செயந்திர சரசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயேந்திர சரசுவதி சுவாமிகள்
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
பிறப்பு(1935-07-18)18 சூலை 1935
இருள்நீக்கி, திருவாரூர், தமிழ்நாடு
இறப்பு28 பெப்ரவரி 2018(2018-02-28) (அகவை 82)
காஞ்சிபுரம், தமிழ்நாடு
இயற்பெயர்எம். சுப்பிரமணிய ஐயர்
தேசியம்இந்தியர்
தலைப்புகள்/விருதுகள்சங்கராச்சாரியார்

செயந்திர சரசுவதி அல்லது ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் (சூலை 18, 1935 - பெப்ரவரி 28, 2018)[1] 69 வது சங்காரச்சார்யர் (குரு) இந்து சமயத்தின் ஒரு பிரிவான சுமார்த்த பிரிவினுருக்கான காஞ்சி காமகோடியின் பீடாதிபதி ஆவார்.

வரலாறு[தொகு]

திருவாரூர் மாவட்டம், இருள்நீக்கி என்ற கிராமத்தில் 18 சூலை 1935 அன்று, சுப்ரமணியம் மகாதேவன் என்ற இயற்பெயரைக் கொண்டு பிறந்தார். இவரது தந்தை இந்திய தொடருந்து துறையில் பணியாற்றியவர். ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற சுப்பிரமணியன், 22 மார்ச் 1954 அன்று தனது 19 வது வயதில், ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் 40 ஆண்டுகள் கடந்து, சந்திரசேகர சரசுவதியின் மறைவிற்குப் பின் 1994ம் ஆண்டில், காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.

1987இல் சன்னியாசிகளுக்கான சாதுர்மாசிய விரதத்தை பாதியில் விட்டு தலைமறைவானார். அப்போது அவருக்கு பதிலாக புதிய இளைய சங்கராச்சாரியாராக விசயேந்திர சரசுவதி நியமிக்கப்பட்டார். தேடுதலில் தலைக்காவிரியில் துறவி ஆடைகளை துறந்து தலைமறைவாக இருந்தவரை மீணடும் காஞ்சிக்கு கொண்டுவந்தனர். இதனால் ஒரே நேரத்தில் விதிகளுக்கு மாறாக மூன்று சங்கராச்சாரியார்கள் மடத்தில் இருந்தனர்.

காஞ்சிபுரம் சங்கர்ராமன் கொலை வழக்கில், 11 நவம்பர் 2004 அன்று ஜெயந்திர சரசுவதி கைதுசெய்யப்பட்டார். 10 சனவரி 2005 அன்று உச்ச நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது. புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கில், அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்படாததால், 27 நவம்பர் 2013 அன்று கொலை வழக்கிலிருந்து ஜெயந்திர சரசுவதி சங்கராச்சாரியார் விடுவிக்கப்பட்டார்.

28 பிப்ரவரி 2018 அன்று ஜெயேந்திர சரஸ்வதியின் மறைவையடுத்து[2][3] இளைய மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி காஞ்சி சங்கர மடத்தின் 70வது குருவாக செயல்படுவார்.

சிறப்பு[தொகு]

இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்குகிறார். இம்மடத்தில் பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறிப்பாக அமெரிக்கா நாட்டில் வாழ்பவர்கள் பலர் காஞ்சி மடத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர். இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன.

சர்ச்சைகள்[தொகு]

மடத்தைவிட்டு வெளியேறுதல்[தொகு]

1987 ஆகத்து 23 ஆம் நாள் நள்ளிரவில் காஞ்சி மடத்தைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஜெயேந்திரர் வெளியேறினார். சங்கராச்சாரியாராக இருப்பவர்கள் எப்போதும் தன் தண்டம் என்னும் புனித கழியை பிரியக் கூடாது என்பது மரபு. ஆனால் அதை மடத்திலேயே விட்டுவிட்டு அவர் வெளியேறினார். மேலும் சாதுர்மாசை பூஜை காலத்தில் பீடாதிபதிகள் வெளியேறக்கூடாது என்ற விரதத்தையும் மீறி அவர் வெளியேறினார். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து சங்கர மடத்தின் பீடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஜெயேந்திரர் தன் தண்டத்தையும், கமண்டலத்தையும் விட்டு வெளியேறியுள்ளார். எனவே அவர் மீண்டும் மடத்துக்கு வாரிசாக திரும்ப இயலாது என்று, புதிய இளைய பீடாதிபதியாக விசயேந்திர சரசுவதி சுவாமிகளை நியமித்தார். இதன் பிறகு ஜெயேந்திரர் கர்நாடக மாநிலம் குடகில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் செப்டம்பர் 8 ஆம் தேதி மடத்துக்குத் திரும்பி, மீண்டும் இளைய பீடாதிபதியாக செயல்பட்டார்.[4] அவர் காஞ்சி பீடாதிபதியுடன் சண்டையிட்டு மடத்தை விட்டு வெளியேறியதாகவும் பின்னர் சிலர் செய்த சமரசத்தால் மீண்டும் மடத்துக்குத் திரும்பியதாகவும் கருத்துகள் பரவின.

