உருசிய-சுவீடியப் போர் (1741-1743)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருசிய-சுவீடியப் போர் (1741-1743) என்பது உருசியாவுக்கும், சுவீடனுக்கும் இடையே 1741 ஆம் ஆண்டுக்கும் 1743 ஆம் ஆண்டுக்கும் இடையே நடைபெற்ற போரைக் குறிக்கும். இது இறுதியில் உருசியா பின்லாந்தைக் கைப்பற்றியதுடன் முடிவடைந்தது. இது பெரும் வடக்குப் போர் என அறியப்படும் போரின்போது உருசியாவிடம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றும் நோக்கில் சுவீடனின் கட்ஸ் என்னும் அரசியல் கட்சியாலும், ஆசுத்திரிய ஆட்சி உரிமைக்கான வாரிசுப் போட்டியில், தலையிடாது இருப்பதற்காக உருசியாவின் கவனத்தைத் திசை திருப்புவதற்கான பிரான்சின் ராஜதந்திர முயற்சியின் விளைவாகவும் ஏற்பட்டது.[1][2][3]

சுமார் 8,000 படையினர், உருசியாவுடனான எல்லைக்கருகில் உள்ள லப்பீன்ரந்தா, அமினா ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஆகத்து 8 ஆம் தேதி சுவீடன் போர் அறிவிப்புச் செய்தது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் உருசியாவை மிரட்டி பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகளின் ராசதந்திரிகளின் உதவியுடன் நிகழ்த்த எண்ணியிருந்த சதிப் புரட்சி ஒன்றுக்கான சூழலை ஏற்படுத்துவதாகும். இச் சதியின் நோக்கம் ஆசுத்திரியாவுக்குச் சார்பான உருசியாவின் அன்னா லியோபோல்டோவ்னாவின் ஆட்சியைக் கவிழ்ப்பது ஆகும்.

எண்ணியபடி சதிப்புரட்சி இடம்பெற்று அன்னாவின் ஆட்சியும் அகற்றப்பட்டது எனினும் புதிய சாரினாவான எலிசவேத்தா பெட்ரோவ்னா, பால்ட்டிய மாகாணங்களைச் சுவீடனுக்குத் திருப்பித் தருவது என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசுத்திரியாவுக்குச் சார்பான அவரது ஆலோசகர்களின் வழிகாட்டுதலில் போரைத் தீவிரமாக முன்னெடுத்தார்.

செப்டெம்பர் மூன்றாம் தேதி, 20,000 பேரைக் கொண்ட படையுடன் சென்ற உருசியத் தளபதி பீட்டர் லாசி விபோக் என்னும் இடத்திலிருந்து லாப்பீன்ரந்தா வரை முன்னேறிச் சென்று சார்லசு எமில் லேவெனோப்ட்டின் தலைமையிலான சுவீடியப் படைகளைத் தோல்வியுறச் செய்தவுடன், உருசியத் தலைநகருக்கு இருந்த பயமுறுத்தல் தணிந்துவிட்டது. சூன் 1742 ஆம் ஆண்டில் 35,000 பேரைக் கொண்ட உருசியப் படை, அமினாவில் இருந்த 17,000 படையினரையும் துரத்திவிட்டது. போர் தீவிரமானபோது, லேவெனோப்ட்டின் நிலை மேலும் சிக்கலானபோது அவர் எல்சிங்கியை நோக்கிப் பின்வாங்கினார். ஆகத்து மாதத்தில் லாசியின் படைகள் போர்வூ, சாவொன்லின்னா ஆகிய இடங்களையும் கைப்பற்றிக் கொண்டு எல்சிங்கிக்கு அருகே முழு சுவீடியப் படைகளையும் சுற்றி வளைத்தன. இதனைத் தொடர்ந்து, செப்டெம்பர் 4 ஆம் தேதி லேவெனோப்ட் சரணடைந்தார்.

போர் முடிவுக்கு வந்ததும், உருசியப் படைகள் துர்க்கு நகருக்குள் புகுந்தன. சமாதானத் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக அலெக்சாந்தர் ருமியன்ட்சேவ், ஏர்ன்சிட் நோல்கென் ஆகியோர் இந் நகருக்கு வந்தனர். உருசியாவின் முடிக்குரிய வாரிசின் தந்தையின் சகோதரரான அடோல்ப் பிரடெரிக் என்பவரை சுவீடனின் முடிக்குரிய வாரிசாக்க இணங்கினால் பின்லாந்திலிருந்து உருசியப்படைகளை விலக்கிக்கொள்வதாக சாரினா உறுதியளித்தார். அடோல்ப் பிரடெரிக்கினூடாக சாரினாவிடமிருந்து கூடிய அளவு பெற்றுக்கொள்ளலாம் எனக்கருதிய எதிர்த் தரப்பினர் அதற்கு உடன்பட்டனர். அடோல்பின் தெரிவு அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக உருசியப் படைகள் சுவீடனில் இருக்கவேண்டும் என சாரினா விரும்பினார். ஆனால் எதிர்த்தரப்பிலிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு இருந்ததால் இம் முயற்சி கைவிடப்பட்டது.

இறுதியாகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, லப்பீன்ராந்தா, அமினா ஆகிய நகரங்களையும் உள்ளடக்கிய பின்லாந்தின் ஒரு பகுதி உருசியாவுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், வடக்கு ஐரோப்பாவில் சுவீடனின் வலிமையை மேலும் குறைத்துவிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Swedish-Russian War of 1741-1743World History at KMLA
  2. Jenni Merovuo, "‘Divided and validated’? The institutionalization of the Russo-Swedish border region in the 1743 peace treaty." Hungarian Geographical Bulletin 66.4 (2017): 283-293. online
  3. Malmström, Bernhard Elis. "329 (Samlade skrifter / 1. Grunddragen af svenska vitterhetens historia. Del 1. Stjernhjelm - frihetstiden. Akademiska föreläsningar)". runeberg.org (in ஸ்வீடிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-20.