இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளச்சல் போரின்பின் டி லனோய் சரணடைவதைக் காட்டும் படம்.

இயுஸ்ட்டாச்சியஸ் பெனடிக்ட்டஸ் டி லனோய் (Eustachius Benedictus de Lannoy, 1715ஜூன் 1, 1777) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர் (Flemish) ஆவார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள குளச்சலில் நிறுவுவதற்காக அக்கம்பனியின் கடற்படைத் தளபதியாக அனுப்பப்பட்டார். ஆனால், இம் முயற்சியின்போது 1741 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர்ப் படைகளுடன் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து போர்க்கைதி ஆனார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போர் குளச்சல் போர் என்று அழைக்கப்படுகிறது. டி லனோய் சிறைக் கைதியாக இருந்த போது அரண்மனைப் பணியில் இருந்த நீலகண்ட பிள்ளை என்பவரின் நண்பரானார். பின்னர் நீலகண்ட பிள்ளை கத்தோலிக்கராக மதம் மாறினார். இந்த நீலகண்ட பிள்ளையே கோட்டாறு மறைமாவட்டத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆவார்.

டி லனோயின் திறமைகளை அறிந்த மார்த்தாண்ட வர்மா மன்னர் அவரைத் திருவிதாங்கூர்ப் படைகளின் தளபதியாக நியமித்தார். திருவிதாங்கூர்ப் படைகளின் தளபதியாக இவர் ஆற்றிய பணிகள், மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் பிற்காலப் போர் வெற்றிகளுக்குப் பெரிதும் துணை புரிந்ததாகக் கருதப்படுகிறது. டி லனோயின் மறைவிற்குப் பிறகு அவரது உடல் நாகேர்கோவிலுக்கு அருகிலுள்ள உதயகிரிக் கோட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.