ஹிப்போவின் மோனிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மோனிக்கா
புனித மோனிக்கா, தன் மகன் புனித அகுஸ்தீனுடன்
கைம்பெண்
பிறப்பு332
தகாஸ்தே, நுமிடியா (இன்றைய அல்சீரியா)
இறப்பு387,
ஓஸ்தியா, இத்தாலியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் லூதரனியம்
திருவிழா27 ஆகத்து
பாதுகாவல்திருமண பிரச்சினைகள், குழந்தைகளின் நன்னடத்தை, விபச்சாரம் அல்லது நம்பிக்கையில்லாமையால் துன்புறுவோர், பொய்க் குற்றச்சாட்டினால் வதந்திகளாலும் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் உறவினர்களின் மனமாற்றம்

புனித மோனிக்கா[1] (331[2] – 387) ஒரு கிறித்தவ புனிதராவார். இவர் புனிதரும் மறைவல்லுநருமான புனித ஹிப்போவின் அகுஸ்தீனுடைய தாயுமாவார். புனித ஹிப்போவின் அகுஸ்தீன் எழுதிய தன்வரலாற்று நூலில் (Confessions) தம் மனமாற்றம் பற்றி எழுதுவதோடு அந்த மனமாற்றத்துக்குத் துணைபுரிந்த தன் அன்னையாகிய மோனிக்காவின் புனிதத்தையும் வெகுவாகவே போற்றியுள்ளார்.

புனத மோனிக்கா திருஉருவச்சிலை, டேய்போர், செக் குடியரசு (சுமார் 1700-இல் செய்யப்பட்டது)

வாழ்க்கை குறிப்பு[தொகு]

மோனிக்காவின் பெயரிலிருந்து அவர் பேர்பர் இனத்தவர் என நம்பப்படுகின்றது.[3] இவர் இளவயதிலேயே பத்ரீசியஸ் என்னும் பாகாலைச் சார்ந்தவருக்கு திருமணமானவர். பத்ரீசியஸ் அல்சீரியாவில் அரசு சார்ந்த பதவி வகித்து வந்தார். பத்ரீசியஸ் பெயரளவில் மட்டுமே இறை நம்பிக்கை உடையவராய் இருந்தார். இதனால் கிறித்தவரான மோனிக்காவின் மணவாழ்வு அமைதியின்றி இருந்தது.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் அகுஸ்தீன், இரண்டாமவர் நவீஜியஸ், மூன்றாவது பெண் குழந்தை பெர்பெத்துவா. தன் கணவரின் அனுமதி கிடைக்காததால் இவர்களுக்கு மோனிக்காவால் திருமுழுக்கு கொடுக்க இயலவில்லை. இளவயதினில் அகுஸ்தீன் நோய்வாய்ப்பட்ட போது, திருமுழுக்கு கொடுக்க இணங்கினாலும், உடல் நலம் தேறிய போது, பத்ரீசியஸ் தன் மனதை மாற்றிக்கொண்டார்.

அகுஸ்தீன் மதாருஸ் நகருக்கு கல்விகற்க அனுப்பப்பட்டார். இவ்வேளையில் பத்ரீசியஸ் மனமாறி கிறித்தவரானார். பத்ரீசியஸ் மனமாறிய சில நாட்களிலேயே இறந்தார். அதன் பின் மோனிக்கா மறு மணம் புரியவில்லை. கார்தேஜ் நகருக்கு கல்விகற்க சென்ற அகுஸ்தீன், ஒழுக்கமற்ற வாழ்வை வாழத் தொடங்கினார்.

அங்கே அகுஸ்தீன் மனிக்கேய கொள்கையைத் தழுவி தம் தாயாரை மனம் நோகச் செய்தார். மகனுடைய போக்கினால் வேதனையுற்ற மோனிக்கா கிறித்தவ சமயத் தலைவராகிய ஒரு புனித ஆயரிடம் சென்று ஆலோசனை கேட்டர். அவர் மோனிக்காவிடம், "இவ்வளவு கண்ணீர் வழிந்தோடக் காரணமாக இருந்த மகன் ஒருநாள் மனம் திரும்புவார்" என்று கூறிய சொற்கள் வரலாற்றில் சிறப்புப் பெற்றவை.

