சேது நாணயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேது நாணயமொன்றின் ஒரு பக்கம்

சேது நாணயம் என்பது 13 தொடக்கம் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தினரால் வெளியிடப்பட்ட நாணயம் ஆகும். இதன் ஒரு பக்கத்தில் நின்றநிலையிலான ஒரு மனித உருவமும், அதன் இரு பக்கங்களிலும் விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. மறு பக்கத்தில் யாழ்ப்பாண அரசின் சின்னமான நந்தியும், "செது" என்ற சொல்லும், மேலே பிறையும் பொறிக்கப்பட்டுள்ளன. சேது நாணயங்கள் இலங்கையின் வட பகுதியிலும், தென்னிந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வுகளும், கருத்து வேறுபாடுகளும்[தொகு]

முன்னர் இந்த நாணயங்களை யார் வெளியிட்டார்கள் என்று தெரியாமல் இருந்தபோது பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இவை சோழமன்னரால் வெளியிடப்பட்டவை என்று சிலரும், சிங்கள மன்னன் பராக்கிரமபாகுவால் வெளியிடப்படவை என்று சிலரும், இராமநாதபுரத்துச் சேதுபதிகளால் வெளியிடப்பட்டவை என வேறு சிலரும் கருதினர். 1920ல் ஞானப்பிரகாசர் இது யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்டவை என்பதைச் சான்றுகளுடன் விளக்கினார்.[1][2] 1924 ஆம் ஆண்டில் இலங்கையின் நாணயங்களைப் பற்றி நூல் எழுதிய கொட்ரிங்டன் என்பாரும்,[3] 1978ல் கீழைத்தேச நாணயங்களைப் பற்றி நூல் எழுதிய மிச்சினர் என்பரும் இந்த நாணயங்கள் யாழ்ப்பாண அரசர்களால் வெளியிடப்பட்டவை என்னும் கருத்தையே கொண்டிருந்தனர்.

1970களின் பிற்பகுதியில் சி. பத்மநாதன் இந்த நாணயங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். இவர் தனக்குக் கிடைத்த நாணயங்களை, அவற்றின் தோற்றம், சின்னங்கள், கலைநயம் போன்றவற்றின் அடிப்படையில் ஆறு வகைகளாகப் பிரித்தார். இவருக்குப் பின்னர், ப. புஷ்பரட்ணம் அவரது கள ஆய்வில் கிடைத்த நூற்றுக்கு மேற்பட்ட நாணயங்களை ஆராய்ந்து அவற்றைப் பத்து வகைகளாகப் பிரித்தார்.[4]

இதுவரை கிடைத்த நாணயங்களில் இருந்து இவை இரண்டு தொடர்களாக வெளியிடப்பட்டமை தெரியவந்துள்ளது. முதல் தொகுதி, 13 ஆம் நூற்றாண்டு முதல் 1450 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சப்புமால் குமாரயா கைப்பற்றும் வரையான காலப் பகுதியில் வெளியிடப்பட்டவை. அடுத்தது 1467ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் ஆரியச் சக்கரவர்த்திகள் கைப்பற்றிய பின்னர் வெளியிடப்பட்டவை.

குறிப்புகள்[தொகு]

  1. Gnanaprakasar, S., The Forgotten Coinage of the Kings of Jaffna, Ceylon Antiquary, Vol 5, Part IV, 1919-1920. pp. 172-179
  2. புஷ்பரட்ணம், ப., தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, பவானி பதிப்பகம், 2003. பக். 218, 219.
  3. Corrington, H. W., Celon Coins and Currency, Memoirs of Colombo Museum, Series A No. 3, Colombo, 1924. pp. 74-77.
  4. புஷ்பரட்ணம், ப., தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, பவானி பதிப்பகம், 2003. பக். 219.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேது_நாணயம்&oldid=2167907" இலிருந்து மீள்விக்கப்பட்டது