செடிப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசுவுணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அசுவுணி
Aphids
புதைப்படிவ காலம்:Permian–Present
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

Pea aphids, Acyrthosiphon pisum
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Hemiptera
துணைவரிசை: Sternorrhyncha
பெருங்குடும்பம்: Aphidoidea
Latreille, 1802

அசுவுணி அல்லது செடிப்பேன் (Aphid plant lice) என்பது செடி கொடிகளில் இலை, இலைக்குருத்து, மொக்கு, கிளை ஆகியவற்றில் கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்து வாழும் பூச்சியாகும். இவற்றின் உடல் சிறியதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். இவை பச்சை, பழுப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களில் காணப்படும். இவற்றில் 3600 -க்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை செடி கொடிகளில் தங்கி அவற்றின் சாற்றை உறிஞ்சி உண்டு வாழ்கின்றன. இப்பூச்சிகள் காய்கறிகள் , பருத்தி, சோளம், கரும்பு, புகையிலை, ஆமணக்கு, பயறு போன்ற பயிர்களையே பெரிதும் தாக்கிப் பாழாக்குகின்றன. இவற்றால் சாறு உறிஞ்சப்பட்ட செடிகள் வலுழந்துவிடுகின்றன. அவை வெளிறிப்போய் சுருண்டுவிடுகின்றன. அசுவிணிகள் மூலம் நோய் பரப்பும் பூச்சிகள், நல்ல செடிகளுக்கும் பரவுகின்றன.

உடலமைப்பு[தொகு]

அசுவுணிப் பூச்சிகள் ஆறுகால்களையும் பருத்த உடலையும் மிகச்சிறிய தலையையும் கொண்டுள்ளன. இதன் தலையில் இரு கண்களும் இரு உணர்கொம்புகளும் உள்ளன. சில வகை அசுவுணிகளுக்கு முன் பின்னாக இரண்டு இணை இறக்கைகள் உள்ளன. முன் இறக்கைகளை விட பின் இறக்கைகள் சிறியவையாகும். இவ்விறக்கைகள் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவை. ஒரு சில வற்றில் நரம்புகளும் காணப்படும். சில வகை அசுவுணிகளுக்கு இறக்கைகள் ஏதும் இருப்பதில்லை. இவற்றின் வாயுறுப்புகள் கூர்மையானவை.

வாழ்க்கைமுறை[தொகு]

எறும்பும் அசுவுணியும்
அசுவுணியின் சாறை உறிஞ்சும் எறும்பு

அசுவுணிகள் தனது கூர்மையான வாயுறுப்புகள் மூலம் செடியின் சாற்றை உறிஞ்சுகின்றன. இவற்றின் மலத்துளை வழியே ஒரு வகை இனிய நீர் சுரக்கும். அதனை உண்ண எறும்பு இப்பூச்சிகளை நாடிவரும். சில சமயம் எறும்பு தனது உணர்கொம்புகளால் மாறி மாறி அசுவுணியின் பின் பாகத்தைத் தடவுவதும் உண்டு. இந்த நீருக்காகவே எறும்புகள் அசுவுணியைப் பாதுகாப்பதும் உண்டு. சூழ்நிலையும் வானிலையும் ஒவ்வாத காலங்களில் அசுவுணியை எறும்புகள் பாதுகாக்கின்றன. ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு அசுவுணிகளைக் கொண்டு சேர்க்கின்ற்ன. இதனால் இவற்றை எறும்புப் பசு என்பர். எறும்புகளின் உதவியால் இப்பூச்சிகள் ஒரு தோட்டம் முழுவதும் மிக விரைவில் பரவிவிடுகின்றன.

இனப்பெருக்க முறை[தொகு]

