அன்னிய நேரடி முதலீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னிய நேரடி முதலீடு (Foreign direct investment, FDI) ஒரு நாட்டில் மற்றொரு நாட்டு நபரோ நிறுவனமோ தயாரிப்பு அல்லது வணிகத் துறையில் நேரடியாக முதலீடு செய்வதாகும். இத்தகைய முதலீடு அந்நாட்டில் உள்ளதோர் நிறுவனத்தை வாங்குவதன் மூலமோ அல்லது தனது நிறுவனத்தினை விரிவுபடுத்துவதாலோ இருக்கலாம். இது அந்த நாட்டு நிறுவனங்களின் பங்குகளிலோ அல்லது பிணைப்பத்திரங்களிலோ முனைப்பற்ற முதலீடு செய்வதல்ல.

வரையறைகள்[தொகு]

பொதுவாக, அன்னிய நேரடி முதலீட்டில் "இணைப்புகளும் கையகப்படுத்தல்களும், புதிய வணிக வாய்ப்புகளுக்கான கட்டமைப்பை உருவாக்குதல், வெளிநாட்டில் கிடைத்த இலாபங்களை முதலீடு செய்தல், நிறுவனங்களுக்கிடையேயான கடன் வழங்குதல்" போன்றவை அடங்கும்.[1] குறுகிய வரையறுப்பில், அன்னிய நேரடி முதலீடு புதிய கட்டமைப்பை (தொழிற்சாலைகள், ஆய்வகங்கள், அலுவலகங்கள்) உருவாக்குவதை மட்டுமே குறிக்கும். எனவே வெவ்வேறு வரையறுப்புகளின் கீழுள்ள அன்னிய முதலீட்டு மதிப்பீடுகளை ஒப்பு நோக்குதல் கடினமே.

ஒரு நாட்டின் தேசியக் கணக்குப் புத்தகங்களிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சமன்பாட்டிலும் Y=C+I+G+(X-M) [நுகர்வு + மொத்த (மொத்த உள்நாட்டு+மொத்த வெளிநாட்டு) முதலீடு+ அரசு செலவினம் +(ஏற்றுமதி - இறக்குமதி)], அன்னிய நேரடி முதலீடு என்பது நிகர உள்வரும் முதலீடாக (உள்வரவிலிருந்து வெளியேறும் செலவைக் கழித்து) வரையறுக்கப்படுகிறது; இத்தகைய நிகர உள்ளீடு முதலீட்டாளரின் நாட்டில்லில்லாத வேறொரு பொருளாதாரத்தில் உள்ள நிறுவனத்தில் நிரந்த மேலாண்மை ஆர்வத்தை (10 விழுக்காடு அல்லது அதற்கு மேலான வாக்குரிமைப் பங்குகளை) பெறுவதற்காக இருத்தல் வேண்டும்.[2] அனிய நேரடி முதலீடு என்பது பங்கு முதலீடு, மற்ற நீண்டகால முதலீடு, குறுங்கால முதலீடு ஆகியவற்றின் மொத்தமாகும்; இது வரவுச்செலவு சமநிலையில் காட்டப்படும். அன்னிய நேரடி முதலீடு மூலமாக மேலாண்மையில் பங்கேற்றல், கூட்டு நிறுவனங்கள், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நுண்திறமை கூடுகிறது. அன்னிய நேரடி முதலீட்டின் மூலதனப் பங்கு ஓர் குறிப்பிட்ட காலத்தில் நிகர (i.e. உள்வரவு - வெளிப்போக்கு) திரள் அன்னிய நேரடி முதலீடாகும். வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகாது.[3] உற்பத்திக் காரணிகள் பன்னாட்டளவில் பரிமாற்றம் கொள்வதற்கான ஓர் எடுத்துக்காட்டு அன்னிய நேரடி முதலீடாகும்.

வகைகள்[தொகு]

  1. கிடைநிலை அன்னிய நேரடி முதலீடு - ஓர் நிறுவனம் தனது நாட்டில் செய்துவந்த அதே தொழில் முனைப்பை அதே தயாரிப்பு சங்கிலிகளுடன் மற்ற நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டின் மூலமாக மீள் உருவாக்குதல்.[4]
  2. அடித்தள அன்னிய நேரடி முதலீடு - தன்னுடைய நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் அன்னிய முதலீடு செய்வதன் மூலமாக மூன்றாம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தல்.
  3. நெடுக்கைநிலை அன்னிய நேரடி முதலீடு தனது தயாரிப்புச் சங்கிலிக்கு கீழுள்ள அல்லது மேலுள்ள பொருட்களை அன்னிய நேரடி முதலீடு மூலமாக மற்ற நாட்டில் உருவாக்குதல். அதாவது தனது தயாரிப்பிற்கு வேண்டிய மூலப் பொருட்களை அன்னிய நாட்டில் தயாரித்தல் அல்லது தனது செய்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட மதிப்புக் கூடிய பொருட்களை அன்னிய நாட்டில் தயாரித்தல். [4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "China Edges Out U.S. as Top Foreign-Investment Draw Amid World Decline". Wall Street Journal. 2012-10-23. http://online.wsj.com/article/SB10001424052970203406404578074683825139320.html. 
  2. "Foreign direct investment, net inflows (BoP, current US$) | Data | Table". Data.worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2012-11-17.
  3. "CIA - The World Factbook". Cia.gov. Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2012-11-17.
  4. 4.0 4.1 "What is Foreign Direct Investment, Horizontal and Vertical « Knowledge Base". Guidewhois.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-17.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னிய_நேரடி_முதலீடு&oldid=3542128" இலிருந்து மீள்விக்கப்பட்டது