அபிதானகோசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபிதானகோசம் என்பது தமிழிலே முதன் முதலாகத் தோன்றிய இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பெற்ற வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தருமநூல்கள், இலக்கியங்களிற் காணப்பெற்ற தெய்வம், தேவர், இருடி, முனிவர், அசுரர், அரசர், புலவர், புரவலர் முதலிய விபரங்களை அகர வரிசையிலே தொகுத்தளிக்கும் முயற்சி அபிதானகோசம் ஆகும்.

அபிதானகோசத்தைத் தொகுத்தளித்தவர் யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917) சுயமாக எழுதியும் உரையெழுதியும் பதிப்பித்தும் உதவியவர்; சஞ்சிகை நடத்தியவர்; அகராதி தொகுத்தவர்.

அபிதான கோசம் 1902-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்படடு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவரும் முன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அபிதானகோசத்தைக் காட்டிலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி.

அபிதான கோசத்தின் முகவுரைப் பாடல்[தொகு]

முகவுரை[தொகு]

ஆத்திதன் பாதம் பத்திசெய் வோர்க்குப்

புத்தியுஞ் சித்தியும் கைத்தலக் கனியே.

திருவளர் பொதியத் தொருமுனி பாதம்

வருக சிறியேன் சிரமிசை யுறவே.

வடமொழி, தென்மொழிப் பொதுமை[தொகு]

அபிதானகோசம் வடமொழி, தென்மொழி ஆகியவற்றின் சிறப்பைப் பொதுமைப்படுத்தியே விளக்குகிறது. இந்த இருமொழிகளும் மிகவும் பழமை வாய்ந்தது எனவும் இலக்கண வரம்புடையது எனவும் என அதன் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும், இவ்விரு மொழிகளின் நூல் வளமும் இதிகாச வளமும் ஞானநூல்களின் செழிப்பும் சம இயல்புடையவை என்றும் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த இருமொழியையும் உடையவர்கள் வைதிக சமயத்தவர்கள் என்பதனால் நூல்களும் புராணங்களும் சாத்திரங்களும் பொதுவாக அமைகின்றன எனவும் சுட்டிக் காட்டுகிறார். ஒருமொழியில் வழங்கும் ஒரு பெயர் இருமொழிக்கும் பொதுவாக இருப்பதனால் புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கூறப்பட்ட தெய்வங்கள் முதலான அனைத்துப் பெயர்களையும் அவர்தம் இயல்புகளையும் இக்கலைக்களஞ்சியம் விளக்குவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அபிதானகோசத்தின் நோக்கம்[தொகு]

பழந்தமிழ்நாட்டில் வாழ்ந்த  அரசர், புலவர், வள்ளல்கள் முதலியோர் சரித்திரமும், நூல்களின் வரலாறுகளும், வைதிக சாஸ்திர கொள்கைகளும் குறித்து இக்கலைக்களஞ்சியம் ஆராய்ந்துள்ளது. தமிழில் ஆய்வு செய்வோருக்கு உதவியாக இஃது உருவாக்கப் பெற்றதாகக் களஞ்சியத்தின் நோக்கம் குறித்து ஆசிரியர் தன் முன்னுரையில் குறித்துள்ளார். இதைத் தவிரவும் கர்ண பரம்பரைக் கதைகளின் வாயிலாகவும் இக்களஞ்சியம் நிறைந்துள்ளது. பதினாறு ஆண்டுகாலம் இதற்காக முயன்று இக்களஞ்சியத்தைத் தொகுத்ததாகவும் இதுவரையிலும் தமிழில் இப்படி ஒருநூல் எழுதப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஆனபோதும் இதை முடிந்தபணியாக அவர் கருதவில்லை என்று அவையடக்கத்தோடு கூறுகிறார்.

இணையத்தில் அபிதான கோசம்[தொகு]

அபிதான கோசம் நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இ. பத்மநாப ஐயரின் உதவியுடன் யாழ். பல்கலைக் கழக நூலகத்திற் பணியாற்றும் அ. சிறீகாந்தலட்சுமியின் முயற்சியால் தட்டெழுதப்பட்டது.

ஆதார நூல்கள்[தொகு]

  • இந்துக் கலைக்களஞ்சியம், பொ. பூலோகசிங்கம், 1990
  • சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியம்,, மு.ப. 1968 ப.15.
  • முத்துத் தம்பிப்பிள்ளை, ஆ., அபிதானகோஷம், முகவுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிதானகோசம்&oldid=3294116" இலிருந்து மீள்விக்கப்பட்டது