சி. நடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சி. நடேச முதலியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சி. நடேச முதலியார்
1934 இல் எடுத்த படம்
பிறப்பு1875
திருவல்லிக்கேணி, சென்னை
இறப்பு1937
சென்னை
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மாநிலக் கல்லூரி, சென்னை, சென்னை மருத்துவக் கல்லூரி
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிநீதிக்கட்சி

டாக்டர் சி. நடேச முதலியார் (1875-1937) நீதிக்கட்சியின் நிறுவனர் ஆவார். சென்னை நகரத்தில் திருவல்லிக்கேணி, பொன்னேரியில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியிலும், சென்னை மருத்துவக்கல்லூரியிலும் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

இவரது உருவம் கொண்ட இந்திய அஞ்சல் தலை

இவர் பிராமணரல்லாத வகுப்பினரின் நலனுக்காக குரல் கொடுக்க 1912 இல் ஐக்கிய சென்னை இயக்கம் (ஆங்கிலம்:Madras United League) என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் இவ்வியக்கம் சென்னை திராவிடர் சங்கம் (ஆங்கிலம்:Madras Dravidian Association) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசியலில் பங்கேற்காமல் 1914 இல் சென்னையில் பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை துவக்கினார். முதலியார் 1916 இல் அரசியல் போட்டியாளர்களாக இருந்த தியாகராய செட்டியையும் டாக்டர் டி. எம். நாயரையும் ஒருங்கிணைந்து செயல்பட வைத்தார். இதனால் ”தென்னிந்திய நல வாரியம்” எனப்படும் நீதிக்கட்சி உருவானது; முதலியாரும் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவரானார்.

1930களில் நீதிக்கட்சித் தலைவர்கள் : இடமிருந்து ஆறாவதாக பெரியாருக்கு அருகே நிற்கும் நடேச முதலியார். அவருக்கு அருகில் பொபிலி அரசர்

1921 இல் சென்னை மாகாணத்தில் திரு. வி. கலியாணசுந்தரனார் தலைமையில் நடைபெற்ற பங்கிங்காம் கர்நாடிக் ஆலை வேலைநிறுத்தத்தை (புளியந்தோப்பு கலவரங்கள்) முடிவுக்கு கொண்டுவந்ததில் இவருக்கும் தியாகராய செட்டிக்கும் பெரும்பங்கு உண்டு. நடேச முதலியார் 1923 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சென்னை சட்டமன்ற உறுப்பினரானார். ஆனால் நீதிக்கட்சி முதல்வர் பனகல் அரசருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிறிது காலம் சுப்பராயனின் ஆதரவாளராக இருந்தார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்டிருந்தாலும் கட்சியில் பிராமணர்களை அனுமதிக்க வேண்டும் என்று நடேச முதலியார் கருதினார். இதற்காக 1929 இல் நீதிக்கட்சி மாநாட்டில் அவர் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது (பின்னர் 1934 முதல் பிராமணர்கள் உறுப்பினர்களாக இருந்த தடை நீக்கப்பட்டது). 1937 வரை சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்த நடேச முதலியார் பெப்ரவரி 1937 இல் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._நடேசன்&oldid=3391071" இலிருந்து மீள்விக்கப்பட்டது