ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை புனித
ஐந்தாம் பயஸ்
தொ.ச
225ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்7 சனவரி 1566
ஆட்சி முடிவு1 மே 1572 (6 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்கள்)
முன்னிருந்தவர்நான்காம் பயஸ்
பின்வந்தவர்பதிமூன்றாம் கிரகோரி
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு1528
ஆயர்நிலை திருப்பொழிவு14 செப்டம்பர், 1556
ஜியோவானி மைக்கேல் சரசெனி-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது15 மார்ச், 1557
பிற தகவல்கள்
இயற்பெயர்ஆன்டனியோ கிஸ்லியரி
பிறப்பு(1504-01-17)17 சனவரி 1504
போஸ்கோ, இத்தாலி
இறப்பு1 மே 1572(1572-05-01) (அகவை 68)
ரோம், இத்தாலி
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாஏப்ரல் 30
முத்திப்பேறு1 மே, 1672
திருத்தந்தை 10ம் கிளமென்ட்-ஆல்
புனிதர் பட்டம்24 மே, 1712
திருத்தந்தை 11ம் கிளமென்ட்-ஆல்
பாதுகாவல்வலெட்டா, மால்ட்டா
பயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் (17 சனவரி 1504 – 1 மே 1572), 1566 முதல் 1572 வரை கத்தோலிக்க திருச்சபையை ஆட்சி செய்த 225வது திருத்தந்தையும் கத்தோலிக்க புனிதரும் ஆவார்.[1] இவரது சீரியப் பணியால், திரெந்து பொதுச்சங்கத்தின் தீர்மானங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு கத்தோலிக்க விசுவாசத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவரது திருமுழுக்கு பெயர் ஆன்டனியோ கிஸ்லியரி ஆகும்; 1518 முதல் மைக்கேல் கிஸ்லியரி என்று அழைக்கப்பட்டார்.

தொடக்க காலம்[தொகு]

ஆன்டனியோ கிஸ்லியரி என்ற இயற்பெயர் கொண்ட 5ம் பயஸ், இத்தாலியின் மிலான் நகரில் போஸ்கோ என்ற இடத்தில் 1504 ஜனவரி 17ந்தேதி பிறந்தார். சிறு வயது முதலே கிறிஸ்தவ விசுவாசத்திலும் பக்தியிலும் வளர்ந்தார்.

14 வயதில் தொமினிக்கன் சபையில் நுழைந்தபோது, மைக்கேல் கிஸ்லியரி என்ற பெயரைப் பெற்றார். 1528ல் ஜெனோவா நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பின், பவியா நகருக்கு சென்று 16 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணி ஆற்றினார். 1550ல் ரோம் திரும்பிய இவர், திருத்தந்தையின் விநியோக அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1556 செப்டம்பர் 14ந்தேதி, மைக்கேல் கிஸ்லியரி ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். சிறிது காலத்திலேயே 1557 மார்ச் 15 அன்று, திருத்தந்தை நான்காம் பால் (1555-59) இவரை கர்தினால் நிலைக்கு உயர்த்தினார்.

திருத்தந்தையாக[தொகு]

திருத்தந்தை நான்காம் பயஸ் (1559-65) மறைந்ததும் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட கர்தினால் மைக்கேல் கிஸ்லியரி, ஐந்தாம் பயஸ் (இத்தாலியன்: Pio V) என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தனது 62வது வயதில், திருச்சபையின் 225வது திருத்தந்தையாக 1566 ஜனவரி 17ந்தேதி பொறுப்பேற்றார்.

திருத்தந்தையர் வெள்ளை அங்கி அணியும் வழக்கத்தை இவரே தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு திருத்தந்தையர் சிவப்பு அங்கியை அணிவதே வழக்கமாய் இருந்தது. அதிக நேரம் செபம் செய்வது இவர் வழக்கமாக இருந்தது. அரசியல் குறுக்கீடுகளால் கத்தோலிக்க திருச்சபையில் நுழைந்திருந்த தவறான வழக்கங்களை ஒழிக்க திருத்தந்தை ஐந்தாம் பயஸ் பெரிதும் விரும்பினார்.

செயல்பாடுகள்[தொகு]

திருத்தந்தை 5ம் பயஸ் திருச்சபையின் பதவிகளை உறவு முறைப்படி பெறுவதையும், ஆன்மீகக் காரியங்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தையும் ஒழிக்கப் பாடுபட்டார். திரெந்து நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற பொதுச்சங்கத்தின் தீர்மானங்களை செயல்படுத்தி திருச்சபையில் சீர்திருத்தம் ஏற்பட வழிவகுத்தார்.

திருச்சபையின் உண்மையான விசுவாசத்தை நிலை நிறுத்தவும், பிரிவினையாளர்களின் தவறான போதனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு ஒன்றைத் தயாரித்தார். திருப்பலியை முறைப்படுத்தும் வகையில் 1570ல் ரோமன் திருப்பலி புத்தகத்தை அறிமுகம் செய்து உலகெங்கும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் பொது திருப்பலி நூலாக்கினார்.

இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், இத்தாலி அரசன் 2ஆம் மேக்சிமிலியன் ஆகியோரின் எதிர்ப்புகளை சந்தித்தார். பிரான்ஸ், ஹாலந்து நாடுகளின் கொந்தளிப்பிற்கு இடையே துருக்கியரின் தாக்குதல்களையும் எதிர்கொண்டார்.

துருக்கிய வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கவும், கிறிஸ்தவ இளவரசர்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும் உழைத்தார். இதன் விளைவாகவும், கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட தொடர் செபமாலை பக்திமுயற்சியின் பலனாகவும், 1571 அக்டோபர் 7 அன்று லெப்பன்ட்டோ கடற்போரில் துருக்கியருக்கு எதிராக கிறிஸ்தவப் படைகள் வெற்றி பெற்றன. அதே நாளில் இவர் அன்னை மரியாவுக்கு, வெற்றியின் அன்னை விழாவை ஏற்படுத்தினார். இவ்விழா பின்னாளில் செபமாலை அன்னை விழாவாக பெயர்மாற்றப்பட்டு இன்றும் கொண்டாடப்படுகின்றது.

புனிதர் பட்டம்[தொகு]

புனித ஐந்தாம் பயசின் உடல்.

6 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்கள் திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தை ஐந்தாம் பயஸ், இறுதியாக 1572 மே 1ந்தேதி தனது 68வது வயதில் மரணம் அடைந்தார். 1696ல் இவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. 1698ஆம் ஆண்டு, இவரது அழியாத உடல் புனித மேரி மேஜர் ஆலயத்தில் அமைக்கப்பட்ட கல்லறைப் பேழையில் வைக்கப்பட்டு, இன்றளவும் பாதுகாப்பாக உள்ளது.

1672 மே 1 அன்று திருத்தந்தை 10ம் கிளமென்ட், திருத்தந்தை ஐந்தாம் பயசுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். 1712 மே 24ந்தேதி 11ம் கிளமென்ட் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 1713ல் இவரது திருவிழா மே 5ந்தேதி கொண்டாடப்படும் வகையில் ரோமன் நாட்காட்டியில் இணைக்கப்பட்டது. 1969ல் இவரது விழா ஏப்ரல் 30ந்தேதிக்கு மாற்றப்பட்டது.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. Durant, Will and Ariel Durant, Age of Reason Begins, Vol.7, (Simon & Schuster, 1961), 238-239.
  2. கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
நான்காம் பயஸ்
உரோமை ஆயர்
திருத்தந்தை

1566–1577
பின்னர்
பதிமூன்றாம் கிரகோரி