முள்ளம்பன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ParaHoxozoa
முள்ளம்பன்றி
வட அமெரிக்க முள்ளம்பன்றி
உயிரியல் வகைப்பாடு e
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Suborder:
Hystricomorpha

Brandt, 1855

தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், (Porcupine) ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படும் இனங்கள் ஹிஸ்ரிசைடியே (Hystricidae) என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் முள்ளம்பன்றி இனங்கள் Erethizontidae எலிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

ஆசிய நாடுகளில் முள்ளம்பன்றி[தொகு]

இலங்கை, மற்றும் இந்தியாவில் யில் பரவலாகக் காணப்படும் முள்ளம்பன்றி இந்தியன் பொகியுபின் (Indian Porcupine) எனப் பொதுவாக அழைக்கப்படும். இஸ்ரரிக் இன்டிகா (Hysterix indica) என்ற இனத்தைச் சேர்ந்தவை. இவை பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன.

அமைப்பு[தொகு]

அதன் தலையும் உடலும் 70செ.மீ. - 90 செ.மீற்றர் வரை நீளமாக இருக்கும். வாலின் நீளம் 8செ.மீ. - 10 செ.மீற்றர் வரை இருக்கலாம். இவ்வின முள்ளம் பன்றி 11 கிலோகிராம் முதல் 18கிலோகிராம் வரை நிறையுடையதாக வளரலாம். முள்ளம்பன்றியின் தோலிலுள்ள மயிர்கள் நீண்ட, கூர்முனையுடைய முட்களாகத் திரிவு அடைந்துள்ளன. இம்முட்கள் பல படைகளாகக் காணப்படுகின்றன. வெளிப்புறமாகவுள்ள நீண்ட, மெல்லிய முட்களுக்குக் கீழாக குட்டையான, தடித்த முட்கள் அமைந்துள்ளன.

முட்கள்[தொகு]

முள்ளம்பன்றி முட்கள்

ஒவ்வொரு முள்ளும் கறுப்பு அல்லது கபில நிறப் பின்னணியில் இடம்விட்டு அமைந்த வெண்ணிறப் பட்டைகளாகத் கொண்டிருக்கும். இம்முட்கள் நீளத்தில் வித்தியாசமானவையாக இருக்கும். கழுத்திலும், தோள் பகுதியிலும் உள்ள முட்களே நீளத்தில் கூடியவை. இவை 15 முதல் 30 செ.மீற்றர் வரை நீண்டிருக்கலாம். வாலைப் போர்த்தியுள்ள முட்கள் குட்டையானவையாகவும், வெண்ணிறமாகவும் இருக்கும். இவற்றுக்கிடையில் கிலுகிலுப்பு ஒலியை உருவாக்கக் கூடிய, நீண்ட, உட்குடைவான முட்கள் காணப்படும். இம்முட்களினால் எழுப்பப்படும் கிலுகிலுப்பை ஒலி எதிரிகளை எச்சரிப்பதற்கு உதவுகின்றன.

உணவு[தொகு]

முள்ளம்பன்றியின் கைகளும், பாதங்களும் அகன்றவையாக இருக்கும். அவற்றிலிருக்கும் நீண்ட நகங்கள் தரையில் வளைகளைத் தோண்டுவதற்கு ஏற்றவனவாக உள்ளன. இந்திய முள்ளம்பன்றி பழங்கள், தானியங்கள், தாவர வேர்கள் போன்றவற்றையே பிரதான உணவாகக் கொள்கின்றது. இயற்கைத் தாவரங்கள், விவசாயப் பயிர்கள் ஆகிய இரு வகைகளையும் இவை பயன்படுத்துகின்றன. அத்தோடு, தமது முட்களின் வளர்ச்சிக்குத் தேவையான கல்சியம் போன்ற கனிப்பொருட்களைப் பெறுவதற்காக இவை எலும்புகளையும், நத்தை ஓடுகளையும் மென்று தின்கின்றன.

வளைகள்[தொகு]

முள்ளம் பன்றிகள் இரவிலேயே நடமாடித் திரிகின்றன. பகல்நேரங்களில் பாறைகளுக்கிடையிலுள்ள குகைகளில் அல்லது நிலத்தில் தாமே தோண்டிக் கொண்ட வளைகளில் காலத்தைக் கழிக்கின்றன. இவற்றின் வளைகள் நுழையவாயிலைக் கொண்ட நீண்ட சுரங்கப் பாதையொன்றையும் பெரிய உள்ளறை ஒன்றையும் கொண்டிருக்கும். இவ்வறையில் இருந்து வெளியேறுவதற்குப் பல சுரங்க வழிகள் காணப்படும். தோண்டியெடுக்கப்பட்ட மண், கொறிக்கப்பட்ட எலும்புத்துண்டுகள் முதலியன நுழைவாயிலின் அருகே குவிக்கப்பட்டடிருக்கும்.

