ரூஸி கீ ஸான் ஷோடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூஸி கீ ஸான் ஷோடம்
இயக்கம்மார்ஸியா மெஷ்கினி
தயாரிப்புமோசன் மக்மால்பஃப்
கதைமோசன் மக்மால்பஃப்
மார்ஸியா மெஷ்கினி
வெளியீடுசெப்டம்பர் 1, 2000
ஓட்டம்78 நிமிடங்கள்
நாடுஈரான்
மொழிபாரசீக மொழி
ஆக்கச்செலவு$180,000 (தோராயமாக)
மொத்த வருவாய்$344,235

ரூஸி கீ ஸான் ஷோடம் (பாரசீக மொழி: روزی که زن شدم‎ (Roozi ke zan shodam), ஆங்கிலம்: The Day I Became a Woman) ஓர் ஈரானியத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மார்ஸியா மெஷ்கினி (Marzieh Meshkini) இயக்கியுள்ளார். இத்திரைப்படம் மூன்று கதைகளை உள்ளடக்கியது. ஒவ்வொன்றும் ஈரானில் பெண்களின் வாழ்க்கை நிலையைச் சித்தரிக்கிறது. இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

கதை[தொகு]

இத்திரைப்படும் மூன்று ஈரானியப் பெண்களைப் பற்றி மூன்று வெவ்வேறு கதைகளைச் சொல்கிறது.[1]

  • ஹவா பிறக்கும் போது காலையில் பிறக்க வேண்டியவள். ஆனால் அவளுடைய அம்மா அவளின் பிறப்பை நண்பகல் வரை ஒத்திவைத்திருந்தாள். ஹவாவின் ஒன்பதாவது பிறந்த நாளன்று அவளது அம்மாவும் ஆச்சியும் அவளிடம், இன்றிலிருந்து நீ ஓர் இளம் பெண். எனவே நண்பர்களுடன் விளையாடச் செல்லக்கூடாது, ஆண் நண்பர்களுடன் விளையாடக்கூடாது. மேலும் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது பர்தா அணிய வேண்டும் என்றனர். மைதானத்தில் நட்டுவைத்திருந்த குச்சியின் நிழல் மறையும் வரை ஹவா தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.[2]
  • அகூ திருமணமான பெண்மணி. மிதிவண்டிப் போட்டியில் பங்கு பெற்று பந்தயத்தில் இருக்கும் போது குதிரையில் வரும் அவளது கணவனால் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாள். ஆனால் அகூ கணவனின் சொல்லையும் மீறி பந்தயத்தைத் தொடருகிறாள். திரும்பிச் சென்று முல்லாக்களை அழைத்துவரும் கணவன் அவளிடம் தொடர்ந்து கலந்து கொண்டால் அவளை விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டுகிறான். அகூவோ எதையும் சட்டை செய்யாமல் தொடர்ந்து பந்தயத்தைத் தொடருகிறாள். திரும்பிச் சென்ற கணவன் மதப் பெரியவர்கள் பலரை அழைத்து வந்து பலவந்தமாக அவளைத் தடுத்து நிறுத்தி பந்தயத்தைத் தொடரவிடாமல் செய்கின்றனர்.[2]
  • ஹூரா ஒரு வயதான விதவைப் பெண்மணி ஆவார். அவருக்கு உரிமையான பெரும் பணம் கிடைக்கிறது. அதுநாள் வரை தனது வாழ்நாளில் வாங்க வேண்டும் என ஆசைப்பட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்குவது என முடிவு செய்கிறார். திருமண வாழ்வில் இருக்கும்போது அவளால் வாங்க இயலாத பொருட்கள் அவை. அதன்படி என்னென்ன வாங்க வேண்டும் எனத் தீர்மானித்து அவை மறந்து விடாமலிருக்க கைவிரல்களில் சிறு துணிக் கயிற்றால் அடையாளக் கட்டுப் போடுகிறார். உதவிக்காக நிறைய சிறுவர்களை அழைத்துக் கொள்கிறார். பொருட்களை வாங்கிய பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு சிறுவர்களுடன் கடற்கரைக்குச் செல்கிறார். அங்கு கடலில் மிதக்கும் கப்பலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை இரு பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவரில் ஒருவர் மிதிவண்டிப் போட்டியில் பங்குபெற்றுச் சென்று கொண்டிருப்பவர் மற்றொருவர் ஹவா. அவள் பர்தா அணிந்திருக்கிறாள்.[2]

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படத்தின் திரைக்கதையில் இயக்குனர் மார்ஸியா மெஷ்கினி மற்றும் அவரது கணவர் மோசன் மக்மால்பஃப் ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருந்தனர்.[3] இத்திரைப்படம் ஈரானின் தெற்கேயுள்ள ஹொர்மோஸ்கான் மாகாணத்தின் கிஷ் தீவுகளில் படமாக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Harrison, Eric (2004-05-19), "The Day I Became a Woman", Houston Chronicle, archived from the original on 2008-03-19, பார்க்கப்பட்ட நாள் 2008-03-08
  2. 2.0 2.1 2.2 "About the Film". Official site. Archived from the original on 2008-01-17. பார்க்கப்பட்ட நாள் 2008-03-08.
  3. Gleiberman, Owen (2001-04-20), "Women In Black", Entertainment Weekly, archived from the original on 2008-03-19, பார்க்கப்பட்ட நாள் 2008-03-08
  4. Young, Deborah (2000-09-18), "The Day I Became a Woman", Variety, பார்க்கப்பட்ட நாள் 2008-03-08
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூஸி_கீ_ஸான்_ஷோடம்&oldid=3569881" இலிருந்து மீள்விக்கப்பட்டது