நகர்ப்புற வெப்பத்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்வேறு காரணங்களால் நகர்ப்புற வளிமண்டலம் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு கூடிய வெப்பநிலை கொண்டதாகக் காணப்படும். இது நகர்ப்புற வெப்பத்தீவு (urban heat island) எனப்படுகின்றது. இந்த வெப்பநிலை வேறுபாடு பகலைவிட இரவிலும், கோடை காலத்தைவிட, மாரி காலத்திலும் அதிகமாக இருக்கும். காற்றோட்டம் குறைவாக இருக்கும்போதும் இவ்வேறுபாடு அதிகமாகக் காணப்படும். நகர்ப்புற வெப்பத்தீவுக்கான முதன்மையான காரணம் நகர்ப்புற வளர்ச்சியின்போது நில மேற்பரப்பின் இயல்பு மாற்றப்படுவதாகும். நகரப்பகுதிகளில் அதிக ஆற்றல் பயன்பாட்டினால் விளையும் கழிவு வெப்பம் இதற்கு இன்னொரு காரணமாகும். மக்கள் நெருங்கி வாழும் பகுதிகள் வளர்ச்சியடையும்போது நிலப்பகுதிகள் மேன்மேலும் கூடிய அளவில் மாற்றம் அடைவதால் அதற்கு ஒப்ப வெப்பநிலையிலும் அதிகரிப்புக் காணப்படும்.

காரணங்கள்[தொகு]

வெப்பம் (மேல்) மற்றும் தாவரப் பரம்பல் (கீழ்) ஆகியவற்றைக் காட்டும் படங்கள். 2002 ஆகஸ்ட் 14 ஆம் தேதி நாசாவின் லாண்ட்சட் செய்மதியால் எடுக்கப்பட்ட நியூ யார்க் நகரின் அகச்சிவப்புக் கதிர்ப் படங்கள். தாவரங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் வெப்பம் குறைவாகவும், தாவரங்கள் குறைவான இடங்களில் வெப்பம் கூடுதலாக இருப்பதையும் கவனிக்கவும்.

நகர்ப்புற வெப்பத்தீவுக்கான காரணங்கள் பல. கட்டிடங்கள் நெருக்கமாக இருப்பதால் வெப்பம் வெளியே இழக்கப்படுவது குறைவாக உள்ளது. நகரப் பகுதிகளில் காணும் மேற்பரப்புக்களின் வெப்ப இயல்புகளில் ஏற்பட்ட மாற்றங்களும், தாவரங்களினால் ஏற்படக்கூடிய ஆவியுயிர்ப்புக் குறைவாக உள்ளமையும் மேலும் இரண்டு முக்கியமான காரணிகள் ஆகும். நகரப் பகுதிகளில் உள்ள மேற்பரப்புக்கள் பெரும்பாலும், அஸ்பால்ட்டு, காங்கிறீற்று போன்றவையாக உள்ளன. இவற்றின் வெப்பக் கொள்ளளவு, வெப்பக் கடத்துதிறன் என்பனவும், வெப்பத்தை உறிஞ்சும்தன்மை, வெளிவிடும்தன்மை என்பனவும் சூழவுள்ள நாட்டுப்புறப் பகுதிகளில் காணப்படும் மேற்பரப்புகளிலும் வேறுபாடாக உள்ளன. இது ஆற்றல் சமநிலையில் மாற்றம் உண்டாகி, நகரப்பகுதி வெப்பநிலை உயர்வதற்குக் காரணமாகின்றது.

இவற்றுடன், நகரங்களில் காணப்படும் உயரமான கட்டிடங்கள், சூரியக் கதிர்வீச்சைப் பலமுறை தெறிப்பதற்கும், உறிஞ்சுவதற்கும் ஏற்ற வகையில் பல மேற்பரப்புக்களைக் கொண்டுள்ளன. இது நகரப்பகுதிகளைச் சூடேற்றுவதற்கான செயற்திறன் மிக்க ஒன்றாக உள்ளது. இது கன்யன் விளைவு எனப்படுகின்றது. கட்டிடங்கள் காற்றோட்டத்தைத் தடுப்பதாலும், மேற்காவுகை மூலம் வெப்பம் இழக்கப்படுவது குறைகிறது. தொழிற்சாலைகள், வளிப்பதனப் பொறிகள் என்பவற்றிலிருந்து வெளியேறும் கழிவு வெப்பமும் நகரங்களில் வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமாக அமைகின்றது.

மாசுப்பொருட்கள் பல வளிமண்டலத்தின் கதிர்வீசும் தன்மையில் மாற்றங்களை உண்டாக்கக் கூடியன என்பதால், நகரப்பகுதிகளில் காணப்படும் உயர்ந்த அளவு மாசடைந்த சூழலும் நகர்ப்புற வெப்பத்தீவு விளைவுக்குப் பங்களிக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர்ப்புற_வெப்பத்தீவு&oldid=3197915" இலிருந்து மீள்விக்கப்பட்டது