ஃபை தோற்றப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபை தோற்றப்பாட்டில், தொடராக அடுத்தடுத்து வரும் படிமங்கள் அசையும் உணர்வை ஏற்படுத்துகின்றன.
அடிக்கடி ஃபை அசைவுடன் குழப்பிக்கொள்ளப்படுகின்ற பீட்டா அசைவின் ஒரு எடுத்துக்காட்டு.

ஃபை தோற்றப்பாடு (Phi phenomenon) என்பது, வெவ்வேறு பொருட்களை அடுத்தடுத்து விரைவாகப் பார்க்கும்போது அது தொடர்ச்சியாக அசைவது போலத் தோன்றும் ஒளியியற் கண்மாயம் ஆகும். 1912 ஆம் ஆண்டில் மக்சு வேர்த்தைமர் (Max Wertheimer) என்பவர், கெசுட்டால்ட் உளவியல் கோட்பாட்டில் இதற்கு வரைவிலக்கணம் கொடுத்தார். 1916 ஆம் ஆண்டில் உருவான இயூகோ மியூன்சுட்டெர்பர்க்கின் (Hugo Münsterberg) திரைப்படக் கோட்பாட்டுக்கு பார்வை நீடிப்புடன், ஃபை தோற்றப்பாடும் அடிப்படைகளாக உள்ளன.

அசையும் உணர்வைத் தருவதனால், ஃபை தோற்றப்பாடு, பீட்டா அசைவைப் போன்றதே. இருந்தாலும், ஃபை தோற்றப்பாடு, தொடராக ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் ஒளிர்வுத் தூண்டல்களினால் உருவாகும் அசைவுத் தோற்றமாக இருக்கும் அதே வேளை, பீட்டா அசைவு, நிலையான ஒளிர்வுத் தூண்டல்களினால் ஏற்படும் அசைவுத் தோற்றம் ஆகும்.[1]

ஃபை தோற்றப்பாட்டுச் சோதனை[தொகு]

இச்சோதனையில், பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு திரையில், இரண்டு படங்கள் அடுத்தடுத்துக் காண்பிக்கப்படும். ஒரு படத்தில் அதன் வலது பக்கத்தில் ஒரு கோடு இருக்க, அடுத்த படத்தில் அக்கோடு அதன் இடது பக்கத்தில் இருக்கும். இவ்விரு படங்களையும், பல செக்கன்கள் இடைவெளியில் அல்லது மிக விரைவாகக் குறைந்த நேர இடைவெளியில் காண்பிக்கலாம். இவ்வாறு நேர இடைவெளிகளை மாற்றி திரையில் என்ன தெரிகிறது என்று சோதனையை நடத்துபவர் பார்வையாளரிடம் வினவுவார். குறித்த ஒரு நிலையில், அக்கோடு திரையின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு நகர்வது போல் தோன்றும். உண்மையில் கோடு நகர்வது இல்லை. ஆனால், ஒரு குறித்த நேர இடைவெளியில் முதலில் வலது பக்கத்திலும், பின்னர் இடது பக்கத்திலும் தோன்றுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. Steinman, R. M., Z. Pizlo, and F. J. Pizlo (2000). Phi is not beta, and why Wertheimer's discovery launched the Gestalt revolution: a minireview. Vision Research.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபை_தோற்றப்பாடு&oldid=3601158" இலிருந்து மீள்விக்கப்பட்டது