உட்செவிச்சுருள் பதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உட்செவிச்சுருள் பதியம்

உட்செவிச்சுருள் பதியம் அல்லது காது உட்பதியக் கருவி என்பது பிறப்பிலேயே முற்றிலும் செவிட்டுத் தன்மை உடைய ஒருவர் கேட்க உதவும் ஒரு இலத்திரனிய கருவி. (வயதானவர்கள் பெருத்திக்கொள்ளும் கேட்புக் கருவி என்பது வேறு) இது பெரும்பாலும் குழந்தை பருவத்திலேயே, அறுவைச் சிகிச்சை மூலம் காதினுள் பதிய வைக்கப்படுகிறது. இது ஒலியைப் பெருக்கித்தரும் கேள்விக்கருவி அன்று. மாறாக, இது உட்செவிச்சுருளுக்குள் இருக்கும் இன்னும் தொழிற்படக்கூடிய ஒலி நரம்பணுக்களை மின்புலத்தால் தூண்டிவிடுவதன் மூலம் கேட்க உதவுகின்றது.

கருவி[தொகு]

இந்தக் கருவியானது வெளிக்கருவி, உட்கருவி என இரண்டு பகுதிகளாக உள்ளது. வெளிக்கருவியைக் காதுக்குப் பின்புறம் வெளியில் தெரிவதுபோல் பொருத்தப்படுகிறது. இதில் நுண் ஒலிவாங்கி (மைக்ரோபோன்), ஒலிபெருக்கி, ஒலியை உள்ளே அனுப்பும் அமைப்பு, மின்கலன் ஆகியவை உள்ளன. நுண் ஒலிவாங்கி ஒலியைக் கிரகிக்கிறது. ஒலிபெருக்கி ஒலியின் அதிர்வுகளை அதிகப்படுத்தி, டிஜிட்டல் சமிக்ஞைகளாக மாற்றுகிறது. இந்த சமிக்ஞைகளை இதில் உள்ள ஓர் அலைபரப்புக் கருவியானது (Transmitter) காதின் உட்கருவிக்கு அனுப்பிவைக்கிறது.

உட்கருவியில் ஒலிவாங்கி, ஸ்டுமுலேட்டர் (Stimulater), காந்தம் ஆகியவை அடங்கியுள்ளன. இதை அறுவை சிகிச்சையினால் காதின் பின்புறம் தோலுக்கு அடியில் பொருத்தி, தையல் போடப்பட்டுவிடுகிறது. கம்பிபோல் இருக்கும் ஸ்டுமுலேட்டரை உட்காதில் உள்ள நத்தை எலும்பில் (Cochlea) பொருத்தப்படுகிறது. அலைபரப்பி மூலம் வரும் ஒலிகளை, ஒலிவாங்கி கவர்ந்து ஸ்டுமுலேட்டருக்கு அனுப்பிவைக்கிறது. பிறகு, ஸ்டுமுலேட்டரானது டிஜிட்டல் சமிக்ஞைகளை மின்சமிக்ஞைகளாக மாற்றி, செவி நரம்பு வழியாக மூளைக்கு அனுப்புகிறது. அங்கே ஒலிகள் பகுக்கப்பட்டு கேட்கும் திறன் செயலுக்கு வருகிறது.

கருவி பொருத்தியபிறகான செயல்பாடுகள்[தொகு]

பிறந்த ஆறு மாதங்களுக்குள் குழந்தைக்குக் காது கேளாமை உள்ளதைக் கண்டுபிடித்து, ஐந்து வயதுக்குள் இக்கருவியைப் பொருத்திவிட்டால். குழந்தைக்குக் கேட்கும் திறனையும் பேச்சுத் திறனையும் உண்டாக்க இயலும். அறுவை சிகிச்சைக்குப் பின் குறைந்தது வாரத்தில் ஐந்து நாட்களுக்கு கேட்பியல் மருத்துவர் (Audiologist) மற்றும் பேச்சுப் பயிற்சியாளர் (Speech Therapist) மூலம் குழந்தைக்குப் பயிற்சி கொடுப்பது அவசியம். வீட்டிலும் இந்தப் பயிற்சி தொடர வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையிலேயே இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். அதன்பின்னரும் மூன்றாண்டு காலத்துக்கு குழந்தைக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டியது அவசியம் இதை தனியார் பயிற்சி மையங்களில் இப்பயிற்சிகளை பெறவேண்டி இருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கு. கணேசன் (2 அக்டோபர் 2017). "காது உட்பதியக் கருவி: நல்ல திட்டம் வீணாகலாமா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்செவிச்சுருள்_பதியம்&oldid=3576686" இலிருந்து மீள்விக்கப்பட்டது