கட்டிடக்கலை மானிடவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டிடக்கலை மானிடவியல் (Architectural Anthropology) என்பது கட்டிடக்கலையை மானிடவியல் நோக்கில் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். 1960 களுக்குப் பின்னர், கட்டிடக்கலைத்துறையில் நவீனத்துவப் பாணி (modern) தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து கட்டிடக்கலை அறிமுறை மற்றும் செயற்பாட்டுத் தளங்களில் மாற்றுச் சிந்தனைகளுக்கான தேவை இருந்தது. ஒரு புறம் ஐரோப்பியமையவாதச் சிந்தனைகளின் (Eurocenric) அடிப்படையின் தொடர்ச்சியாக நவீனத்துக்குப் பிந்திய (post-modern) கட்டிடக்கலைப் பாணி உருவானது. இன்னொரு புறம், இப்பாணியின் அடிப்படைகளை மறுதலித்த இன்னொரு பிரிவினர், கட்டிடக்கலையானது மேலும் பரந்த அடிப்படையில் ஆய்வு செய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். ஐரோப்பிய மரபுவழி ஆய்வாளர்கள் கட்டிடக்கலையின் வளர்ச்சியை ஒரு கலை வரலாறாகவே நோக்கி, அவற்றின் சிறப்புக்களைத் தனிப்பட்ட கட்டிடக் கலைஞர்களின் திறமைகளுக்குச் சமர்ப்பணம் செய்வதிலேயே ஈடுபட்டிருந்ததை எதிர்த்த அவர்கள் கட்டிடக்கலையை ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே பார்த்தனர். சிலர் கட்டிடக்கலையை மானிடவியல் நோக்கில் ஆராய்வது தொடர்பான கொள்கையை முன்வைத்ததுடன், கட்டிடக்கலை அறிமுறையானது இதன் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும் எனவும் வாதித்தனர்.

புதிய சிந்தனைக்கான மூலங்கள்[தொகு]

ஐரோப்பியமையவாதக் கருத்துக்களில் இருந்து விலகிய புதிய சிந்தனைகளுக்குப் புறம்பான புதிய கருத்துக்கள் உருவாவதற்கான சில ஆய்வுகள் தொடர்பான வெளியீடுகள் இக்காலப்பகுதியில் வெளியிடப்பட்டன. இவற்றுள், அமொஸ் ராப்பப்போர்ட் (Amos Rappoport) என்பவர் எழுதிய வீடு, வடிவம், பண்பாடு (House, Form and Culture) என்ற நூல் பிரபலமானது. இந் நூலில் வீடுகளின், சிறப்பாக நாட்டுப்புற வீடுகளின் வடிவங்கள், பண்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகின்றன என, உலகம் முழுவதும் பரந்துள்ள பல சமுதாயங்களின் வீடுகளை ஆராய்ந்து நிறுவ அவர் முயல்கிறார். போல் ஒலிவர் என்பவரின், ஆபிரிக்காவிலுள்ள உறையுள்கள் (Shelters in Africa) என்னும் நூலை உள்ளிட்ட பல வெளியீடுகளும், ஐரோப்பாவுக்கு வெளியிலுள்ள, இனக்குழுக்கள் பலவற்றின் உறைவிடங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஆய்வாளர்களுக்குத் தந்தது. இத்தகைய மரபு சார்ந்த கட்டிடச் சூழல்கள் பற்றி உலகளாவிய அளவில் ஆராய்ந்த நிறுவனங்களில் IASTE, UC பேர்க்லி என்பவை குறிப்பிடத் தக்கவையாகும்.

கட்டிடக்கலை மானிடவியல் என்னும் கருத்துருவுக்கு அறிமுறை அடிப்படையை வளங்கியதில் முக்கியமானது, ஒட்டோ எஃப். பொல்னோ (Otto F. Bollnow) என்னும் ஜெர்மானிய தத்துவவியலாளரின் வெளி (space) பற்றிய மானிடவியல் கொள்கைகளாகும். ஜெர்மன் மொழியில் அவர் எழுதிய மனிதனும் வெளியும் (1963) என்னும் நூலில், பண்டைக்கால மனிதருடைய வெளி பற்றிய கருத்துரு, அவர்களின் வீடு மற்றும் குடியேற்றங்களுடன் தொடர்பு பட்டிருந்ததை விளக்கிய அவர், தற்காலத்தின், எங்கும் பரந்த, ஒருதன்மைத்தான வெளி தொடர்பான கருத்துரு, 14 ஆம் நூற்றாண்டின் பின்னரே ஏற்பட்டது என எடுத்துக்காட்டினார்.

கட்டிடக்கலை மானிடவியலின் பகுதிகள்[தொகு]

கட்டிடக்கலை மானிடவியலின் ஆய்வுப் பரப்பு, மனிதப் படிமுறை வளர்ச்சியில் மனிதனையும் தாண்டி, படிமுறையில் மனிதனுக்குக் கீழுள்ள மனிதக் குரங்குகள் போன்ற விலங்குகளின் கூடு கட்டும் நடத்தைகளையும் தழுவியுள்ளதுடன், தற்கால நகர்ப்புறக் கட்டிடக்கலையையும் உள்ளடக்கியுள்ளது. கட்டிடக்கலை மானிடவியல் ஐந்து பிரிவுகளாக ஆராயப்படுவதாக, இத் துறையின் முன்னோடியான நோல்ட் எஜெண்ட்டர் என்பவர் கூறுகின்றார்.

  1. படிமுறையில் மனிதனுக்குக் கீழுள்ள விலங்குகளின் கட்டிடக்கலை (Sub-human Architecture)
  2. குறியீட்டுக் கட்டிடக்கலை (Semantic Architecture)
  3. உறையுட் கட்டிடக்கலை (Domestic Architecture)
  4. இருந்தியக்கக் கட்டிடக்கலை (Sedentary Architecture)
  5. நகர்ப்புற / ஆதிக்கவாதக் கட்டிடக்கலை (Urbam / Imperial Architecture)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிடக்கலை_மானிடவியல்&oldid=3764420" இலிருந்து மீள்விக்கப்பட்டது