அப்பைய தீட்சிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பைய தீட்சிதர் (1520 – 1593) தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் காசி வரையில் பரவி யிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஆத்ம ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.

பிறப்பும் இளமைக்காலமும்[தொகு]

அப்பைய தீட்சிதர் வடஆர்க்காட்டிலே வேலூருக்கு அப்பால் திரிவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் 1520இல் பிறந்தார். தந்தை இரங்கராச தீட்சிதர். இளம்வயதில் சிவதீட்சை பெற்று சிவமூல மந்திரத்தை முறைப்படி ஓதுபவராயிருந்தார்.

பரந்த நோக்கு[தொகு]

உண்மையான அத்வைதியாக இருந்த அவர் பரம்பொருளின் வெவ்வேறு பிரதிபலிப்புகளில் வேற்றுமை பார்க்கவில்லை. அவர் காலத்திற்குமுன் ஒரு நூற்றாண்டு காலமாக, வைணவ மதத்தாரிடமிருந்து சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் மீது எதிர்ப்புகளும் மறுப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதனால் அவர் தன்னுடைய வாழ்க்கைக் குறிக்கோளில ஒன்றாக வாத-விவாதங்கள் மூலம் இத்தொல்லைக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று தீர்மானம் செய்திருந்தார். எதிராளிகளுடைய வாதங்களும் வேதத்தையும் புராணத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை அவர் உணர்ந்தது மட்டுமல்ல; “பிரம்மசூத்திரங்களே பல வித மாற்று அபிப்பிராயங்களுக்கு வழிகோலும்போது, மனிதர்கள் வெவ்வேறு அர்த்தங்களை உருவாக்குவதை யார் தடுக்கமுடியும்?” என்று அவரே சொல்வார். அவருடைய இப்படிப்பட்ட பரந்த நோக்குதான் எல்லா பிரிவுகளின் கொள்கைகளுக்கும் இடம்கொடுத்து சமரசம் செய்து வைப்பதில் தீவிரமாக ஈடுபட்டது.

104 நூல்களை இயற்றியவர்[தொகு]

அப்பைய தீட்சிதர் வடமொழியில் உள்ள பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறு வயதிலேயே வேதாந்தம், இயல், இலக்கணம் யாவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். வேதாந்த விமர்சனம், தத்துவம், பக்தி இலக்கியம், இவைகளில் ஆய்வுகள் அனேகம் செய்து, பெரிதும் சிறிதுமாக 104 நூல்கள் [1] எழுதியதாகத் தெரிகிறது. அவைகளில் இன்றும் 60 நூல்கள் புழக்கத்தில் உள்ளன. அவருடைய உயர்ந்த கவித்திறன் அவரது படைப்புகளில் தெரிகிறது.[2]

எதிர்மறைத் தத்துவங்களிலும் வல்லவர்[தொகு]

அவருக்கு அத்வைத சித்தாந்தத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததால், அவரால் மாற்று வேதாந்த தத்துவங்களில் கூட சிறந்த நூல்கள் எழுத முடிந்தது. அந்த மாற்று தத்துவ வல்லுனர்களே அவைகளை மெச்சி இவருடைய நூல்களை அவர்கள் தங்கள் சீடர்களுக்குப் பாட புத்தகமாக வைத்துள்ளனர். பிரம்மசூத்திரத்தின் நான்குவித தத்துவ உரைகளை எடுத்துக்காட்டும் வகையில் சதுர்மதசாரம் என்றொரு நூல் எழுதினார். அதில் நயமஞ்சரி அத்வைதத்தைப் பற்றியும், நயமணிமாலை ஸ்ரீகண்டமததைப் பற்றியும், நய-மயூக-மாலிகா இராமானுஜ சித்தாந்தத்தையும், நய-முக்தாவளி மத்வருடைய சித்தாந்தத்தையும் எடுத்து இயம்புகிறது. இந்நூல்களில் அவருடைய தராசுநிலை நேர்மையையும், உண்மையைத்தேடும் உள்ளார்ந்த முயற்சியையும் ரசித்து வைணவர்களும் மத்வ மதத்தவர்களும் முறையே நய-மயூக-மாலிகா, நய-முக்தாவளி இரண்டையும் அவரவர்களின் மத நூல்களாக ஆக்கிக் கொண்டார்கள்.

