கிண்டி பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிண்டி பொறியியல் கல்லூரி
குறிக்கோள் வாசகம் உழைப்பே எப்போதும் வெல்லும்
தொடக்கம் 1794
பள்ளி வகை பொதுத்துறை பல்கலைக்கழகம்
அமைவிடம் சென்னை, தமிழ் நாடு, இந்தியா
வளாகம் 100 ஏக்கர்கள் (400,000 m²)
இணைய முகவரி http://www.annauniv.edu/

கிண்டி பொறியியல் கல்லூரி (College of Engineering, Guindy) சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முதன்மை வளாகப் பரப்பில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1794-ஆம் ஆண்டு மே மாதம் "அளவைப் பள்ளி" (School of Survey) என்று ஒரு சிறு பள்ளிக்கூடமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 1859 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்புக் கல்லூரியாக்கப்பட்டது.[1] இக்கல்லூரி, 1894 இல் இயந்திரவியல் பொறியியலையும், 1930 இல் மின்னணுப் பொறியியலையும், 1945 ஆம் ஆண்டு தகவல் தொடர்பியல், நெடுஞ்சாலைப் பொறியியலையும், 1983 இல் அச்சுத் தொழில்நுட்பத்தையும், 1992 இல் புவித் தகவலியல் துறையையும் தொடங்கியது.

இதுவே இந்தியாவின் பழமையான நுட்பவியல் கல்லூரி. நாட்டிலே முதல் முறையாக, பல பொறியியல் பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. தென்னிந்தியாவில் முதன் முறையாக கணினி மையத்தை 1963 இல் நிறுவிய கல்வி நிறுவனமும் இதுவே.

இக்கல்லூரி, 2008 ஆம் ஆண்டு இந்திய டுடே பத்திரிக்கையின் இந்திய பொறியியல் கல்லூரிகள் தர வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்தது. மேலும் அவுட்லுக் இந்தியா பத்திரிக்கையின் 2007 ஆம் ஆண்டிற்கான 50 கல்லூரிகள் பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்தது. இக்கல்லூரி பல பன்னாட்டு நிறுவனங்களுடனும் அரசுகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. தனியாக அஞ்சல் தலை கொண்ட கல்லூரியும் இதுவேயாகும். நடுவண் அரசு, இக்கல்லூரியின் இருநூறாவது ஆண்டை முன்னிட்டு, நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

வரலாறு[தொகு]

வளாகத்தில் முதன்மைக் கட்டிடம்
கிண்டி பொறியியல் கல்லூரியின் இரவுக்காட்சி

இக்கல்லூரி 1794 இல் புனித சார்ச்சு கோட்டைக்கு அருகில் ஒரே ஒரு மாணவனைக் கொண்டு "அளவைப் பள்ளி" என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கீழ்க்காணும் காலக் கோடு இக்கல்லூரியின் பல்வேறு முதன்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டது.

1794 ஆம் ஆண்டிலிருந்து கிண்டி பொறியியல் கல்லூரியின் காலக் கோடு
1794 நிறுவப்பட்டது
1858 அளவைப் பள்ளி என்பது கட்டடவியல் பொறியியல் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது.
1859 லெப்டினன்ட். ஜி. வின்சுகோமை முதல்வராகக் கொண்டு 'பள்ளி' எனும் பெயர் கட்டடப் பொறியியல் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டது.
1862 கட்டடப் பொறியியல் கல்லூரியானது பொறியியல் கல்லூரியாக உயர்த்தப்பட்டது.
1864 முதல் தொகுதி இளநிலை கட்டடப் பொறியியல் மாணவர்களின் பட்டமளிப்பு விழா.
1894 இயந்திரவியல் பொறியியல் படிப்பைத் தொடங்கிய இந்தியாவின் முதல் கல்வி நிறுவனம் என்ற தகுதியைப் பெற்றது.
1920 கல்லூரி தற்போது உள்ள கிண்டிக்கு மாற்றப்பட்டது.
1932 மின்னணுப் பொறியியலைத் தொடங்கிய இந்தியாவின் முதல் கல்லூரி என்ற சிறப்பையும் பெற்றது.
1935 பொறியியலில் ஆய்வுப் பட்டம் அறிமுகம்.
1945 தொலைத் தொடர்புப் பொறியியலையும் நெடுஞ்சாலைப் பொறியியலையும் தொடங்கிய இந்தியாவின் முதல் கல்லூரியானது.
1957 "கட்டட நுண் கலையியலும் திட்டமிடலும்" (Architecture and Planning) என்ற படிப்பை இந்தியாவில் முதலில் தொடங்கிய கல்வி நிறுவனம்.
1963 ஐ.பி.எம். 1620 வகைக் கணினிகளைக் கொண்ட முதல் கணினி நடுவம் நிறுவப்பட்டது.
1970 பயன்பாட்டு மின்னணுவியலில் முதுகலைப் படிப்பு தொடங்கப்பட்டது.
1971 வானூர்தி வடிவமைப்பு இயந்திரவியலில் முதுநிலைப் படிப்பு தொடங்கப்பட்டது.
1978 அண்ணா பல்கலைக் கழகம் என்ற பெயரில் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
1978 கணினி அறிவியல் துறை தொடங்கப்பட்டது.
1981 மருத்துவ இயற்பியல் என்ற முதுநிலை படிப்பைத் தொடங்கிய ஆசியாவின் முதல் கல்வி நிறுவனம் என்ற சிறப்பைப் பெற்றது.
1982 தொலையுணர்வு நிறுவனத்தைத் (Institute of Remote Sensing) தொடங்கியது.
1983 இளநிலை பொறியியலில் அச்சுத் தொழில்நுட்பத்தைத் தொடங்கிய இந்தியாவின் முதல் நிறுவனமானது.
1992 இளநிலை பொறியியலில் புவித் தகவலியலைத்( Geo-Informatics ) தொடங்கிய இந்தியாவின் முதல் நிறுவனமானது.
2001 மின்னணு ஊடகத் துறையில் முதுநிலைப் படிப்பை இந்தியாவில் முதலாவதாகத் தொடங்கிய கல்லூரி.
2005 இந்தியாவின் முதல் சமுதாய வானொலியான அண்ணா பண்பலை 90.4 மெகா ஹெர்ட்சு தொடங்கப்பட்டது.
2006 இளநிலை பொறியியலில் 'வேளாண் பாசனப் பொறியியலையும்' , 'பொருள் அறிவியல் பொறியியலையும்' தொடங்கிய ஆசியாவின் முதல் கல்வி நிறுவனம் என்ற சிறப்பைப் பெற்றது.
2008 உயிரி மருத்துவப் பொறியியல் என்ற படிப்பு தொடங்கப்பட்டது.
2009 இந்தியாவின் முதல் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் அனுசாட் உருவாக்கப்பட்டு ரியாசாட்-2 உடன் சேர்த்து இசுரோவின் பி.எஸ்.எல்.வி.-யால் விண்ணில் செலுத்தப்பட்டது.

துறைகள்[தொகு]

பல பொறியியல் துறைகளில் இளநிலை, முதுகலைப்பட்ட மற்றும் ஆராய்ச்சி/ஆய்வு படிப்புகளை கிண்டி பொறியியல் கல்லூரி வழங்குகிறது. இந்தியாவில், கட்டிடப் பொறியியல் துறை பட்டப் படிப்பு, முதன் முதலில் மே 17, 1794 இல் இந்த கல்லூரியில் தான் தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ம.சுசித்ரா (10 சூலை 2018). "கிண்டி பொறியியல் கல்லூரி 225: பொறியியல் கல்வியில் ஒரு கோபுரம்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2018.