இலத்திரன் முகில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலத்திரன் முகில் (Electron cloud) என்பது, இலத்திரன் என்பது என்ன என்று விளக்குவதற்குப் பயன்படும் ஒரு சொல்லாகும். நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞரான ரிச்சார்டு ஃபெயின்மன் என்பவர் இதனை முதன் முதலில் பயன்படுத்தியதாகக் கருதப்படுகிறது. இந்த மாதிரி, ஸ்குரோடிங்கர் சமன்பாட்டுக்கு ஒரு தீர்வாக, இலத்திரனை விளங்கிக் கொள்வதற்கான ஒரு எளிய முறையை வழங்குகிறது. இலத்திரன் முகில் ஒப்புமையில், இலத்திரனின் நிகழ்தகவு அடர்த்தி, அல்லது அலைச் சார்பு என்பது, சிறிய முகில் அணுக்கருவை அல்லது மூலக்கூறொன்றின் கருவைச் சுற்றி நகர்வதாக விபரிக்கப்படுகிறது. இதில் முகிலின் ஒளிபுகவிடாத் தன்மை, இலத்திரனின் நிகழ்தகவு அடர்த்திக்கு விகிதசமம் ஆகும்.

இந்த மாதிரி, கோள்கள் சூரியனைச் சுற்றுவதுபோல் இலத்திரன்கள் அணுக்கருவைச் சுற்றுகின்றன என்னும் முன்னைய போர் மாதிரியில் இருந்து வளர்ச்சி பெற்றது ஆகும். இந்த இலத்திரன் முகில் மாதிரி; இரட்டை நீள்துளைச் சோதனை, ஆவர்த்தன அட்டவணையும் வேதிப் பிணைப்பும், ஒளியுடன் அணுக்களுக்கான தொடர்புகள் போன்ற பல தோற்றப்பாடுகளை முன்னரிலும் சிறப்பாக விளக்குகிறது. சில நுணுக்கமான விடயங்களில் குறைபாடுகள் காணப்பட்டாலும், இந்த மாதிரி, சோதனைகளின் மூலம் அவதானிக்கப்பட்ட அலை-துகள் இருமையை எதிர்வுகூற வல்லதாக உள்ளது. இலத்திரனின் நடத்தை அலையை ஒத்தது போலவும், சில சமயங்களில் ஒரு துகள் எனக் கருதக்கூடியதாகவும் இருமைத்தன்மை கொண்டதாக இருப்பது அலை-துகள் இருமை எனப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலத்திரன்_முகில்&oldid=2741858" இலிருந்து மீள்விக்கப்பட்டது