இடங்கழி நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடங்கழி நாயனார்
பெயர்:இடங்கழி நாயனார்
குலம்:ஆய்வேளிர் [1]
பூசை நாள்:ஐப்பசி கார்த்திகை
அவதாரத் தலம்:கொடும்பாளூர்
முக்தித் தலம்:கொடும்பாளூர்

"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.

இடங்கழி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[2]. தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் ஆய்வேளிர் குடியில் தோன்றினார்; கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார்.அகத்தியர் தலைமையில் துவாரகையில் இருந்து தென்னகம் வந்த யாதவர்கள் வேளிர் என அழைக்கப்பட்டனர்.பிற்காலததில் ஆயர் என்ற ஒற்றை அடையாளத்தில் நிலை பெற்றனர்.[3][4].


புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார்.

இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்கள் சோழர்களுடனும் இணைந்து இருந்தனர என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது.ஆய்வேளிர் குலத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது.

மன்னர் இடங்கழி நாயனாரின் தலைநகரான கொடுமை இன்னும் கொடும்பாளூரை சிலப்பதிகாரம் மிகச்சிறப்பாக வர்ணிக்கிறது. இவ்வூர் குறிஞ்சி நிலமாகிய எயினர் வாழும் இவ்வூரில், பொன்னம்பலத்து முகட்டை கொங்குநாட்டு பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழர் மரபில் இருக்கு வேளிர் என்ற குறுநில மன்னர் குலத்திலே இப்பெரியார் பெரும் புகழுடன் ஆட்சி செய்தார். இவர் சிவபெருமானுக்கு திருவடி தொண்டு புரிவதே கடமையாக கொண்டிருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் சைவ நெறியும் வைதீக நெறியும் வளர்ந்தது. சிவன் கோவில்களில் சிவாகம விதிப்படி வழிபாடுகள் நடைபெற்றன.

இவ்வாறு சிறப்புற்ற ஆட்சியில் தவசீலர் ஒருவர் சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து வந்தார். இவரிடம் திருவமுது படிக்க பொருள் ஏதும் ஒரு நாள் கிடைக்கவில்லை. மனம் தளர்ந்த அந்த தவசீலர் எப்படியாவது நெல் பெற எண்ணி இடங்கழியாரின் அரண்மனைக்குள் நள்ளிரவில் திருடனைப்போல் புகுந்தார். நெல் களஞ்சியத்தை திறந்து நெல்லை எடுத்தார்.

இரவுக் காவலர்கள் இதை கண்டு அந்த தவ சிலரை பிடித்து மன்னரிடம் கொண்டு சென்றனர், மன்னர் இடங்கழியார் கோபம் கொள்ளாது, "ஏனய்யா நெல்லை திருடினீர்" என்று கேட்டார், இதற்கு இந்த தவசீலர் சிவனடியார்களுக்கு திருவமுது செய்வது எனது வழக்கம், என்று பொருள் இல்லாமையால் செய்ய முடியாமல் தடைப்பட்டது என்றும், அதனால்தான் இவ்வாறு செய்தேன் என்று சொன்னார்.

இதனைக்கேட்ட இடங்கழியார் மனமிரங்கி "இவரன்றோ எனக்கு பண்டாரமாவார்" என்று கூறி அவரை விடுதலை செய்தார். பிறகு அவரது நிலை அறிந்த உள்ளதோடு சிவனடியார்கள் எல்லோரும் நற் பண்டாரம் மட்டுமேயன்றி, குறைவில்லாத மற்றைய நிதிகளின் பண்டாரங்களாகிய எல்லாவற்றையும் கொள்கையாக முகர்ந்து கவர்ந்து கொள்க! என்று பறைசாற்றினார். அத்தனை பொருட்களையும் சிவனடியார்களுக்கு வழங்கினார். நாட்டு மக்களின் நலன் கருதி நல்லாட்சி புரிந்தார் இவரது காலத்தில் காவிரி நீரை திருப்ப கொங்கண் வாய்க்கால் என்ற வாய்க்கால் சிறிது தூரம் வெட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறப்புடன் ஆட்சி செய்து இடங்கழி நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார்.

சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்ச்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார். இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார். அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர். இடங்கழியார், அவரைப் பார்த்து, 'நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்' எனக் கேட்டார். அதுகேட்ட அடியவர், 'நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்' என்றார், அதுகேட்டு இரங்கிய மன்னர், 'எனக்கு இவரன்றோ பண்டாரம்' என்று சொல்லிப் பாராட்டிப் படைத்த நிதிப்பயன் கொள்வாராய்ச், 'சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க' என எங்கும் பறையறிவித்தார். அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம் திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டர் தொகை-கடல் சூழ்ந்த சருக்கம்-இடங்கழி நாயனார் புராணம்- பாடல் 3
  2. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (16 பிப்ரவரி 2011). இடங்கழி நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1784. 
  3. பெரியபுராணம் பாடல் 4109-4112
  4. மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39. 
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

இவற்றையும் காண்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இடங்கழி_நாயனார்&oldid=3825665" இலிருந்து மீள்விக்கப்பட்டது