பெனடிக்ட் கரைசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Trommer's test for glucose.

பெனடிக்ட் கரைசல் அல்லது பெனடிக்ட் வினைபொருள் (Benedict's reagent) என்பது அமெரிக்க வேதியலாளரான ஸ்டான்லி ரொசிட்டர் பெனடிக்ட் என்பவரைப் பெருமைப்படுத்துவதற்காகப் பெயரிடப்பட்ட ஒரு வேதி வினைபொருள் ஆகும்.[1]

இது ஒரு போசணைக் கரைசலிலுள்ள தாழ்த்தும் வெல்லங்களைச் சோதிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இக்கரைசலால் அனைத்து ஒருசக்கரைட்டுகளையும் பல இருசக்கரைட்டுகளையும் கண்டறிய முடியும். பெனடிக்ட் கரைசல் அல்டிகைட்டுகளையும் அல்பா-ஐதரொக்சி கீட்டோன்களையும் கண்டறிகின்றது. இதனாலேயே ஃப்ரக்டோசு ஒரு அல்டிகைடு உடைய தாழ்த்தும் வெல்லம் அல்லவென்றாலும் அல்பா-ஐதரொக்சி கீட்டோன் உடைய வெல்லமாக இருப்பதால் பெனடிக்ட் கரைசல் மாற்றத்தைக் காட்டுகின்றது. ஏனெனில் அல்பா-ஐதரொக்சி கீட்டோன் வெல்லங்களை பெனடிக்ட் கரைசலிலுள்ள காரம் அல்டோசுகளான குளுக்கோசு அல்லது மன்னோசு ஆக மாற்றுகின்றது.[2]

கரைசலில் அல்டோசுகள் அல்லது அல்பா-ஐதரொக்சி கீட்டோன் காணப்பட்டால் நீல நிறமான கரைசல் படிப்படியாக பச்சை நிறமாகவும், மஞ்சள் நிறமாகவும், செம்மஞ்சள் நிறமாகவும் இறுதியாக செங்கட்டிச் சிவப்பு நிறமாக மாறுதலைக் காட்டும். கரைசலில் இவ்வெல்லங்கள் அதிகளவில் இருந்தால் முழுமையாக இம்மாற்றம் கிடைக்கப்பெறும். குறைந்த செறிவெனில் இடைப்பட்ட நிறங்களையே கரைசல் காட்டும். 100g நீரேற்றப்படாத சோடியம் காபனேற்று (Na2CO3), 173 g சோடியம் சித்திரேற்று (C3H4OH(COOH)2COONa), மற்றும் 17.3g நீரேற்றப்பட்ட செப்பு சல்பேற்று(CuSO4.5H2O) ஆகியவற்றோடு நீரைக் கலந்து ஒரு லீற்றர் பெனடிக்ட் கரைசல் தயாரிக்கப்படுகின்றது.[3]

இக்கரைசலில் உள்ள Cu2+ அயன்கள் வெல்லங்களால் தாழ்த்தப்பட்டு Cu+ அயனைக் கொடுக்கின்றது. இவ்வயன் நீரில் கரையாத வீழ்படிவாகும் செப்பு(I)ஒக்சைட்டைத் (Cu2O) தருகின்றது. இச்சிவப்பு நிறமே கரைசலில் உள்ள வெல்லத்தைக் காட்டிக்கொடுக்கின்றது. கரைசலின் வெவ்வேறு நிறங்கள் கரைக்கப்பட்ட வெல்லத்தின் வெவ்வேறு செறிவுகளைக் காட்டுகின்றன. பச்சை நிறக் கலங்கல் 0.5% செறிவையும், மஞ்சள் நிறம் 1% செறிவையும், செம்மஞ்சள் நிறம் 1.5% செறிவையும், 2% அல்லது அதற்கு மேற்பட்ட செறிவை சிவப்பு நிற வீழ்படிவும் காட்டுகின்றன.

