ஆசிரியர் தகுதித் தேர்வு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test) என்பது இந்தியாவில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி 1 முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் அந்தச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதற்கும் செல்லுபடியாகும்.[1]

வரலாறு[தொகு]

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) 2011 இல் இந்திய அரசால் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. [2] ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. [3] தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னாதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டது.

தமிழ்நாடு[தொகு]

தேசிய ஆசிரியர் கல்விக் குழும வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இந்தத் தேர்வுக்கான அரசாணையை வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு "ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு” களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள்[தொகு]

  1. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம், பட்டப்படிப்புடன் இளங்கலை கல்வியியல் முடித்தவராக இருத்தல் வேண்டும் என அரிவிக்கப்பட்டது. பின்னர், இளங்கலைப் பொறியியலுடன் இளங்கலை கல்வியியல் முடித்தவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
  2. தேசிய ஆசிரியர் கல்விக் குழும அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள்.

தேர்வுத் தாள்கள்[தொகு]

இத்தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. தேர்வு வினாக்கள் அனைத்தும் ஒரு மதிப்பெண் (சரியான விடையைத் தேர்வு செய்க) வினாக்களாக இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் மொத்த மதிப்பெண்கள் 150. ஒவ்வொரு தேர்வுக்குமான காலம் 180 நிமிடங்கள். இத்தேர்வில் பொதுப்பிரிவினர் 60% மதிப்பெண்களும், இடஒதுக்கீட்டுப்பிரிவினர் 55% மதிப்பெண்களும் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர்.[4]

முதல் தாள்[தொகு]

முதல் தாளுக்கான வினாத்தாள் அமைப்பு கீழ்காணும் தலைப்பில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்குரியதாக இருக்கும்

  1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை - 30 மதிப்பெண்
  2. மொழித்தாள் -1 (கற்பிக்கும் மொழி)- 30 மதிப்பெண்
  3. மொழித்தாள் -2 (விருப்ப மொழி)- 30 மதிப்பெண்
  4. கணிதம் - 30 மதிப்பெண்
  5. சுற்றுச்சூழலியல் - 30 மதிப்பெண்

இரண்டாம் தாள்[தொகு]

  1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை (கட்டாயம்) - 30 மதிப்பெண்
  2. மொழித்தாள் - 1 (கட்டாயம்) - 30 மதிப்பெண்
  3. மொழித்தாள் - 2 (கட்டாயம்) - 30 மதிப்பெண்
  4. கணிதம் மற்றும் அறிவியல் (இளம் அறிவியல் பாடப் பிரிவினர்களுக்கு) - 60 மதிப்பெண்
  5. சமூக அறிவியல்- (இளங்கலை பாடப் பிரிவினர்களுக்கு மட்டும்) - 60 மதிப்பெண்

பிற தகவல்கள்[தொகு]

  • தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முதல் தாளையும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (கல்வியியல் பட்டம் பெற்றவர்கள்) இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஆசிரியர் பட்டயப் பயிற்சி மற்றும் இளங்கலை , இளம் அறிவியல் ஆகியவற்றுடன் இளங்கலை கல்வியியல் முடித்தவர்கள் இரண்டு தாள்களையும் எழுதலாம்.
  • ஆண்டுக்கு ஒருமுறையாவது இத்தகுதித் தேர்வு நடத்தப்படும். ( 2013 ம் ஆண்டுக்குப்பிறகு 2014ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. 2015, 2016 ஆம் ஆண்டுகளில் வழக்குகள் காரணமாக தமிழகத்தில் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. )
  • தேர்வில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 90 மதிப்பெண்களும், இடஒதுக்கீட்டுப்பிரிவினர் 82 மதிப்பெண்களும் பெறவேண்டும்.
  • இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், அது வாழ்நாள் வரை செல்லத்தக்கதாகும்.
  • இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் புகைப்படம், பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

இராசத்தான்[தொகு]

இராசதான் இடைநிலைக் கல்வி வாரியம் ராசத்தான் மாநிலத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான ராசத்தான் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வுகள், நிலை 1 மற்றும் நிலை 2 என இரண்டு நிலைகளில் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் 150 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதற்கான கால அளவு 2 மணி நேரம் 30 நிமிடங்கள். நிலை 1 தேர்வு தாள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிலை 2 தேர்வுத் தாள் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது, அதில் 1-3 பகுதிகள் கட்டாயமாகும்.

சான்று[தொகு]

  1. "Teachers Eligibility Test TET validity extended from 7 years to lifetime: Ramesh Pokhriyal". India Today (in ஆங்கிலம்). June 3, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
  2. "86% flunk teacher eligibility test". https://timesofindia.indiatimes.com/city/nagpur/86-flunk-teacher-eligibility-test/articleshow/9414586.cms. 
  3. "Centre relaxes teacher norms". www.telegraphindia.com. Archived from the original on 2012-07-21.
  4. "ஆசிரியர் தகுதித் தேர்வு: 60 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி". தினமணி (சென்னை). 2011-11-24. http://dinamani.com/tamilnadu/article678999.ece. பார்த்த நாள்: அக்டோபர் 15, 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]