அத்வைதியா, சிவாத்வைதியா?[தொகு]

அவருடைய மனதிற்குள் அத்வைதம்தான் கடைநிலை உண்மை. ஆனாலும் அவருடைய தொழுகையெல்லாம் சிவனைக்குறித்தே இருந்தது. சிவாத்வைதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அவரையும் தங்களில் ஒருவராகத்தான் நினைத்தார்கள். அதனால் அவருடைய மனதிற்குகந்த மதம் சிவாத்வைதமா, அத்வைதமா என்று தீர்மானமாகச் சொல்வது கடினம் என்பது உலக வழக்கு. சிவாத்வைதம் என்பது விஷ்ணுவுக்கு பதில் சிவனைக் கொள்ளவேண்டுமே தவிர மற்றபடி இராமானுஜருடைய விசிஷ்டாத்வைதம் போலத்தான்.

சித்தாந்தலேச சங்கிரகம்[தொகு]

அப்பைய தீட்சிதரின் வேதாந்த நூல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்தாந்த-லேச-சங்கிரகம் என்ற அவருடைய சொந்தப் படைப்பு. இப்பெரிய நூலில் அத்வைத சித்தாந்தத்தின் எல்லா நெளிவு சுளுவுகளையும் ஒரே இடத்தில் கொண்டு வருகிறார். பாஷ்யங்களைப் படிக்கத் தொடங்கும் அத்வைத மாணவர்கள் யாவரும் இன்று இந்நூலில் தான் தொடங்குவார்கள். அத்வைதத்தினுள்ளே இருக்கும் பல பிரிவுகளின் கொள்கைகளும் இதனில் அலசப்பட்டு விடுகின்றன. ஏக-ஜீவ-வாதம், நாநாஜீவ-வாதம், பிம்பப் பிரதிபிம்பவாதம், ஸாக்ஷித்துவ-வாதம் முதலிய எல்லாமே விவரிக்கப்பட்டு அவைகளின் எதிர்வாதங்களும் தீட்சிதரின் அறிவுச் சாணையில் தீட்டப்பட்டு விடுகின்றன. அகிலமும் சம்மதம் என்பது போல் அவரே அந்த பரந்த நோக்கை நியாயப்படுத்தி விடுகிறார்: “உலகெல்லாம் மாயை என்பதை எல்லா அத்வைதிகளும் ஒப்புக்கொள்வதால், அம்மாய உலகத்திற்கு இவர்கள் வெவ்வேறு படங்கள் வரைவதினால் என்ன குறை வந்துவிடப் போகிறது?”

பரிமளம்[தொகு]

ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு வாசஸ்பதி மிஸ்ரர் இயற்றிய ‘பாமதி’ என்ற உரை மிகவும் மதிக்கத் தக்கது. அதற்கு அமலானந்தர் என்பவர் கல்பதரு என்ற ஓர் நிரடலான உரை எழுதினார். இந்த கல்பதருவை எளிதாகப் புரிந்துகொள்ளும் முறையில் அப்பைய தீட்சிதர் எழுதிய பரிமளம் என்ற உரை பல்வேறு ஐயங்களை ஒருவாறு மிதப்படுத்தியது. மனிதனுடைய அஞ்ஞானம், பிரம்மத்திலிருந்து வந்ததா அல்லது ஜீவனிடமிருந்து வந்ததா என்பது அத்வைதத்தின் சிடுக்கான பிரச்சினை. இதற்கு ‘பாமதி’ உரையில் கொடுக்கப்பட்ட விளக்கமும், அத்வைதத்தின் இன்னொரு பிரிவான விவரணப் பிரிவில் கொடுக்கும் விளக்கமும் இரண்டையும் கருத்தில் கொண்டு அப்பைய தீட்சிதர் இரண்டு விளக்கமும் சம்மதமே என்ற முறையில் அவருடைய சித்தாந்த லேச சங்கிரகம் விளக்கியிருந்ததால், அவரது பரிமளம் பரிமளித்தது.

