ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் சின்னம்

ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் (Tamil Cultural Association, Hong Kong) 1967 ஆம் ஆண்டிலிருந்து ஹொங்கொங்கில் செயல்பட்டு வரும் ஒரு கழகமாகும். இக்கழகத்தினர் தங்களிடையே இந்து, இசுலாம், கிறித்தவம் எனும் சமய பேதங்களின்றி "நாம் அனைவரும் தமிழர்கள்" என ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து இந்த கழகத்தை நடத்தி வருகின்றனர்.

வரலாறு[தொகு]

1967 ஒக்டோபர் 13 ஆம் திகதி இந்த ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் பதிவு செய்யப்பட்டது. இந்த கழகத்தின் தோற்றம் பி.எசு.அப்துல் ரகுமான் என்பவரின் முயற்சியால் உருவானது ஆகும்.[1] 1968 ஆம் ஆண்டு முதல் பொது கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கழகத்தின் தொடக்கக் காலத்தின் தலைவராக செல்வக்கனி முஹம்மது யூனூஸ் என்பவர் பொறுப்பு வகித்தார்.

கழகம் உருவாக்கத்தின் பின்னணி[தொகு]

"இந்த ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் ஆரம்பகால செயல் திட்டங்கள் என்னவாக இருந்தன? இந்த கழகம் உருவாக்கியதன் நோக்கம் என்னவாக இருந்தது?" எனும் கேள்விகளுக்கு செல்வக்கனி முஹம்மது யூனூஸ் அவர்கள் கூறியதாவது, ஹொங்கொங் மக்கள் தமது பொழுது போக்கு நிகழ்வுகளாக உல்லாச விடுதிகள், குதிரை ஓட்டப் பந்தயங்கள் போன்றவற்றில் செலவிடுவார்கள். தமிழருக்கோ அவ்வகையான பொழுது போக்குகளில் நாட்டமில்லை; சினிமா பார்த்தல், நாடகங்கள் நடித்தல் போன்ற விடயங்களிலேயே ஆர்வம் உள்ளவர்கள். அக்காலகட்டத்தில், இன்றைய காலகட்ட பொருற்களான குறுந்தட்டு, தொலைக்காட்சி போன்றன இருக்கவில்லை. எனவே ஹொங்கொங்கில் தமிழ் சினிமா பார்ப்பதற்கும் வாய்பில்லை. அதனால் அப்போது ஹொங்கொங்கில் தொழிலதிபராக இருந்த பி.எசு.அப்துல் ரகுமான் என்பரின் தலமையில் இந்தியாவில் இருந்து சினிமா படங்களை எடுப்பித்து பார்ப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது இருந்த சட்டத் திட்டங்களின் படி சினிமா சுருள்களை விமானத்தின் ஊடாக எடுப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. ஹொங்கொங் சட்டங்களின் படி திரைப்படச் சுருள்களை எடுப்பிப்பதானால், ஹொங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு அல்லது கழகம் இருத்தல் வேண்டும் எனும் நிலை இருந்தது. அதன் காரணமாக உருவாக்கப்பட்டதே "ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம்" ஆகும்.

அத்துடன் எடுப்பிக்கும் திரைப்படச் சுருள்களை திரையரங்குகளில் ஓட்டவோ, திரையரங்குகளில் ஓட்டி இலாபம் ஈட்டுவது என்பதெல்லாம் அக்கால கட்டத்தில் சாத்தியமானதாக இருக்க வில்லை. திரைப்படச் சுருளை எடுப்பித்த அன்றே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரிடத்தில், திரையிட்டு பார்த்துவிட்டு, உடனடியாக திரைப்படச் சுருள்களை திருப்பி அனுப்பிவிடுதல் தான் அப்போதைய நடைமுறையாக இருந்தது.

வரவேற்பளிப்பு நிகழ்வுகள்[தொகு]

இந்த கழகம் உருவாக்கப்பட்ட அதே ஆண்டு, தமிழகத்தில் முதல்வராக இருந்த கா. ந. அண்ணாதுரை அவர்கள் ஹொங்கொங் வந்தார். அதனை அறிந்த ஹொங்கொங் வாழ் தமிழர்கள் ஒருங்கிணைந்து வரவேற்பு வழங்கினர். அவ்வரவேற்பு நிகழ்வை "ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம்" எனும் கழகத்தின் ஊடாகவே வழங்கப்பட்டது. இது இக்கழகத்தின் இரண்டாவது செயலாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆறுமுக நாவலர், இரா. நெடுஞ்செழியன் (1970), அப்துல் சமது (1976), குமரி அனந்தன் (1985), லேனா தமிழ்வாணன் (1988) போன்ற தமிழ் பிரமுகர்கள் பலர் ஹொங்கொங் வரும் போது அவர்களுக்கு வரவேற்பளித்தல், வரவேற்று கௌரவித்தல் போன்ற செயல்களையும் இந்த கழகம் செய்துவருகிறது.

கழகத்தின் வளர்ச்சிப் போக்கு[தொகு]

இவ்வாறான செயல்கள் படிப்படியாக கலை நிகழ்ச்சிகளை நடத்துதல், மேடை நாடகங்களை அரங்கேற்றுதல் என படிப்படியாக வளர்ந்து தற்போது, குறும்படங்கள், சிறுவர் விழா, விளையாட்டுப் போட்டி, சுற்றுலா என பல்வேறு செயல்திட்டங்களையும் கொண்டு இயங்குகிறது. அன்மைக் காலங்களில் இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம், சிவாஜி திரைப்படம் போன்றவற்றை எடுப்பித்து திரையரங்கில் ஒரு நாள் காட்சிகளாக திரையிடப்பட்டதும் இக்கழகத்தின் செயல் திட்டங்கள் ஆகும்.

இந்த கழகம் நடத்திய கலை நிகழ்ச்சிகளும் உள்ளன. அவற்றில் இசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், சொற்பொழிவு, நீயா நானா நிழச்சி போன்றனவும் உள்ளடங்கும்.[2] "சீனமொழி ஒரு அறிமுகம்" எனும் நூலும் இந்த கழகத்தால் வெளியிடப்பட்டது. அத்துடன் சமூக நலன் சார்ந்த சில செயல்களையும் இக்கழகம் முன்னெடுத்து வருகிறது. வாழ்ந்து பார்க்கலாம் வா என்ற தலைப்பில் சுகி சிவம் சொற்பொழிவாற்றினார். [3]

மேற்கோள்கள்[தொகு]

ஒங்கொங்:விக்கிவாசல்
  1. "TCA வரலாறு பக்கம்". Archived from the original on 2010-09-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-07.
  2. நீயா நானா ஹொங்கொங்கில்
  3. தினமலர் செய்தி- ஹாங்காங்கில் சுகி சிவம் சொற்பொழிவு

வெளி இணைப்புகள்[தொகு]