அபயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அபய இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அபயன்
உபதிஸ்ஸ நுவரவின் அரசன்
ஆட்சிகி.மு. 474 – கி.மு. 454
முன்னிருந்தவர்பண்டுவாசுதேவன்
பின்வந்தவர்திஸ்ஸன்
மரபுவிசய வம்சம்
தந்தைபண்டுவாசுதேவன்
தாய்பத்தகச்சனா

அபயன் அல்லது அபய (ஆட்சிக்காலம்: கி.மு 474-454) என்பவன் இலங்கையின் முதலாவது அரச மரபில் வந்த மூன்றாவது அரசனாவான். இவன், இவனுக்கு முன்னர் இலங்கையை அரசாண்ட பண்டுவாசுதேவனின் மூத்த மகனாவான். இவனுக்கு ஒன்பது சகோதரரும் உம்மத சித்தா என்னும் சகோதரியும் இருந்தனர்.

வரலாறு[தொகு]

மகாவம்சம் 9ம் அத்தியாயம் அபயனின் வரலாற்றை விவரிக்கிறது. விஜயனின் ஆட்சியின் பின்னர் அவனுக்கு வாரிசு இல்லாமையினால், லாலா நாட்டிற்கு தூதனுப்பி, அங்கிருந்து விஜயனின் சகோதரன் ஒருவனின் மகனான பண்டுவாசுதேவன் என்பவன் இலங்கைக்கு வந்து அரசுரிமையை பொறுப்பேற்கின்றான் என்கிறது மகாவம்சம்,ஆனால் பாண்டுவாசு தேவன் பாண்டியன் என்கிறது தீபவமசம். அவனுக்கு 10 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. பெண் குழந்தையின் பெயர் உம்மத சித்திரா. சித்திரா இலங்கையில் பழங்குடி மக்கள் மரபினான ஒருவனுடன் உறவு கொண்டு ஆண் குழந்தை ஒன்றைப் பெறுகிறாள். அந்தக் குழந்தையே "பண்டுகாபயன்" எனப்படுபவன் ஆவான்.

சோதிடனின் எதிர்வு[தொகு]

இவர்களது தந்தை அரசனாக இருந்த காலத்தில் சோதிடன் ஒருவன், உம்மத சித்தாவுக்குப் பிறக்கும் மகன், அவன் மாமன்மார்களைக் கொல்லுவான் என்று கூறியிருந்தான். இதனால் உம்மத சித்தாவைக் கொல்லுவதென்று அபயவைத் தவிர்ந்த ஏனைய சகோதரர்கள் அவர்களுள் மூத்தவனான திஸ்ஸ என்பவன் தலைமையில் கூடி முடிவு செய்தனர். அபய அதற்கு இணங்காததால் அவளைத் தனிமைப்படுத்திக் காவலில் வைத்திருப்பதென முடிவு செய்யப்பட்டது.

சித்தாவின் திருமணம்[தொகு]

அவர்களது உறவினனான இளவரசன் தீககாமினி என்பவனைத் தற்செயலாகக் கண்ட சித்தா தனிமையில் அவனைச் சந்தித்தாள் இதன்மூலம் அவள் கர்ப்பமுற்றாள். இதனைக் கேள்வியுற்ற அபய, தந்தையான பண்டுவாசுதேவனை இணங்கச் செய்து சித்தாவை தீககாமினிக்கு மணம் முடித்து வைத்தான். இதனால் திஸ்ஸவும் ஏனைய சகோதரர்களும் கோபமுற்றிருந்தனர். சித்தாவுக்கு ஆண்பிள்ளை பிறந்தால் அவனைக் கொன்று விடுவதாக திஸ்ஸ சூளுரைத்தான். சித்தா ஒரு ஆண் குழந்தையையே பெற்றாள். ஆனாலும் அதனை மறைத்துவிட்டு அதற்குப் பதிலாக இன்னொரு பெண் குழந்தையை அதற்குப் பதிலாக வைத்தாள். மகனை நாட்டின் தென் பகுதிக்கு அனுப்பி அங்கே வளர்க்க ஏற்பாடு செய்திருந்தாள். அவனுக்குத் தனது தந்தையினதும், மூத்த தமையனதும் பெயர்களைச் சேர்த்து பண்டுகாபயன் எனப் பெயரும் வைத்தாள்.

அபய அரச பதவியிலிருந்து அகற்றப்படல்[தொகு]

அபய அரசனாகிச் சில காலத்தின் பின்னர் தமது சகோதரிக்கு ஆண் பிள்ளை பிறந்தது பற்றியும் அவன் நாட்டின் தென்பகுதியில் வளர்வது பற்றியும் திஸ்ஸவும் ஏனைய சகோதரரும் அறிந்து கொண்டனர். அவனைக் கொல்லுவதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால், சித்தாவுக்கு உறுதுணையாக இருந்த அபயவைப் பதவியில் இருந்து அகற்றித் திஸ்ஸ அரசனானான்.

திரைப்படம்[தொகு]

இந்த அபயனின் வரலாறு தொடர்பான ஒரு வரலாற்று ஆவணத் திரைபடம், அபயன் எனும் பெயரில் சிங்கள மொழியில் எடுக்கப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபயன்&oldid=3352729" இலிருந்து மீள்விக்கப்பட்டது