அசுவுணிப் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி

அசுவுணிப் பூச்சிகளின் இணப்பெருக்க முறை வித்தியாசமானது. இவை எளிமையான மற்றும் சிக்கலான இனப்பெருக்க முறைகளைக் கொண்டிருக்கிறது. கலவி மற்றும் கலவியிலா இணப்பெருக்க முறைகள் இவற்றில் நடைபெறுகின்றன. குளிர்காலம் வருவதற்கு முன் ஆணும் பெண்னும் சேர்கின்றன. பெண் முட்டையிடுகிறது. இந்த முட்டை குளிர்கால முட்டை எனப்படும். இம்முட்டை நிலையிலேயே குளிர்காலம் கழிகின்றது. முட்டைகள் பொரிந்து அவற்றிலிருந்து இறக்கையில்லாத பெண்பூச்சிகள் வெளிவருகின்றன. இவை ஆண்பூச்சியோடு சேராமலேயே இனப்பெருக்குகின்றன. விந்தனுவால் கருவுறாத முட்டைகள் இதன் உடலினுள்ளேயே வளர்ச்சியுற்று அசுவுணிகளாக வெளிவருகின்றன. அவ்வாறு வெளிவரும் பூச்சிகள் இறக்கையுள்ள பெண்பூச்சிகளாகும். இவையும் ஆண்பூச்சிகளின்றியே தன் இனத்தைப் பெருக்குகின்றன. இவை முட்டையாக வெளிவராமல் சிறு பூச்சிகளாகவே வெளிவரும். இவாறு சராயுசப் பிறவியால் (viviparity) வேனிற்காலம் முழுவது எண்ணற்ற தலைமுறைகள் உண்டாகின்றன. ஒரு பெண் பூச்சி இருபத்தைந்து நாளில் பெண்களைப் பெறும் நிலையை அடைகிறது. அவை ஒவ்வொன்றும் சில நாள்களில் குழந்தைகளைப் பெறக்கூடியவையாக மாறிவிடுகின்றன.இவை கிட்டத்தட்ட 41 தலைமுறைகளை உருவாக்கிவிடுகின்றன. இதனால் இவை கணக்கற்ற எண்ணிக்கையில் பெருகிவிடுகின்றன. இந்தப் பருவம் முடியும் போது ஆண்பூச்சிகளும் முட்டையிடும் பெண்பூச்சிகளும் உற்பத்தியாகி விடுகின்றன. இவ்வாறு கோடைக்காலத்தில் உருவாகும் பெண்பூச்சிகள் ஆண்பூச்சியோடு சேர்கிறது. இந்த பருவத்தில் ஆணின் விந்தணுவால் கருவுற்ற முட்டைகளைப் பெண்பூச்சி இடுகிறது. இப்பெண்பூச்சிகளே பாலிலா இனப்பெருக்க முறையில் மீண்டும் குட்டிகளை இடுகின்றன.

இனப்பெருக்க வட்டம்[தொகு]

முட்டை
இறக்கையில்லாப் பெண்பூச்சிகள்
இறக்கையுள்ள பெண்பூச்சிகள்
ஆண்கள் + முட்டையிடும் பெண்பூச்சிகள்(இறக்கையில்லாப் பெண்)
முட்டை
இறக்கையில்லாப் பெண் பூச்சிகள்

இறக்கை முளைத்த பூச்சிகள் வேறு இடங்களுக்குப் பறந்து சென்று புதுச் செடிகளைப் பற்றுகின்றன. இவ்வாறே இந்த இனம் பரவுகிறது. ஒரு சில இனங்களில் வாழ்க்கை வட்டம் முழுவதும் ஒரே செடியிலேயே நடக்கும். மற்றும் சில இனங்கள் இலையுதிர்காலத்தில் வலசை போகின்றன. அந்த அசுவுணிகள் தாம் வேனில் காலத்தில் தான் வாழ்ந்த செடியை விட்டு குளிர்காலத்தில் தனக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய மற்றொரு செடிக்கு வலசை போகின்றன. அந்த குளிர்கால ஆதாரச் செடியில் இருந்து ஆணால் கருவுற்ற குளிர்கால முட்டைகளை இடுகின்றன.

அசுவுணியிலிருந்து வெளிவரும் பெண் பூச்சி (குஞ்சுகள்)
முதிர்ந்த பெண் அசுவுணிகளும் அசுவுணியிலிருந்து வெளிவரும் பெண் பூச்சிகளும்

தடுப்பு முறைகள்[தொகு]

அசுவுணிப்பூச்சிகள் செடி கொடிகளுக்கு மிகுந்த தீமையை விளைவிக்கின்றன. இவற்றை ஒழிக்கப் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. சிலந்தி போன்ற பூச்சிகளும் அசுவுணிப் பூச்சிகளைத்தின்று அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.புகையிலைத் தண்ணீர், சவர்க்காரம் ஆகியவை கொண்டும் அசுவுணி வராமல் தடுக்கலாம்.

காட்சியகம்[தொகு]

அசுவுணியின் எதிரிகள்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செடிப்பேன்&oldid=3049049" இலிருந்து மீள்விக்கப்பட்டது