வெல்லச் சோதனை செய்யும் முறை[தொகு]

ஒருசக்கரைட்டுகளுக்கான பெனடிக்ட் பரிசோதனையில் உணவு அல்ல்து போசணை மாதிரியுடன் தயாரிக்கப்பட்ட பெனடிக்ட் கரைசல் இடப்பட்டு, நான்கு தொடக்கம் பத்து நிமிடங்களுக்கு நீரில் வைத்து கொதிக்கும் வெப்பநிலைக்கு அருகில் வரை சூடாக்கப்படும். கரைசலில் ஏற்படும் மேற்கூறிய நிறமாற்றம் கரைசலில் வெல்லம் உள்ளதைக் காட்டிக் கொடுத்து விடும். சுக்ர்ரோசானது குளுக்கோசு மற்றும் ஃப்ரக்டோசு ஒருசக்கரைட்டுகள் இணைந்து உருவான இருசக்கரைட்டாகும். இவை இணைக்கப்பட்டுள்ள கிளைக்கோசைடிக் பிணைப்பு காரணமாக சுக்ரோசால் தன் மூலக்கூற்று வளையக் கட்டமைப்பைத் திறந்து அல்டிகைட்டை உருவாக்க முடியாது. எனவே சுக்ரோசு (சாதாரண சீனி) ஒரு தாழ்த்தும் வெல்லமல்ல. எனவே நேரடியாக வெல்லச் சோதனைக்குட்படுத்தப்பட்டால் சிவப்பு நிறமாற்றத்தைக் காட்டாது. எனவே இவ்வாறான தாழ்த்தா வெல்லங்கள் ஐதான ஐதரோகுளோரிக் அமிலம் மூலம் நீரேற்றப்பட்டு பின்னர் காரம் ஒன்றின் மூலம் கரைசலை நடுநிலையாக்கி பின்னரே வெல்லச்சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. பெனடிக்ட் கரைசலால் உணவில் உள்ள மாப்பொருளைக் கண்டறிய இயலாது, ஏனெனில் மாப்பொருள் மிக அரிதாகவே இக்கரைசலோடு தாக்கமடையும். மாப்பொருளின் பெரிய மூலக்கூறின் அந்தத்திலேயே Cu2+ ஐத் தாழ்த்தக்கூடிய அல்டிகைடு உள்ளது. எனவே தாக்கம் விளைவை அவதானிக்க முடியாதளவுக்கு மிகவும் மந்தமானது.

பரிசோதனை அவதானிப்பு பெறப்பட்ட முடிவு
நீரில் கரைக்கப்பட்ட உணவு மாதிரி + 3 ml பெனடிக்ட் கரைசல், பின்னர் சில நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து பின்னர் ஆற விடவும். சிவப்பு அல்லது செம்மஞ்சள் அல்லது மஞ்சள் அல்லது பச்சை நிற வீழ்படிவு பெறப்பட்டமை குளுக்கோசு போன்ற தாழ்த்தும் வெல்லம் கரைசலில் உள்ளது.
நீரில் கரைக்கப்பட்ட உணவு மாதிரி + 3 ml பெனடிக்ட் கரைசல், பின்னர் சில நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து பின்னர் ஆற விடவும். மாற்றமில்லை தாழ்த்தும் வெல்லம் கரைசலில் இல்லை

பயன்பாடு[தொகு]

இக்கரைசல் விஞ்ஞான ஆய்வுகூடங்களில் வெல்லப்பரிசோதனையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு வெல்லங்கள் பற்றிக் கற்பிக்கும் போது இக்கரைசல் மூலம் வெல்லங்களை இனங்காணும் முறை பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

சிறுநீருடன் குளுக்கோசு வெளியேறுதலைக் கண்டறிய பெனடிக்ட் கரைசல் பயன்படுத்தப்படுகின்றது. இது நீரிழிவு நோயைப் பரிசோதிக்க சென்ற சில வருடங்களுக்கு முன் பயன்பட்ட முறையாகும். தற்போது நேரடியாக குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைப் பரிசோதித்தலே அதிகம் கையாளப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Benedict, S. R. (1 January 1909). "A Reagent For the Detection of Reducing Sugars". J. Biol. Chem. 5 (6): 485–487. http://www.jbc.org/content/5/5/485.full.pdf. 
  2. "Fehling's Test for Reducing Sugars". Archived from the original on 2008-01-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-26.
  3. Robert D. Simoni, Robert L. Hill, and Martha Vaughan (2002). "Benedict's Solution, a Reagent for Measuring Reducing Sugars: the Clinical Chemistry of Stanley R. Benedict". J. Biol. Chem. 277 (16): 10–11. doi:10.1074/jbc.M110516200. பப்மெட்:11773074. http://www.jbc.org/cgi/content/full/277/16/e5. பார்த்த நாள்: 2015-04-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனடிக்ட்_கரைசல்&oldid=3565260" இலிருந்து மீள்விக்கப்பட்டது