தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் (Thomas William Rhys Davids) (மே 12, 1843 - டிசம்பர் 27, 1922) பிரித்தானியாவைச் சேர்ந்த பாளி மொழி அறிஞராவார். பாளி நூற் சபை (Pali Text Society) தொடக்கி வைத்தவரும் இவரே. இவர் பாடசாலையில் இலத்தீன் மொழியைச் சிறப்பாகக் கற்றவர். நிர்வாக சேவையில் சேரவிரும்பிய இவர் ஜெர்மனியிலுள்ள பிரெஸ்லோவில் (Breslau) சமஸ்கிருதம் படித்தார். அங்கே தனது செலவுக்காக ஆங்கிலம் கற்பித்து வந்தார். 1863 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பிய இவர் நிர்வாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றி அதில் வெற்றிபெற்றார்.

இலங்கையில் பணி[தொகு]

இவருக்கு இலங்கையில் நீதிவானாகப் (Magistrate) பணி புரிய வாய்ப்புக் கிடைத்தது. இலங்கையின் காலி நகரத்தில் இவர்முன் விசாரணைக்கு வந்த வழக்கொன்றில் முன்வைக்கப்பட்ட ஆவணம் ஒன்றின்மூலம், பாளி மொழி பற்றி அறிய நேர்ந்தது. 1871 ஆம் ஆண்டில், இலங்கையின் அனுராதபுரம் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த நுவரகலாவய என்னும் இடத்திற்கு உதவி அரசாங்க அதிபராகப் பணி மாற்றப்பட்டார். அக் காலத்தில் ஆளுனராக (Governor) இருந்த சர் ஹெர்குலிஸ் ரொபின்சன் (Hercules Robinson) என்பார் 1868 இல் தொல்லியல் கமிஷனை உருவாக்கியிருந்தார். இதன் மூலம் இலங்கையின் பண்டைய தலைநகரமான அநுராதபுரத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் ரைஸ் டேவிட்ஸ் ஆர்வம் காட்டிவந்தார். கல்வெட்டுக்களையும், கையெழுத்துப்பிரதிகளையும் சேகரித்து வந்த இவர் 1870-1872 காலப் பகுதியிலிருந்து அரச ஆசியக் கழகத்தின் (Royal Asiatic Society) இலங்கைக் கிளையின் இதழ்களில் அவை பற்றிக் கட்டுரைகளும் எழுதினார். இக் காலத்தில் உள்ளூர் மொழியான சிங்களத்தையும் கற்றுக்கொண்ட இவர் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தார்.

மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு[தொகு]

இவரது மேலதிகாரியாக இருந்த சி. டப்ளியூ. டுவைனம் (C. W. Twynham) என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, இவர் மீது விசாரணைகள் நடத்தப்படுக் குற்றவாளியாகக் காணப்பட்டதன் பேரில் இவரது நிர்வாக சேவைத் தொழிலும், இலங்கை வாழ்க்கையும் சடுதியாக முடிவுக்கு வந்தன. பின்னர் இவர் சட்டம் படித்துச் சிறிது காலம் சட்டத்தொழில் புரிந்தார். இக் காலத்திலும் இலங்கையின் கல்வெட்டுக்கள் தொடர்பான கட்டுரைகளையும் மொழிபெயர்ப்புக்களையும் தொடர்ந்து எழுதிவந்தார். இவற்றுள் மாக்ஸ் முல்லரால் தொகுக்கப்பட்ட பல தொகுதிகளைக் கொண்ட பாரிய நூலான கிழக்கத்தியப் புனித நூல்கள் (Sacred Books of the East) தொகுப்புக்கு அவர் எழுதியவை குறிப்பிடத்தக்கவை.

இலண்டனில் டேவிட்ஸ்[தொகு]

ரைஸ் டேவிட்ஸ், 1882 ஆண்டிலிருந்து 1904 ஆண்டுவரை இலண்டன் பல்கலைக் கழகத்தில் பாளி மொழிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இப் பதவிக்கு, விரிவுரைகளுக்கான கொடுப்பனவு தவிர நிரந்தரமான சம்பளம் எதுவும் கிடையாது. 1905 இல், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஒப்பியல் சமயத் துறையின் (Comparative Religion) தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டேவிட்ஸ், இங்கிலாந்தில், தேரவாத பௌத்தம் மற்றும் பாளி தொடர்பான துறையை வளர்த்து எடுப்பதில் பல வழிமுறைகளைக் கையாண்டார். பெரிய பிரித்தானியாவின் ஆசியக் கழகத்தின் (Asiatic Society of Great Britain) துணையுடன், இந்திய மொழிகள் மற்றும் இலக்கியங்களின் கல்விக்குப் பிரித்தானிய அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வாதிட்டுவந்தார். இந்தியாவில் பிரித்தானியாவின் பிடியை வலுவாக வைத்திருப்பதற்கு இது எவ்வாறு உதவும் என்பதற்கான பல்வேறு காரணங்களை எழுத்து மூலமாகவும், விரிவுரைகளூடாகவும் தீவிரமாக முன்வைத்தார்.

ஆரிய இனவாதக் கொள்கை[தொகு]

சாதாரண மக்களுடைய கவனத்தை இதன்பால் திருப்புவதற்கான இவரது முயற்சியின் ஒரு பகுதியாக, இனவாத அடிப்படையில் அமைந்த ஆரிய இனக் கொள்கையை முன்னிறுத்திப் பல விரிவுரைகளை ஒழுங்கு செய்தார். இதன்மூலம், பிரித்தானியர், சிங்களவர் மற்றும் புத்தரின் இனத்தவர் எல்லோரும் ஒரே ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என வாதிட்டுவந்தார். இவருடைய நோக்கு, மாக்ஸ் முல்லரின் இனவாதக் கோட்பாடுகளுடன் ஓரளவு ஒத்திருந்ததாயினும், இருவரும் இதனைப் பயன்படுத்திய முறையில் வேறுபாடுகள் காணப்பட்டன. டேவிட்ஸ், பிரித்தானியர்களுக்குப் புத்தரின் கோட்பாடுகளுடன் இயல்பான தொடர்பு உண்டு என நிறுவுவதற்கு இக் ஆரிய இனக் கோட்பாடுகளைப் பயன்படுத்த முயன்றார். இதன் காரணமாக இவர் பலரின் கண்டனத்துக்கு உள்ளானார்.

வெளியிணைப்புகள்[தொகு]