இந்திய முள்ளம்பன்றிகள் பல்வேறு வகையான சூழல்களில் இசைவாக்கத்துடன் வாழக்கூடியவை. பொதுவாக பாறைப்பாங்கான மலைப்பகுதிகளை அவை நாடுகின்ற போதிலும், வெப்பவலய மற்றும் இடைவெப்பவலயப் புல்வெளிகள், பற்றைக் காடுகள், அடர் காடுகள் போன்ற சூழல்களிலும் அவை பரவலாக வாழ்கின்றன. இமாலய மலைப் பிரசேத்தில் சுமார் 2400 மீற்றர் உயரமுள்ள பகுதிகள் வரை இவை வசிப்பது குறிப்பிடத்தக்கது.

எதிரிகளைத் தாக்குதல்[தொகு]

பனிப் பிரதேசத்தில் வாழும் முள்ளம்பன்றி

தொந்தரவு செய்யப்பட்டால் அல்லது அச்சமுற்றால் முள்ளம்பன்றி தனது முட்களை உயர்த்தி நிமிர்த்திக் கொள்வதோடு, வாலிலுள்ள கிலுகிலுப்பு முட்களை அசைத்து எச்சரிக்கை ஒலியொன்றை எழுப்பும், தொந்தரவு நீடிக்குமாயின், அது விரைவாகப் பின்னோக்கிச் சென்று எதிரியை தன் பின்புற முட்களினால் மோதித் தாக்கும். அப்போது அதன் முட்கள் எதிரி விலங்கின் உடலினுள் ஆழமாக அமிழ்ந்து கடும் காயத்தை அல்லது மரணத்தை விளைவிக்கலாம்.

முதுகிலும் வாலிலும் நீண்ட முட்களுக்குக் கீழே அமைந்துள்ள குட்டையான தடித்த முட்களே அதிக சேதத்தை விளைவிக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இம்முட்கள் முள்ளம்பன்றியின் உடலிலிருந்து அகன்று தாக்குதலுக்கு உள்ளான விலங்கின் உடலில் அமிழ்ந்து விடலாம். புலிகள், சிறுத்தைகள் போன்ற பெரிய விலங்குகள் கூட முள்ளம்பன்றியின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த நிகழ்ச்சிகள் அறியப்பட்டுள்ளன.

எனினும், சிலர் நம்புவது போல், முள்ளம்பன்றியால் தனது முட்களை ஈட்டிகள் போல எறியச் செய்ய முடியாது என்பது கவனிக்கத்தக்கது. மனிதர்கள் முள்ளம்பன்றிகளை இறைச்சிக்காக வேட்டையாடுகிறார்கள். அத்தோடு, புலி, சிறுத்தை, காட்டுப்பூனை போன்ற பெரிய ஊணுண்ணிகளும் இவற்றை இரையாகக் கொள்கின்றன.

இனப்பெருக்கம்[தொகு]

இந்திய முள்ளம்பன்றிகளில் கர்ப்ப காலம் 240 நாட்கள் நீடிக்கும். பொதுவாக வருடத்திற்கு ஒரு தடவை 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனப்படுகின்றன. குட்டிகள் பிறக்கும் போது அவற்றின் கண்கள் திறந்தே காணப்படும். அவற்றின் உடல் குட்டையான மென் முட்களால் மூடப்பட்டிருக்கும். இந்திய முள்ளம்பன்றிகள் பொதுவாக ஒரே வாழ்க்கைத் துணையோடுதான் சீவிக்கின்றன. இரு பெற்றாரும் தம் குட்டிகளோடு வருடம் பூராவும் ஒரே வளையில் வாழ்வதைக் காணமுடியும்.

விவசாயிகளின் எதிரி[தொகு]

முள்ளம்பன்றிகள் பயிர்களின் வேர்களைத் தோண்டிச் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்குப் பிரச்சினையாக மாறுகின்றன. அத்தோடு, வளைகள் தோண்டுவதன் மூலம் வீட்டுத் தோட்டங்களையும், நில வடிவமைப்புக்களையும் அவை பெரிய அளவில் சேதப்படுத்துகின்றன.

ஆதாரம்[தொகு]

அரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளம்பன்றி&oldid=3483220" இலிருந்து மீள்விக்கப்பட்டது