அகுஸ்தீன் அன்றைய உலகின் கலாச்சார மையமாக இருந்த உரோமை நகருக்கு யாரிடமும் சொல்லாமல் பயணமாகிச் சென்றார். இதை அறிந்த மோனிக்கா மகனைத் தேடி உரோமைக்குச் சென்றார். அதற்குள் அகுஸ்தீன் மிலான் சென்றுவிட்டார். அங்கேயும் மோனிக்கா மகனைப் பின்தொடர்ந்தார். மிலான் நகர ஆயரான அம்புரோசுவினால் மன மாற்றம் அடைந்த அகுஸ்தீன், 17-வருட எதிர்ப்புக்குப் பின் திருமுழுக்கு பெற்றார். அகுஸ்தீன் எழுதிய தன்வரலாற்று நூலாகிய "Confessions" என்னும் புத்தகத்தில் தம் இளமைக்கால அனுபவங்களையும் தாம் தவறான வழியில் சென்றதையும் பின் தன் தாயின் இறை வேண்டுதலால் மனம் மாறியதையும் விரிவாக வடித்துள்ளார்.

இறப்பு[தொகு]

இத்தாலி நாட்டை விட்டு ஆப்பிரிக்காவுக்குப் பயணமாகச் செல்லுவதற்கு அகுஸ்தீனும் மோனிக்காவும் உரோமை நகரின் துறைமுகமாகிய ஓஸ்தியா நகரில் காத்திருந்தபோது மோனிக்கா நோய்வாய்ப்பட்டு உயிர்துறந்தார். ஓஸ்தியா நகரிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.[4] அவரது கல்லறை சிறிதுகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்தாலும், 6ஆம் நூற்றாண்டில் மோனிக்காவின் மீப்பொருள்கள் ஓஸ்தியாவில் புனித அவுரா என்பவர் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு புனித அவுரா கல்லறை அருகே மோனிக்கா அடக்கம் செய்யப்பட்டார். அக்கல்லறையில் பதிக்கப்பட்ட கல்லின் பகுதி, பொறிக்கப்பட்ட செய்தியோடு 1945இல் கண்டெடுக்கப்பட்டது.

13-ஆம் நூற்றாண்டில் இவரின் பக்தி பரவ ஆரம்பித்ததால், இவருக்கு விழா நாள் 4 மே-இல் கொண்டாடப்பட்டது. 1430-இல் திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் இவரின் மீப்பொருட்களை உரோமைக்குக் கொண்டுவரச்செய்தார். வரும் வழியிலேயே பல புதுமைகள் நிகழ்ந்ததென்பர். இப்போது, புதிய நாள்காட்டியின்படி, மோனிக்காவின் திருவிழா ஆகத்து 27ஆம் நாள் (புனித அகுஸ்தீனின் திருவிழாவுக்கு முந்தின நாள்) கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கலிபோர்னியா மாநிலத்தில் சாந்தா மோனிக்கா நகரத்திற்கு இவரின் பெயரிடப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்புகள்[தொகு]

  1. "...Augustine's mother's name, Monica, is Berber … the names Monnica and Nonnica are found on tombstones in the Libyan language – as such Monnica is the only Berber name commonly used in English", Michael Brett and Elizabeth Fentress, The Berbers, Wiley-Blackwell, 1997, p.71, 293
  2. The Liturgy of the Hours, Volume IV. Proper of Saints, August 27.
  3. Michael Brett and Elizabeth Fentress, The Berbers, Wiley-Blackwell, 1997, p.71.
  4. "Church of Sant'Aurea". Ostia-Antica.org. பார்க்கப்பட்ட நாள் March 15, 2011.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிப்போவின்_மோனிக்கா&oldid=3352701" இலிருந்து மீள்விக்கப்பட்டது