சிவார்க்கமணி தீபிகை[தொகு]

பரிமளம் அத்வைதத்தை அடிப்படையாககொண்டு எழுதப்பட்டது. ஸ்ரீகண்டரின் சிவ-விசிஷ்டாத்வைதத்தை ஒட்டி சிவார்க்கமணி தீபிகை என்ற இன்னொரு உரையையும் எழுதினார். இதுவும் பிரம்மசூத்திரத்திற்கு உரையாக எழுதப்பட்டதுதான். இதுவும் பரிமளமும் தான் அவருடைய மிகப்பெரிய உயரிய நூல்கள். சிவார்க்கமணி தீபிகையைக் கற்பதற்காக 500 மாணவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்ய மான்யம் வழங்கியவர் வேலூர் அரசர் சின்ன பொம்ம நாயக்கர். வைஷ்ணவ எதிர்ப்புகளை நாடெங்கும் சந்திப்பதற்காகவே இம்மாணவர்களை ஒன்று சேர்த்தவர் தீட்சிதர்.

அத்வைதமும் மற்ற வேதாந்தப்பிரிவுகளும்[தொகு]

வைணவ எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக அவர் முழு மூச்சுடன் பலஆண்டுகள் நாடெங்கும் சென்று பேசியும் எழுதியும் உழைத்தார். பல அரசர்கள் – குறிப்பாக, தஞ்சை, வெங்கடகிரி, வேலூர், விஜயநகரம் மன்னர்கள் – அவருக்கு உதவி செய்தார்கள். தீட்சிதருடைய கணிப்பில் துவைதம் முதல் படி. விசிஷ்டாத்வைதம் அதற்கு அடுத்த மேல் படி. சிவாத்வைதமும் அத்வைதமும் கிட்டத்தட்ட ஒன்றாக அதற்கடுத்த கடைசிப்படி. சிவாத்வைதத்தை அடிப்படையாக வைத்து சூத்திரங்களுக்கு பாஷ்யம் எழுதிய ஸ்ரீகண்டர் ஆதி சங்கரருடைய கருத்துகளுக்கு இணையாக இருக்கும்படிதான் எழுதியிருக்கிறர் என்பது தீட்சிதருடைய முடிவு. குணங்களுடன் கூடிய பரமனை உபாசிப்பது குணங்களற்ற பரம்பொருளில் தான் கொண்டுவிடும். இதை நிலைநாட்டும் முறையில் ஆனந்தலஹரி சந்திரிகா என்ற நூலில் பற்பல வித்தியாசமான தத்துவங்களும் கடைசியில் சுத்தாத்வைதத்தை அணுகித்தான் முடியும் என்று நிறுவுகிறார்.

பெரிய யோகி[தொகு]

தீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி அவரை மிகவும் வாட்டி வதைத்தது. அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேசவேண்டியிருந்தாலோ, அவர் ஒரு துண்டின்மேல் அந்த வலியை தன் மந்திர வலுவால் ஈர்த்து வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடுவாராம். அப்பொழுது அத்துண்டு இப்படியும் அப்படியும் குதித்துக்கொண்டே இருக்குமாம். பிறகு வேலை முடிந்தவுடன் திரும்ப அந்த வலியை வாங்கிக் கொள்வாராம். தொல்வினையை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பதை நம்பினவர் அவர்.

ஆத்மார்ப்பண ஸ்துதி[தொகு]

ஆத்மார்ப்பண ஸ்துதி அவர் இயற்றிய நூல்களில் ஒன்று. இதை அவர் இயற்றிய விதம் வெகு விந்தையானது. ஆண்டவனிடம் தன்னுடைய பக்தி உண்மையானது தானா என்று தன்னையே பரிசோதனைக்குட்படுத்திக் கொள்கிறார். மயக்க நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒரு பழத்தைச் சாப்பிட்டு தான் மயக்கத்தில் சொல்வதை எல்லாம் அப்படியே எழுதி வைக்கும்படி தன் சிஷ்யர்களிடம் சொல்லிவைத்து, அந்த மயக்கத்தில் அவர் ‘உளறினது’ தான் 50 சுலோகங்கள் கொண்ட ஆத்மார்ப்பண ஸ்துதி.

துணை நூல்கள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://www.shaivam.org/adappayya_works.htm (ஆங்கில மொழியில்)
  2. அப்பைய தீட்சதரின் ஆத்மார்பணஸ்துதி (உன்மத்த பஞ்சாசத்) நூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பைய_தீட்சிதர்&oldid=3772533" இலிருந்து மீள்விக்கப்பட்டது