குற்றப்புனைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷெர்லாக் ஹோம்ஸ் -குற்றப்புனைவுப் பாணியின் மிகப்பிரபலமான எடுத்துக்காட்டு

குற்றப்புனைவு (Crime fiction) இலக்கியப் பாணிகளில் ஒன்று. குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கதைக் களமாகக் கொண்டு படைக்கப்படும் புனைவுகள் குற்றப்புனைவு என்று வழங்கப்படுகின்றன. அறிபுனை, வரலாற்றுப் புனைவு போன்ற பிற பாணிகளிலிருந்து இது பொதுவாக வேறுபட்டாலும், பல குற்றப்புனைவுப் படைப்புகள் பிற பாணிகளின் கூறுகளையும் கொண்டுள்ளன. குற்றப்புனைவில் பல உட்பிரிவுகள் உள்ளன. துப்பறிவுப் புனைவு, யார் செய்தது?, சட்டப் பரபரப்புப் புனைவு, நீதிமன்ற நாடகப்புனைவு, பூட்டிய அறை மர்மப்புனைவு போன்றவை இவற்றுள் சில.[1]

ஆயிரத்தொரு இரவுகளில் வரும் மூன்று ஆப்பிள்கள் கதை குற்றப்புனைவுக்கான மிகப்பழைய எடுத்துக்காட்டுகளுள் ஒன்று. ஆனால் குற்றப்புனைவு தனித்துவம் பெற்றது 19ம் நூற்றாண்டில் தான். 1829ல் வெளியான ஸ்டீன் ஸ்டீன்சன் பில்ச்சர் என்ற தானிய எழுத்தாளரின் தி ரெக்டர் ஆஃப் வெயில்பை என்ற புத்தகமே நவீன இலக்கியத்தின் முதல் குற்றப்புனைவு படைப்பாகக் கருதப்படுகிறது. எட்கர் ஆலன் போ, வில்கி காலின்ஸ், எமீல் கபோரியூ போன்றவர்கள் நவீன குற்றப்புனைவின் முன்னொடிகளாகக் கருதப்படுகிறார்கள். 19ம் நூற்றாண்டின் இறுதியில் வெளியான ஆர்தர் கானன் டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளால் குற்றப்புனைவு இலக்கியம் பொதுமக்களின் ஆதரவைப்பெற்றது. 20ம் நூற்றாண்டில் காகிதக்கூழ் இதழ்களின் பெருக்கத்தால் குற்றப்புனைவுப் படைப்புகள் உலகெங்கும் படிக்கப்படலாயின. அகதா கிரிஸ்டி, பி. டி. ஜேம்ஸ், ரூத் ரெண்டல், ரேமாண்ட் சேண்ட்லர், டேஷியல் ஹாம்மெட், இயன் ஃபிளமிங், டிக் ஃபிரான்சிஸ் ஆகியோர் குற்றப்புனைவுப் பாணியின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள்.

சான்றுகள்[தொகு]

  1. Franks, Rachel (2011). "May I Suggest Murder?: An Overview of Crime Fiction for Readers' Advisory Services Staff". Australian Library Journal 60 (2). http://search.informit.com.au/documentSummary;dn=990082541924074;res=IELAPA. பார்த்த நாள்: 18 January 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றப்புனைவு&oldid=2980745" இலிருந்து மீள்விக்கப்பட்டது