அட்ட வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்டவாயில் என்னும் ஊர் நெல்வயல் சூழ்ந்திருக்கும் ஓர் ஊர். அதில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். பல ஊர்களிலிருந்தும் மக்கள் அந்த விழாவுக்குச் செல்வர். விழாவில் ‘கலி’ என்னும் மகிழ்ச்சி ஆரவாரம் மிகுந்திருக்கும்.

பரத்தையுடன் வாழ்ந்த கிழவன் மனைவியை நாடி இல்லம் வருகிறான். தோழி அவனை வீட்டுக்குள் விடவில்லை. கிழவன் பிரிவால் அவனது மனைவி உடலில் தித்தி என்னும் ஊரல் தோன்றி நொந்து கண்ணீர் விடுகிறாள். அவளது கண்ணீரைப் போக்க முதலில் அவளை அட்டவாயில் நகரில் நடக்கும் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லும்படி தோழி வழிகாட்டுகிறாள். வழியில் கழனி வழியே செல்லும்போது நெல் கதிர்வாங்கியிருக்கும் அழகை அவள் அழகோடு ஒப்பிட்டுக் காட்டிப் பாராட்டிக்கொண்டே செல்லவேண்டும் என்றும் கூறுகிறாள். அவன் அழைத்துச் செல்வதை ஊர்மக்கள் கண்கொட்டாது பார்க்கவேண்டும் என்பதும் அவள் விருப்பம்.

பழையன் என்பவன் சோழனின் படைத்தலைவன் (‘சோழன் மறவன்’) அவன் உயர்த்திப் பிடித்த வேல் போல் ஊரார் கண்கள் பார்க்கவேண்டுமாம்.[1]

அதிகை, கடவூர், கண்டியூர், குறுக்கை, கோவலூர், பறியலூர், வழுவூர், விற்குடி ஆகிய 8 ஊர்களைச் சைவர் வீரட்டானம் என்பர். இந்த வீரட்டானம் வேறு. அட்டவாயில் வேறு.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை சங்ககாலத்தில் அட்டவாயில் என்னும் பெயருடன் விளங்கியது எனலாம்.

அட்டவாயில் என்பது போரிட்டு அழிக்கப்பட்ட வாயில் என்று பொருள்படும். ஆடு என்னும் சொல்லுக்கு வெற்றி என்னும் பொருள் உண்டு. அட்டு ஆடு பெற்ற ஊர் ஆடனை. ஆடனை என்பது சிறப்பிக்கப்பட்டுத் திருவாடனை ஆயிற்று.

அடிக்குறிப்பு[தொகு]

  1. செல்வர் கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் நெடுங்கொடி நுடங்கும் அட்டவாயில் இருங்கதிர்க் கழனிப் பெருங்கலி அன்ன நலம் பாராட்டி நடை-எழில் பொலிந்து விழவிற் செலீஇயர் வேண்டும் - பரணர் - அகம் 326
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ட_வாயில்&oldid=798651" இலிருந்து மீள்விக்கப்பட்டது