செங்கோட்டை (நகரம்)

ஆள்கூறுகள்: 8°58′N 77°16′E / 8.97°N 77.27°E / 8.97; 77.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கோட்டை நகராட்சி
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
செங்கோட்டை நகராட்சி
இருப்பிடம்: செங்கோட்டை நகராட்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°16′E / 8.97°N 77.27°E / 8.97; 77.27
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் செங்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப
நகர்மன்ற தலைவர்
சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

சி. கிருஷ்ணமுரளி (அதிமுக)

மக்கள் தொகை 26,823 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


181 மீட்டர்கள் (594 அடி)

குறியீடுகள்

செங்கோட்டை (Sengottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது.

செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கைச் சூழலில் இருக்கும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் நாடார், சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் தென்காசி ஒரு காலத்தில் இருந்தது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

24 வார்டுகள் கொண்ட செங்கோட்டை நகராட்சியின் 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 26,823 ஆகும். அதில் ஆண்கள் 13,183, பெண்கள் 13,640 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1035 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 86.62 % ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 76.98%, இசுலாமியர் 21.19%, கிறித்தவர் 1.77% மற்றும் பிறர் 0.06% ஆக உள்ளனர்.[3]

மாநில எல்லை பிரச்சினை[தொகு]

இந்தியா 1947 ஆம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது திருவிதாங்கூர் சமஸ்தானம்( இன்றைய கேரளா) இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ஆம் நாள் இணைத்தார். 1949 ஆம் ஆண்டு அன்றைய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துடன் செங்கோட்டை முதல் கம்பிளி வரையிலான தமிழகப் பகுதிகள் இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரின் தாலுக்காவான செங்கோட்டை மக்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களை மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த செங்கோட்டை தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி கன்னியாகுமரியில் மார்சல் ஏ.நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழக மக்கள் பல உயிர் தியாகங்கள், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகா (அகரை,கம்பிளி பகுதிகள்) தமிழகத்துடன் இணைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதி கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது.

பின்னணி[தொகு]

முதல் காரணம்: மத்திய அரசின் தமிழக பகுதிக்கான நீர்பாசன திட்டங்களை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு தடுத்தது. இரண்டாம் காரணம்: திருவிதாங்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் சாதிக் கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது. மூன்றாம் காரணம்: தமிழகத்து நாடார் சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 இல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் முதலமைச்சராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். மங்காட்டில் தேவசகாயம், கீழ்குளத்தில் செல்லையன் இருவரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையின் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ஆம் ஆண்டு ஆகத்து 11 ஆம் நாள் திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின்படி தமிழக மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் 11 பேர் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் மரணம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள், நாடார் சமுதாய மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Shenkottai Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோட்டை_(நகரம்)&oldid=3446162" இலிருந்து மீள்விக்கப்பட்டது