துறையில் பங்கெடுப்பு[தொகு]

1981ஆம் ஆண்டு ஹமாதி துனீசியாவின் இசுலாமிய இயக்கத்தில் இணைந்தார். இசுலாமிய மறுமலர்ச்சிக் கட்சியின் வாராந்தர இதழான அல்-ஃபஜிர் (Dawn)க்கு இயக்குனராகவும் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். மேலும் இக்கட்சியின் நெடுநாள் செயற்குழு உறுப்பினராகவும் தற்போதைய பொதுச்செயலாளராகவும் விளங்குகிறார்.[1][3]

குற்றவழக்குத் தொடர்வும் சிறைதண்டனையும்[தொகு]

சூன் 1990இல் அல்-ஃபஜிர் ரஷீத் அல்-கன்னுஷ் என்பவரின் "மக்களின் அரசா அல்லது அரசின் மக்களா " என்ற கட்டுரையை வெளியிட்டது. இதனை பதிப்பித்ததற்காக ஆசிரியர் ஜெபாலியை பொறுப்பாக்கி "சட்டத்தை மீறத் தூண்டியதாகவும்" "கிளர்ச்சிக்கு அறைகூவல் விடுத்ததாகவும்" குற்றம் சாட்டி 1500 துனீசிய தினார்கள் அபராதமும் இடைநிறுத்திய தண்டனையும் வழங்கப்பட்டது. நவம்பர் 1990இல் அதே நாளிதழில் "சிறப்பு நீதிமன்றங்களாக இயங்கும் இராணுவ நீதிமன்றங்கள் எப்போது ஒழிக்கப்படும் ? " என்ற தலைப்பில் வக்கீல் மொகமது நூரியின் கட்டுரை வெளியானது. இம்முறை இராணுவ நீதிமன்றம் ஹமாதி ஜெபாலிக்கு "நீதிமன்ற அமைப்பொன்றை அவமதித்த" குற்றத்திற்காக ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கியது.

மே 1992இல் நாட்டுத்தலைவர் பென் அலியைக் கொலை செய்து இசுலாமிய அரசை ஏற்படுத்த என்-நகாதா என்ற மறுமலர்ச்சி கட்சியினர் திட்டமிட்டதை கண்டறிந்ததாக அரசு கூறியது. ஆகத்து 1992இல் ஜெபாலியும் 170 மறுமலர்ச்சிக் கட்சியினரும் "ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக" குற்றம் சாட்டப்பட்டனர். இத்தகைய திட்டமிடல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் உடலில் அடித்தழும்புகளை காட்டி தம்மை சித்திரவதை செய்ததாகவும் எதிர்ப்பு எழுப்பினார். இந்தக் குற்றவிசாரணை நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் மனித உரிமைகளுக்கான வக்கீல்கள் குழு போன்றவை கருதின. ஆகத்து 28, 1992இல் ஹமாதி ஜெபாலிக்கு "சட்ட விரோத அமைப்பில் உறுப்பினர் என்றும்" "அரசு மாற்றத்திற்கு வழிகோலிய" குற்றத்திற்காகவும் பதினாறாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது.

சிறைதண்டனை மிகவும் கடினமாக இருந்தது. பத்தாண்டுகள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தமது தண்டனையையும் மோசமானச் சிறைச்சூழல்களையும் எதிர்த்து பலமுறை உண்ணாநிலைப் போராட்டங்கள் நடத்தியுள்ளார். பெப்ரவரி 2006இல், துனீசியாவின் ஐம்பதாவது ஆண்டுவிழாவின்போது ஜெபாலி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.[1]

துனீசியப் புரட்சிக்குப் பின்னர்[தொகு]

துனீசியப் புரட்சிக்குப் பின்னர் சனவரி 2011யில், என்-நாஹ்தா (மறுமலர்ச்சிக் கட்சி) சட்டபூர்வ கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. அது முதல் ஹமாதி ஜெபாலி அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பரப்புரையாளராகவும் விளங்கி வருகிறார். மே 2011இல் இசுலாம் மற்றும் மக்களாட்சி கல்வி மையத்தின் அழைப்பின்பேரில் வாசிங்டன், டி. சி. சென்றார்.[4] அங்கு அமெரிக்க செனடர்கள் ஜான் மெக்கைன் மற்றும் ஜோ லைபெர்மான் ஆகியோரை சந்தித்தார்.[5]

புரட்சிக்குப பின்னர் அக்டோபர் 23, 2011 அன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் என்-நாஹ்தாவின் வெற்றியை உறுதி செய்த ஜெபாலியை பிரதமர் பதவிக்கு அக்கட்சி பரிந்துரைத்துள்ளது.[3][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Case Information: Hamadi Jebali, Committee on Human Rights, nationalacademies.org. Retrieved on 26 October 2011.
  2. Barrouhi, Abdelaziz (13 May 2011), "Hamadi Jebali: "Nous ne prétendons pas être les détenteurs de la vérité en Tunisie"", Jeune Afrique (in French), பார்க்கப்பட்ட நாள் 27 October 2011{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 Feuillatre, Cecile (26 October 2011), "Hamadi Jebali: The face of moderate Islamism in Tunisia", National Post, பார்க்கப்பட்ட நாள் 26 October 2011
  4. "The Center for the Study of Islam and Democracy Holds a Discussion on "What Kind of Democracy for the New Tunisia: Islamic or Secular?"". BNET CBS Business Network. 9 May 2011. பார்க்கப்பட்ட நாள் 21 June 2011.
  5. Washington ready to play soft Islam card, Maghreb Confidential, 26 May 2011, பார்க்கப்பட்ட நாள் 21 June 2011
  6. Toumi, Habib (26 October 2011), "Al Nahdha likely to front its secretary general as prime minister", Gulf News, பார்க்கப்பட்ட நாள் 26 October 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாதி_ஜெபாலி&oldid=3911380" இலிருந்து மீள்விக்கப்பட்டது