தடைச்சட்டம்[தொகு]

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரின் அபிப்பிராயப்படி சில சட்டங்களை இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அவ்வாறு பலிகொடுக்கும் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது.

பாலியல் குற்றச்சாட்டு[தொகு]

பிரபல தமிழ் எழுத்தாளரான அனுராதா ரமணன், ஊடகவியலாளர் சந்திப்பில் செயந்திர சரசுவதி தன்னிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டினார். சங்கரமடத்தின் சார்பில் ஒரு பக்தி பத்திரிகை துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் ஆபாசமாக பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.[5][6]

கொலைக் குற்றச்சாட்டு[தொகு]

நவம்பர் 11, 2004, அன்று காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜனவரி 10, 2005 அன்று உச்சநீதிமன்றத்தால் பிணை ஆணையின் மூலம் விடுவிக்கப்பட்டார். கீழ் நீதிமன்றம் இவரது பிணை விடுவிப்பு மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்ச நீதிமன்றம் இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக உயர்நீதிமன்றத்திலிருந்து புதுவை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வந்தது. நவம்பர் 27 2013, அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இவ்வழக்கிலிருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார்.[7][8]

ஊடகங்களின் பரபரப்பு[தொகு]

கைது செய்யப்பட்டபோது ஊடகங்கள் மக்களிடையே பரபரப்பை உண்டாக்கின. வழக்கின் தன்மை மாறியதாலும் , அடிக்கடி நீதி மன்றங்களை மாற்றியதாலும் ஊடகங்களின் ஈடுபாடு நாளடைவில் குறைந்தது[சான்று தேவை]. ஊடகங்களின் செயல்பாடுகளை ஆந்திர நீதிமன்றமும் கண்டித்துள்ளது[சான்று தேவை]என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி துவக்கம்[தொகு]

தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்பது செயந்திர சரசுவதியால் நெறிப்படுத்தப்படும் அரசியல் கட்சி எனக் குறிப்பிடப்படுகிறது. இது மார்ச் 2011 இல் தொடங்கப்பட்டது.[9]

இறப்பு[தொகு]

சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பெப்ரவரி 28, 2018 அன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அன்றைய தினமே காலமானார்.[10][11]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/41275-kanchi-shankaracharya-jayendra-saraswathi-died.html
  2. காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்!
  3. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்
  4. வருடமலர் 87. தினமலர். 1988 சனவரி 5. பக். 20. 
  5. "சர்ச்சைகளின் 'நாயகன்' ஜெயேந்திர சரஸ்வதி". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  6. Akhilan, Mayura (2018-02-28). "சர்ச்சைகளுடன் வாழ்ந்து மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  7. காஞ்சி கொலை வழக்கு,ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை. பிபிசி தமிழ். 27 நவம்பர் 2013. https://www.bbc.com/tamil/india/2013/11/131127_kanchicase. 
  8. சங்கரராமன் கொலை வழக்கு:ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை. தினமலர் நாளிதழ். 27 நவம்பர் 2013. https://m.dinamalar.com/detail.php?id=859451. 
  9. ஆன்மிக அரசியல் கட்சியை தொடங்கினார், ஜெயேந்திரன் - கீற்று இணையதளம்
  10. "காஞ்சி ஜெயேந்திரர் காலமானார்".
  11. "காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் - மருத்துவமனையில் உயிர் பிரிந்தது". Archived from the original on 2018-02-28. பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
Religious titles
முன்னர்
சந்திரசேகர சரசுவதி
காஞ்சி சங்காரச்சார்யர்
சனவரி 8, 1994 –
பதவியில் உள்ளார்
Heir:
விசயேந்திர சரசுவதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயந்திர_சரசுவதி&oldid=3584486" இலிருந்து மீள்விக்கப்பட்டது