திரைச் சுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பௌஹவுஸ் கட்டிடத்தின் கண்ணாடித் திரைச் சுவர்.
1957ல் மீஸ் வன் டெர் ரோவினால் வடிவமைக்கப்பட்ட சீக்ரம் கட்டிடம் (Seagram Building)

கட்டிடங்களில், திரைச் சுவர் (Curtain Wall) என்பது, அதன் சொந்த நிறை தவிரக் கட்டிடத்தின் வேறு எப்பகுதியின் நிறையையும் தன்மீது தாங்காத, கட்டிட முகப்பாக அமையும் சுவர்களாகும். இவற்றின் நிறை இணைப்புக்களின் ஊடாகக் கட்டிடத்தின், தூண்கள், தளங்கள் என்பவற்றுக்குக் கடத்தப்படுகின்றன. இவை சுமை தாங்காவிடினும், வெளியிலிருந்து வரக்கூடிய ஒளி, வெப்பம், சத்தம், மழை நீர், காற்று போன்றவை கட்டிடத்துக்குள் வருவதைக் கட்டுப் படுத்தும் வகையில் வடிவமைக்கப் படுகின்றன. அத்துடன் இவை காற்றின் விசை, நில நடுக்கம் போன்றவற்றினால் உண்டாகக்கூடிய விசைகள் என்பவற்றையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைத்து அமைக்கப்படுகின்றன.


பொதுவாகத் திரைச்சுவர்கள் தற்காலத்தில் அலுமினியம் சட்டகங்களால் தாங்கப்படுகின்ற, கண்ணாடி, அலுமினியம் கூட்டுப் படல்கள் என்பவை மூலம் அமைக்கப்படுகின்றன. எனினும் தொடக்க காலங்களில் உருக்கு அலுமினியத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டது. இக் கட்டிடப்பொருட்கள், கட்டிடத்துக்கு நவீன தோற்றத்தக் கொடுக்கின்றன. நிரப்பு படல்களாகக் கண்ணாடி அலுமீனியம் தவிர, மெல்லிய கற்பலகைகள், பல்வேறு உலோகத் தகடுகள், சாளரங்கள், என்பனவும் பயன்படுவது உண்டு.

சிறப்பியல்புகள்[தொகு]

கடை முகப்புக்களும் இதுபோலவே, தோற்றம் அளித்தாலும், திரைச் சுவர்கள் கட்டிடங்களின் பல தளங்களை மூடி அமைவது இதனைக் கடை முகப்புக்களில் இருந்து வேறுபடுத்துகின்றது. இவை பொதுவாகப் பெரிய பரப்பளவை மூடி அமைய வேண்டி இருப்பதனால், வெப்ப விரிவு, சுருக்கம் என்பன இவற்றின் உறுதிப்பாட்டில் தாக்கத்தை விளைவிக்கக் கூடியன. இதனால் திரைச் சுவர்களின் வடிவமைப்பில் இது கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அத்துடன் இது உயரமான கட்டிடங்களில் பயன்படுத்தப் படும்போது, காற்று முதலியவற்றால் கட்டிடங்களில் ஏற்படும் சிறிய ஊசலாட்டம், காற்றின் விசை என்பனவும் திரைச் சுவர் வடிவமைப்பில் முக்கிய கவனம் பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைச்_சுவர்&oldid=3683271" இலிருந்து மீள்விக்கப்பட்டது